
கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான
மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (02-01-2026) திருச்சியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் சமத்துவ நடைப்பயணத்தைத் தொடக்கி வைத்து ஆற்றிய உரையின் விவரம் பின்வருமாறு:
தன்னுடைய பொது வாழ்க்கையில், தமிழ்நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக, தன்னுடைய காலடித்தடம் படாத இடமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, மக்கள் பிரச்சினைகளுக்காக நடைப்பயணம் செய்தவர் நம்முடைய அருமை அண்ணன் வைகோ அவர்கள்!
அவருடைய நெஞ்சுரத்தையும் – ஸ்டாமினாவையும் பார்க்கும்போது, அவருக்கு 82 வயதா; இல்லை, 28 வயதா என்று ஆச்சரியப்படத் தோன்றுகிறது!
ஒரு இளைஞருக்குரிய வேகத்தையும் – ஊக்கத்தையும் - உத்வேகத்தையும் இன்றைக்கு அவரிடம் நாமெல்லாம் பார்க்கிறோம். இளைஞர்களுக்கு நல்வழி காட்டிட, அதுவும் இளைஞர்களுடனே ஒன்றுசேர்ந்து இந்தச் சமத்துவ நடைப்பயணத்தைத் தொடங்கும் அண்ணன் வைகோ அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்! பாராட்டுகள்!
திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரைக்கும், காலந்தோறும் இளைய தலைமுறையினரின் நலனுக்காகவும் – எதிர்காலத்தின் நன்மைக்காகவும் – அவர்களின் வளர்ச்சிக்காகவும் செயலாற்றிக் கொண்டிருக்கும் இயக்கமாக, நமது இயக்கம் இருந்து கொண்டிருக்கிறது!
தள்ளாத 95 வயதில், தளராமல் தொண்டு செய்தவர் தந்தை பெரியார் அவர்கள்! தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும் - பெண்களுக்கும், கல்வி உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும்; அதற்கு, சாதி - மதம் உள்ளிட்ட தடைகள் அகற்றப்பட வேண்டும்; தகர்க்கப்பட வேண்டும் என்று தன்னுடைய இறுதி மூச்சு வரை பாடுபட்டவர் தந்தை பெரியார் அவர்கள்.
அவர் வழிவந்த தலைவர் கலைஞர் அவர்கள், 80 ஆண்டு கால பொதுவாழ்க்கைக்குச் சொந்தமானவர்! சக்கர நாற்காலியில் உட்கார்ந்தவண்ணம், ஓய்வில்லாமல் உழைத்தார். 16 வயதில் மாணவநேசன் பத்திரிகையைத் தொடங்கி, இளைஞர்களுடன் உரையாடிய அவர், 89 வயதிலும் ஃபேஸ்புக் – ட்விட்டரில் இளைஞர்களுடன் அரசியல் பேசினார்.
அப்படிப்பட்ட திராவிட இயக்க பல்கலைக்கழகத்தில் படித்தவர்தான், அண்ணன் வைகோ அவர்கள். ஏன், இந்த ஸ்டாலினும் அதே பல்கலைக்கழக மாணவன்தான்!

அண்ணன் வைகோ அவர்கள், தலைவர் கலைஞருக்கு அருகிலேயே இருந்து அரசியல் கற்றுக் கொண்டவர். தலைவர் கலைஞர் அவர்களைப் பற்றி சொல்லும்போதெல்லாம், “இமைப்பொழுதும் நம் நெஞ்சை விட்டு அகலாத தலைவர் கலைஞர்” என்று அடிக்கடி குறிப்பிட்டுச் சொல்வார். அப்படிப்பட்ட தலைவர் கலைஞர் அவர்கள், மதுரையில் இருந்து, திருச்செந்தூருக்கு “நீதி கேட்டு நெடும்பயணம்” நடத்திய நேரத்தில், அவருடைய கால்கள் கொப்பளிக்க நடந்து சென்றபோது, அவருக்குப் பாதுகாவலராக அவருடனே நடந்தவர்தான் அண்ணன் வைகோ அவர்கள்!
இன்றைக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர் படையுடன் ‘சமத்துவ நடைப்பயணம்’ நடத்துகிறார்! இந்த நடைப்பயணத்தில் பங்கேற்கும் பலரையும் நேரில் அவரே தேர்வு செய்திருக்கிறார். அதுவும் எவ்வாறு தெரியுமா? இந்த இளைஞர்கள் அனைவரும், பெற்றோரின் சம்மதத்தைப் பெற்றிருக்கிறார்களா – இதனால் அவர்களின் கல்லூரித் தேர்வு ஏதாவது பாதிக்குமா - அவர்களின் உடல்திறன் என்ன – மனஉறுதி எவ்வாறு இருக்கிறது – ஆர்வம் எவ்வாறு இருக்கிறது என்று அனைத்தையும் உறுதி செய்து கொண்டுதான், இந்த இளைஞர் படையை அவர் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
போதைப் பொருள் ஒழிப்பு – சாதி, மத மோதல் தடுப்பு உள்ளிட்ட நாட்டுக்குத் தேவையான கருத்துகளை வலியுறுத்தி அண்ணன் வைகோ அவர்கள் தொடங்கியிருக்கும் இந்தச் சமத்துவ நடைப்பயணம் மாபெரும் வெற்றி பெற வேண்டும். நிச்சயமாக வெற்றி பெறத்தான் போகிறது.
