
இந்த ஆண்டு தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அரசியல் வட்டாரமே பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களை தீவிரமாக தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக கூட்டணியே இந்த முறையும் பெருவாரியான வாக்கு வித்தியாசங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வரும் நிலையில், கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த ஒரு சிலர் முயன்று வருகின்றனர். அவற்றையெல்லாம் முறியடித்து திமுக கூட்டணி இப்போதும் ஒற்றுமையாக உள்ளது.

இதனிடையே திமுக தேர்தல் அறிக்கை குழு கடந்த ஜன.19-ம் தேதி கனிமொழி எம்.பி. தலைமையில் தொடங்கப்பட்டு, மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அண்மையில் கழகப் பொருளாளரும், மக்களவை குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த குழுவில் உறுப்பினர்கள் - கழக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு, உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் - அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர்கள் - எம்.பி.க்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், முதல் கட்சியாக தொகுதி பங்கீடு குறித்து இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி (IUML) பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் திமுக குழு மற்றும் IUML கட்சியின் தலைவர் காதர் மொகதீன், பொதுச் செயலாளர் அபூபக்கர், பொருளார் ஷாஜகான், துணை தலைவர் அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து பேட்டியளித்த IUML கட்சியின் தலைவர் காதர் மொகதீன், பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததாக தெரிவித்தார். IUML கட்சியை தொடர்ந்து பிற கட்சிகளுடன் அடுத்து வரும் நாட்களில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.






