
ஒன்றிய பா.ஜ.க அரசு, எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அரசியல் செய்து வருகிறது. இதனால் ஆளுநர்கள் மாநில அரசுகளின் முடிவுகளில் திட்டமிட்டே தலையிட்டு, திட்டங்களுக்கு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.
அதிலும் குறிப்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர்கள் இழுத்தடித்து வருகிறார்கள். மாநில அரசுகளின் ஜனநாய உரிமைகளில் ஆளுநர்கள் குறுக்கீடு செய்து வருகிறார்கள்.
அப்படிதான் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், காழ்புணர்ச்சியுடன் நடந்து கொண்டு வருகிறார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநர், குடியரசு தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, இத்தீர்ப்பு குறித்து 14 கேள்விளை எழுப்பி உச்சநீதிமன்றத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மனுத் தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கில் ஆளுநர்கள் காலவரையறை இல்லாமல் மசோதாக்களை நிலுவையில் வைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்த நிலையில், ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என்று கூறியது.
இதனிடையே இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தனது இறுதி பணிக்காலத்தை நிறைவு செய்த நிலையில், அவரிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "நீதிமன்றம் அரசியல் சாசனத்தை திருத்த முடியாது. அதே நேரம் ஆளுநர்கள் கால வரம்பு இல்லாமல் மசோதாக்களை நிலுவையில் வைக்க முடியாது. அப்படி தாமதம் செய்தால் மாநில அரசுகள் நீதிமன்றங்களை நாடி தீர்வு பெறலாம். இதனை குடியரசு தலைவர் கேள்வி விவகாரத்தில் தெரிவித்துள்ளோம்" என்று கூறினர்.