இது மாதிரியான பயணங்களால் என்ன பயன் என்று சிலர் கேட்கலாம்? காந்தியின் நடைப்பயணமும் – மாவோ-வின் நீண்ட பயணமும் வரலாற்றில் புரட்சி ஏற்படுத்தியிருப்பது போன்று, அந்தத் தாக்கத்தை அவர்கள் உணர வேண்டும். இப்படியான, நடைப்பயணங்கள்தான், தலைவர்கள் மக்களிடம் சென்று எளிய வகையில் – சுலபமான முறையில் நேரடியாக தங்களுடைய கருத்துகளைச் சொல்ல முடியும்! அந்த நடைப்பயணத்தின் தேவை குறித்தும் – அதிலுள்ள நியாயங்கள் குறித்தும் மக்கள் பேசத் தொடங்குவார்கள். மக்கள் பேச பேசதான், அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்!
திராவிட இயக்க மேடைகளிலும் – நாடாளுமன்றத்திலும், தமிழ்நாட்டுக்காக - தமிழர்களுக்காக - அவர்களின் உரிமைகளுக்காக கர்ஜித்த அண்ணன் வைகோ அவர்கள், முதுமையை முற்றிலுமாகத் தூக்கி எறிந்துவிட்டு இந்த நடைப்பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்.
இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப் பொருட்களை நாம் நிச்சயம் ஒழிக்க வேண்டும். அதில் எந்தக் கருத்து மாறுபாடும் – வேறுபாடும் கிடையாது. போதையின் பாதையில் இருந்து இளைஞர்களைக் காக்க வேண்டும். அதற்காக, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து கொண்டு இருக்கிறது. அதன் மூலமாக, முழுமையாக அல்ல; ஓரளவிற்கு பலனும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ரொம்ப முக்கியமானது, அந்தப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள், அதன் பாதிப்புகளை உணர்ந்து, அந்தப் பழக்கத்தை கைவிட வேண்டும். அவர்களுடன் இருப்பவர்கள், அவர்களைத் திருத்த வேண்டும்.
போதைப் பொருட்களின் புழக்கம் என்பது, மிகப்பெரிய நெட்வொர்க். இந்த நெட்வொர்க்கை அழிக்க, மாநில அரசுகளும் – ஒன்றிய அரசும் இணைந்து செயல்பட வேண்டும்.
ஏராளமான போதை வஸ்துகள் நாட்டுக்குள் வருகின்றன... அதிகப்படியான போதைப் பொருட்கள் எந்தெந்தத் துறைமுகங்கள் வழியாக நாட்டுக்குள் நுழைகிறது என்று நாம் செய்திகளில் பார்க்கிறோம், படிக்கிறோம். இந்த நுழைவு வாயில்களை நாம் அடைத்தாக வேண்டும்! நாட்டின் எல்லைக்குள் போதைப் பொருட்கள் வருவதையும் - மாநிலம்விட்டு மாநிலம் கடத்தப்படுவதையும், ஒன்றிய அரசின் முகமைகள் தீவிரமாகக் கண்காணித்து, அதை தடுக்க வேண்டும். அதற்கு அனைத்து மாநில அரசுகளும் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டும்.
எடுத்துக்காட்டுக்காக நான் சொல்கிறேன், கடந்த சில மாதங்களில், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களிலிருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமான போதை மாத்திரைகளைப் பிடித்திருக்கிறோம். இந்தக் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, ஹரியானா போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
அதேபோன்று, இன்னும் சில வழக்குகளில், குற்றவாளிகள், நைஜீரியா, செனகல் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நெட்வொர்க்கை ஒழிக்க அனைவரும் கை கோக்க வேண்டும்.

நம்மைப் பொறுத்தவரைக்கும், போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் துறைகள், ஒன்றிய அரசின் துறைகளுடனும், அண்டை மாநிலக் காவல் துறையினருடனும் முழு ஒத்துழைப்பு கொடுத்து செயல்பட்டு வருகிறது என்பதை நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
போதை ஒழிப்பு என்பது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாக இருக்க வேண்டும். முக்கியமாக, கலைத் துறையைச் சேர்ந்தவர்கள் பொறுப்புணர்ச்சியுடன் தங்களின் படைப்புகளை உருவாக்க வேண்டும். போதையின் தீமைகளை சொல்வதில் தவறில்லை; அதை விதந்தோதுவது (குளோரிஃபை செய்வது) ஒரு தலைமுறையையே சீரழித்துவிடும்.
அதேபோன்று, பெற்றோர்கள் தங்கள் குழந்தை மேல் பாசம் காண்பிக்க வேண்டும்தான். அதை மறுக்க முடியாது. அதற்காக, அவர்கள் பாதை மாறிப் போகும்போது வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது. யூடியுப், இன்ஸ்டா ரீல்ஸ் மூலமாக எளிதில் கிடைக்கும் பணம், பிள்ளைகளை தவறான பாதையில் கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள்தான் அதிகம்.
