அரசியல்

“ஒவ்வொரு வீட்டிலும் கலைஞரின் திட்டங்கள்.. மக்களுக்கான தலைவர்.. இதுதான் கலைஞர்” : கனிமொழி எம்.பி புகழாரம்!

முத்தமிழறிஞர் கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ‘வெல்லும் தமிழ்ப்பெண்களுக்கு’ நடைபெற்ற நன்றி பாராட்டு விழாவில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி ஆற்றிய உரையின் விவரம்.

“ஒவ்வொரு வீட்டிலும் கலைஞரின் திட்டங்கள்.. மக்களுக்கான தலைவர்.. இதுதான் கலைஞர்” : கனிமொழி எம்.பி புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103-ஆவது பிறந்தநாள் நேற்று சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, தி.மு.க. மகளிரணி சார்பில் ‘வெல்லும் தமிழ்ப்பெண்களுக்கு’ நன்றி பாராட்டு விழா முத்தமிழ்ப் பேரவையின் டி.என். ராஜரத்தினம் கலையரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, நம்முடைய தலைவர் கலைஞர் பிறந்த நாளில் தேர்தல் நேரத்திலே தமிழ்நாடு முழுவதும் எல்லா பகுதிகளிலும், இடங்களிலும் தேர்தல் களப்பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றிய வெல்லும் தமிழ் பெண்களுக்கு நன்றி தெரிவிக்கக்கூடிய வகையிலே மகளிர் அணியின் சார்பிலே இவ்விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். நமக்கு நம்முடைய உரிமைகளுக்காக போராட வேண்டும் என்று சொல்லித் தந்தவர் தலைவர் கலைஞர்.

இந்த சமூகம், பெண்களைச் சுற்றி வடிவமைத்திருந்த அத்தனை கண்காணிப்பையும், வேலிகளையும் உடைத்துக்கொண்டு உங்களுடைய உரிமைகளுக்காக, இலக்குகளுக்காக நீங்கள் வாழ வேண்டும் என்று கூறியவர் தந்தை பெரியார். அதை தனது ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் நிறைவேற்றிக் காட்டிய தலைவர் கலைஞர்.

நாம் எல்லோரும் நம்மை யாரும் பாராட்ட மாட்டார்களா என சிந்தித்து இருப்போம். இன்றைக்கு இந்தப் பாராட்டு விழாவை நடத்துகிறோம் என்றால், வேறு யாரும் நம்மைப் பாராட்டப் போவதில்லை என்பதால் நாம்தான் நம்மைப் பாராட்டிக் கொள்ள வேண்டும். நமது உழைப்பை முதலில் நாம் அங்கீகரிக்க வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணி பெண்கள், ஒவ்வொரு தேர்தலிலும் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து வாக்குக் கேட்டார்கள். ஆனால் இந்த உழைப்பை யாரும் தனியாக அழைத்துப் பாராட்டுவதில்லை. அதனால்தான், யார் பாராட்டினாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி நமது உழைப்பு என்னவென்று நமக்குத் தெரியும் என்ற உணர்வோடு, நம்மை நாமே பாராட்டிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். அதனாலேயே, தலைவர் கலைஞர் பிறந்தநாள் நிகழ்ச்சியில், தமிழ்நாடு முழுவதும் மகளிர் அணியின் சார்பில் இந்தப் பாராட்டு விழாவை நடத்த முடிவு செய்தோம்.

ஒரு குடும்பத்தில் பெண்களின் உழைப்பு எப்படி இருக்கிறது? குடும்பத்தை நடத்துவது, குழந்தைகளை வளர்ப்பது, உறவுகளைப் பேணுவது, பொருளாதார ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் குடும்பத்தைத் தாங்கிப் பிடிப்பது என இவை அனைத்தும் ஒரு பெண்ணின் கடமை என்று மட்டுமே இந்தச் சமூகம் பார்க்கிறது. ஆனால் அவளது உழைப்பை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அவளது உரிமைகளைப் பற்றி பேசக்கூட யாரும் தயாராக இல்லை. அவ்வாறான சூழலில் நமது உரிமைக்காக குரல் எழுப்பியவர் தந்தை பெரியார். அதன்பின், ஆட்சிப் பொறுப்புக்கு வந்த தலைவர் கலைஞர், பெண்களுக்கான உரிமைகளைச் சட்டங்களாகவே உருவாக்கினார். குடும்பத்தில் பெண்கள் செய்யும் எத்தனையோ தியாகங்களை அங்கீகரிக்கும்விதமாக குடும்பச் சொத்தில் பெண்ணுக்கும் பங்கு உண்டு என்ற உரிமையைச் சட்டப்படி உறுதி செய்தார்.

“ஒவ்வொரு வீட்டிலும் கலைஞரின் திட்டங்கள்.. மக்களுக்கான தலைவர்.. இதுதான் கலைஞர்” : கனிமொழி எம்.பி புகழாரம்!

இங்கே பேசும்போது, பலரும் தலைவர் கலைஞர் அவர்களின் திட்டங்கள் ஒவ்வொன்றும் தொலைநோக்கு பார்வையுடன் உருவாக்கப்பட்டவை என்பதை குறிப்பிட்டார்கள். அதிலும், தலைவர் கலைஞர் இல்லையென்றால், நாம் எல்லோரும் இன்று இந்த மேடையில் இருந்திருக்க மாட்டோம் என்பதுதான் உண்மை.

ஏனென்றால், தலைவர் கலைஞர் ஒவ்வொரு சிறு கிராமத்திலும், ஒவ்வொரு பகுதியிலும் பள்ளிக்கூடங்களை உருவாக்காவிட்டால், பெண்களைப் படிக்க அனுப்பும் தைரியம் பெற்றிருக்க மாட்டார்கள். பெண்கள் படிக்க வேண்டும் என்பதற்காகவே திருமண உதவித் திட்டத்தைக் கொண்டு வந்தார். பெண்கள் சமைத்து முடித்து வெளியே வர வேண்டும் என்பதற்காகவே சமையல் எரிவாயு இணைப்பு வழங்கினார்.

