
வரும் ஏப்ரல் 23-ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்த கூட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில், திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் குழுவினர் பேச்சுவார்த்தைக்காக வருகை தந்தனர்.
பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் பேசியதாவது :-
மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியில், சிபிஎம் தொடர்ந்து பயணித்து வருகிறது. 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் சேர்ந்து தொடர்ந்து தேர்தலை சந்திப்பது என்று ஏற்கனவே முடிவு எடுத்து இருந்தோம்.

நேற்று நடைபெற்ற மாநில குழு கூட்டத்தில் 6 என்ற எண்ணிக்கைக்கு உடன்பாடு செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டு இருந்தது. இன்று முதலமைச்சரை சந்தித்து தொகுதி உடன்பாடு தொடர்பாக சந்தித்து பேசினோம். திமுக தலைமையிலான அணி, பெரிய அணி என்பதால் தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் உள்ள சிரமங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த அணியில் நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். 5 என்ற எண்ணிக்கையை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மீண்டும் குழுவுடன் ஆலோசித்து முதலமைச்சரிடம் கூற உள்ளோம். மாநில செயற்குழு கூடி, முதலமைச்சர் வேண்டுகோள் குறித்து பரிசீலிப்போம்.

முதலமைச்சர் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து நிச்சயம் மீண்டும் இதைப் பற்றி பேசுவோம். சில கட்சிகளுக்கு கூடுதல் தொகுதி கொடுத்ததால், தொகுதி பங்கீட்டில் இருக்கும் நெருக்கடிகளை பற்றி முதலமைச்சரே பகிர்ந்து கொண்டார். கடந்த தேர்தலில் எங்கள் கட்சியின் பலம் இருக்கும் மாவட்டங்களில் எங்களுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கட்சி வலுவாக இருக்கும் மாவட்டத்தில் தொகுதி கிடைத்தால் நன்றாக இருக்கும். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கும்.
தொகுதிகளின் எண்ணிக்கையை பொறுத்து கூட்டணியில் நீடிப்போமா, இல்லையா என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடையாது. நாங்கள் கொள்கையில் நீடித்து வருகிறோம். நாங்கள் கொள்கை பூர்வமாக எங்கள் தீர்மானத்தின் அடிப்படையில் இந்த கூட்டணியில் நீடிக்கிறோம்." என்றார்.