எனவே, குழந்தைகளைப் பொறுப்புடன் வளர்க்க வேண்டும் என்று பெற்றோர்களை கேட்டுக் கொள்கிறேன். முக்கியமாக, அம்மா, அக்கா, தங்கச்சி என்று வீட்டில் இருக்கும் சொந்தங்கள், நம்முடைய வீட்டுப் பிள்ளைகள் வழிதவறி செல்லாமல் இருப்பதைக் கண்காணிக்க வேண்டும். ஒருவருக்கு ஒருவர் மனசு விட்டுப் பேச வேண்டும். மனசு விட்டுப் பேசினாலே பாதி பாரம் குறைந்துவிடும். தவறான பாதைக்குச் செல்ல வேண்டிய தேவை நிச்சயமாக இருக்காது.
அதேபோன்று, ஆசிரியர்கள், சமூக வலைத்தளப் பிரபலங்கள் என்று அனைவருமே போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வைத் தொடர்ந்து பரப்ப வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்து இன்றைக்கு நாட்டில் நிலவும் முக்கியமான பிரச்சினை என்றால், அது சாதி – மத மோதல்கள்தான். ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்ட பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் கூட, இப்போது வெறுப்புப் பேச்சுகளை பேசியும், இரு பிரிவினருக்கு இடையே மோதலைத் தூண்டும் விதமாகவும் செயல்படுவதைப் பார்க்கிறோம். தனிப்பட்ட முறையிலான அவர்களின் கொள்கைகளுக்காக, நம்முடைய இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையும் - அமைதியையும் சீரழிக்கும் நாசகார வேலையில், அவர்கள் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

நாட்டில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், ஆதி திராவிடர்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் என்று அனைவரும் அச்சத்தில் வாழும் ஒரு நிலைமை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.
இப்போது அண்மையில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. அந்தச் சமயத்தில் நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்த தாக்குதல்களைப் பற்றி அனைவருக்கும் தெரியும். சில ஆண்டுகளுக்கு முன்னர், நம்முடைய நாட்டில் இந்த நிலைமை இருந்ததா?
ஊரே ஒன்றாக சேர்ந்து மகிழ்ச்சியாக இருந்த காலம் கடந்து, ஒருவருக்கு ஒருவரை எதிரியாகக் கட்டமைக்கும் வேலையை, பிளவுவாத சக்திகள் இன்றைக்குத் தெளிவாகச் செய்து கொண்டு இருக்கிறார்கள். அன்பு செய்ய சொல்லித் தர வேண்டிய ஆன்மீகத்தை, சில கும்பல்கள் வம்பு செய்வதற்காகப் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில்தான் அண்ணன் வைகோ அவர்கள், இந்தச் சமத்துவ நடைப்பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்.
திராவிட இயக்கத்திற்குப் பல்வேறு திருப்புமுனைகளைக் கொடுத்த நகர்தான், இந்த திருச்சி நகர். அண்ணன் வைகோ அவர்களின் இந்த நடைப்பயணமும் நிச்சயமாகப் புது வரலாற்றைப் படைக்கும்!
இந்த நடைப்பயணத்தின் தாக்கத்தை, சமூக வலைதளங்களுக்கும் கொண்டு சேர்த்து, இளைஞர்களிடையே பேசுபொருள் ஆக்க வேண்டியது ஊடகங்கள் மற்றும் நம் அனைவரின் கடமை!
மதுபோதையையும் - அதைவிட ஆபத்தான மதவாத அரசியல் போதையையும் தமிழ்நாட்டுக்குள் நுழையவிடாமல் தடுத்திட, நாமெல்லாம் ஒன்று சேர வேண்டும். அண்ணன் வைகோ அவர்களின் நடைப்பயணம் நிச்சயமாகப் புது எழுச்சியை உருவாக்க இருக்கிறது!
அண்ணன் வைகோ அவர்களின் இந்தச் சமத்துவ நடைப்பயணம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். அதேநேரத்தில், உரிமையுடன் அவரிடத்தில் உங்கள் அனைவரின் சார்பாக ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன். உங்களின் நோக்கம் பெரிது என்றாலும், உங்களின் உடல்நலனும் எங்களுக்குப் பெரிது. எனவே, இந்தப் பயணத்தை நீங்கள் கவனமாக மேற்கொள்ள வேண்டும்.
அதுமட்டுமல்ல, இதுமாதிரியான கடுமையான நடைப்பயணங்களை இனி நீங்கள் மேற்கொள்ளக் கூடாது என்பது என்னுடைய அன்பான வேண்டுகோள். நீங்கள் கட்டளையிட்டால் அதைச் செய்வதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள். அதனால்தான் அந்த உரிமையோடு கேட்கிறேன். நீங்கள் உங்கள் உடல்நலனைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று என்னுடைய வேண்டுகோளை இந்த நேரத்தில் உரிமையுடன் கேட்டுக் கொண்டு, உங்கள் பயணம் வெற்றிபெற வாழ்க… வாழ்க…