அதுமட்டுமின்றி படித்த பெண்கள் சுயமாகச் சிந்திக்க வேண்டும், சுயமாக நிற்க வேண்டும் என்பதற்காக அரசுப் பணிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு உருவாக்கித் தந்தார். இன்று நமது முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அந்த இட ஒதுக்கீட்டை இன்னும் அதிகப்படுத்தி, பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கித் தந்திருக்கிறார். இந்த அத்தனை திட்டங்களும் ஒரே நோக்கத்திற்காக உருவானவை. அது பெண்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராட வேண்டும், தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் என்ற வரிசையில் இந்தப் பெரும்பாரம்பரியத்தைத் கடந்த ஐந்து ஆண்டுகளாக நமது அண்ணன் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி, பெண்களுக்கான ஆட்சியாக, பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் ஆட்சியாக திகழ்ந்தது.

நம்முடைய திமுக அரசு அடிமட்டத்தில் இருக்கும் எங்கள் வீட்டுப் பிள்ளைகள் படிக்க வேண்டும், அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும், அவர்கள் சுயமாக வாழ வேண்டும் என்பதற்காக உழைக்கும் ஆட்சி. இது பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தின் மாற்றத்திற்காகவும் உருவான ஆட்சி. இந்த உணர்வோடு, பெருமையோடு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். இதை எத்தனை சவால்கள் வந்தாலும், எத்தனை தோல்விகள் சந்தித்தாலும் நாம் தலை நிமிர்ந்து சொல்ல முடியும்.

இந்த சமூகத்தில் தலைவர் கலைஞர் அவர்களின் வாழ்க்கையைப் பார்க்கும்போது, அவர் கொண்டு வந்த திட்டங்கள் எண்ணற்றவை. அவற்றை எவ்வளவு நேரம் எண்ணினாலும் முடியாது. இன்றைக்கும், நாளைக்கும், நாளை மறுநாளும் எண்ணிக்கொண்டே இருக்கலாம். அந்த அளவுக்கு விரிவான, அனைவரையும் தழுவிய திட்டங்களை அவர் செய்து தந்திருக்கிறார். முக்கியமாக, இந்தச் சமூகம் ஒதுக்கி வைத்திருந்த, யாரும் கண்டுக்கொள்ளாத பிரிவினரையும் அவர் அரவணைத்தார். மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், பிச்சைக்காரர்கள் என்று ஒதுக்கப்பட்ட அனைவரையும் தனது ஆட்சியில் உள்ளடக்கிய நல்லாட்சியை வழங்கினார். அவர்களுக்கெல்லாம் தகுந்த திட்டங்களை உருவாக்கி, சமூகத்தின் அங்கமாக மாற்ற வேண்டும் என்று சிந்தித்த ஒரே தலைவர் கலைஞர்.

“ஒவ்வொரு வீட்டிலும் கலைஞரின் திட்டங்கள்.. மக்களுக்கான தலைவர்.. இதுதான் கலைஞர்” : கனிமொழி எம்.பி புகழாரம்!

ஆனால், தலைவர் கலைஞர் பற்றி பேசும்போது பாராட்டுகளை விட விமர்சனங்களே அதிகம் வருகின்றன. நான் ரீல்ஸ் பார்க்கும்போது அடிக்கடி வரும் ஒரு காட்சியை இங்கே நினைவுகூர விரும்புகிறேன். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தலைவர் கலைஞர் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், நாம் யாருக்கெல்லாம் நல்லது செய்கிறோமோ, அவர்கள் நமக்கு நன்றியோடு இருப்பார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது என்று பதிலளித்ததை இளைஞர் நினைவுக்கூருவர். அந்த எதிர்பார்ப்பு இல்லாமலேயே, அவர்களை மேம்படுத்துவதுதான் நமது கடமை என்று கலைஞர் கூறியிருந்தார் என்பதைச் சொல்லி, தனது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்தார்.

அந்த இளைஞர் ஒரு முன்னேறிய சமூகத்தைச் சேர்ந்த, முதல் தலைமுறை பட்டதாரி. அவரது குடும்பத்தினர் உனக்கு கல்விக்கான உதவித்தொகை கிடைக்காது, உயர்சாதியைச் சேர்ந்த நீ எதற்கு விண்ணப்பிக்கிறாய்? கலைஞர் உங்களுக்குக் கொடுக்க மாட்டார் என்று தடுத்தார்கள். ஆனாலும் அவர் விண்ணப்பித்ததும் கல்விக்கான உதவித்தொகை கிடைத்தது. மொத்தம் 80,000 ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டதன்மூலம் தனது கல்வியை தொடர்கிறார். அவரது சொந்தக்காரர்கள், குடும்பத்தினர் என யாரும் ஒரு நாளும் கலைஞர் நல்லது செய்தார் என்று சொல்லவில்லை. அவர் இறந்தபோது கூட, நன்றியுணர்வோடு பேசாமல் காழ்ப்புணர்ச்சியோடுதான் பேசினார்கள்.

இறுதியில் என் உறவினர்கள் யாரும் எனக்கு உதவவில்லை. ஆனால் கலைஞர் கொடுத்தார் என இளைஞர் சொன்னார். இதுதான் தலைவர் கலைஞர். எதிர்பார்ப்பு இல்லாமல், நன்றியை எதிர்பார்க்காமல், இந்த மக்களுக்காக உழைத்த ஒரு தலைவர்.

banner

Related Stories

Related Stories