
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றதுமுதல் பள்ளிக் கல்வித்துறையில் எண்ணற்ற பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு நான்கரை ஆண்டுகளில் தமிழ்நாடு கல்வி வளர்ச்சியில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. அதன் விவரம் ஒரு பார்வை.
இல்லம் தேடிக் கல்வித்திட்டம்
திராவிட மாடல் அரசின் பள்ளிக் கல்வித் துறையில் கொரோனா காலக் கற்றல் இடைவெளியைக் குறைத்திட 19.10.2021 அன்று “இல்லம் தேடிக் கல்வி” திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு 2021-22 முதல் 2024–25 ஆம் கல்வியாண்டு வரை ரூ,660.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 1.65 இலட்சம் தன்னார்வலர்கள் மூலம் 95.97 இலட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். 2024–2025 ஆம் ஆண்டில் 50,000 இல்லம் தேடிக் கல்வி மையங்கள் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வரையில் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 7.97 இலட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.
வாசிப்பு இயக்கம்
அன்றாடம் வாசிப்புப் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வாசிப்பு இயக்கம் ஒரு முன்னோடித் திட்டமாக 11 மாவட்டங்களில் 11 ஒன்றியங்களில் தொடங்கப்பட்டு, 914 அரசு பள்ளிகளில் 4 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையுள்ள 66,6 18 மாணவர்கள் பயனடைந்தனர்.
கோடை விடுமுறைக் காலத்தில், குழந்தைகளிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கிலக் கதைகள் அடங்கிய தொடர் வாசிப்பு (ரீடிங் மாரத்தான்’) நிகழ்ச்சி நடைபெற்று அதன்மூலம் வாசிப்புப் பழக்கத்தை வழக்கப்படுத்திக்கொள்ள வழிகாட்டப்பட்டது. மாணவர்களின் கற்பனைத்திறன், படைப்பாற்றல் திறன், சிந்திக்கும் திறன்களை வெளிக்கொணரும் விதமாக இல்லம் தேடிக் கல்வி மையங்களில் குறும்படக் கொண்டாட்டம் நடத்தப்பட்டு மாணவர்கள் எழுச்சி பெற்றனர்.
எண்ணும் எழுத்தும் திட்டம்
1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளிடையே அடிப்படைக் கல்வியறிவு மற்றும் எண்ணறிவை மேம்படுத்தவும், ஒவ்வொரு குழந்தையும் 2025 ஆம் ஆண்டுக்குள் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண்கணிதத் திறன்கள் அடைவதை உறுதி செய்யவும், “எண்ணும் எழுத்தும்” திட்டம் தொடங்கப்பட்டது.
1 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கு நிலை வாரியான (அரும்பு, மொட்டு, மலர்) பயிற்சி நூல்கள், ஆசிரியர்களுக்கு விரைவுத் துலங்கல் குறியீட்டுடன் கூடிய ஆசிரியர் கையேடுகள் போன்றவை அளிக்கப்பட்டுள்ளன. எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம் 37,767 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 25.08 இலட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
குழந்தைகள் அணுகக்கூடிய மொழியில் புத்தகங்கள் நுழை, நட, ஓடு, பற எனும் நான்கு தனித்தனி வாசிப்பு நிலைகளாக வகைப்படுத்தப்பட்டு, 123 புத்தகங்கள் மற்றும் 1 வாசிப்பு இயக்கக் கையேடு அச்சிடப்பட்டு அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 44.50 இலட்சம் மாணாக்கர்கள் பயன் பெற்று வருகின்றனர்.
உள்ளடக்கிய கல்வி:
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களைச் சிறப்புப் பயிற்றுநர்கள் மூலம் அடையாளம் காணவும், அதன் அடிப்படையில் தக்க சிறப்புக் கல்வி வழங்கவும், "நலம் நாடி செயலி" வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
2024-25 கல்வியாண்டில் பள்ளியிலேயே ஆதார் திட்டத்தின் மூலமாக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 76,56,074 மாணவர்களுக்கு ஆதார் புதுப்பித்தல் மற்றும் புதிய ஆதார் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள 36,91,318 மாணவர்களுக்கு ஆதார் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
38 மாதிரிப் பள்ளிகள்
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பள்ளி வீதம் மொத்தம் 38 மாதிரிப் பள்ளிகள் ரூ.352.42 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாதிரிப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் பலர் பல்வேறு முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ளனர்.
28 தகைசால் பள்ளிகள்
மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் கற்றல் எல்லைகளை விரிவுபடுத்த இப்பள்ளிகள் தளமாக விளங்குகின்றன. 28 மாவட்டங்களில் மாவட்டத்திற்கு ஒரு பள்ளி வீதம், 28 பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக ரூ.100.82 கோடி செலவில் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
கலைத் திருவிழா
குழந்தைகளிடம் மறைந்திருக்கும் கலை உணர்வுகளை வெளிக்கொணரும் நோக்கில் பள்ளிகளில் கலைத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. 2022-2023 ஆம் ஆண்டில் போட்டிகள் நடத்தப்பட்டு, 2024–25 ஆம் கல்வியாண்டு முதல் இத்திட்டம் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
2022-23 ஆம் ஆண்டில் 1759 மாணவ மாணவியர்களும், 2023-24ஆம் ஆண்டில் 1418 மாணவ மாணவியர்களும், 2024-25 ஆம் ஆண்டில் 1334 மாணவ மாணவியர்களும் மாநில அளவில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலையரசன், கலையரசி விருதுகள், சான்றிதழ்கள் மற்றும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்
பள்ளிகளில் ஆய்வகங்கள் மூலம் மாணவர்களின் ஆய்வுத் திறன்கள் மேம்படுத்தப்படுகின்றன. அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.519.73 கோடி மதிப்பீட்டில் 8,209 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் (Hi-Tech Lab) அமைக்கப்பட்டுள்ளன.
திறன்மிகு வகுப்பறைகள்
அரசுப் பள்ளிகளில் பயிலும் 16,77,043 மாணவர்கள் பயனடையும் வகையில் ரூ.455.32 கோடி செலவில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் (Smart Classroom) அமைக்கப்பட்டுள்ளன.
தொழிற்கல்வி பாடத்திட்டம் மறுசீரமைப்பு
2021-22 ஆம் கல்வியாண்டு முதல் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புக்கான சீரமைக்கப்பட்ட தொழிற்கல்வி பாடத்திட்டம் மற்றும் பாடப் புத்தகங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு 60,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகின்றது. மேலும் தொழிற்கல்வி மாணவர்களுக்கான துறை சார் அகப்பயிற்சி (Internship) ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு அகப்பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.
2022-23 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் தொழிற்கல்வி கற்பிக்கும் 726 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு மறுசீரமைக்கப்பட்ட பாடத்திட்டங்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி, நடத்தப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்களுக்குக் கைக்கணினிகள்
79,723 இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.81 கோடி செலவில் கைக்கணினிகள் (Tablet) வழங்கப்பட்டுள்ளன.
தரமுயர்த்தப்பட்டுள்ள பள்ளிகள்
மாணவர்களின் நலனுக்காக 2023-24 ஆம் கல்வியாண்டில், 4 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 6 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டன. 4,989 இடைநிலை ஆசிரியர், 5,154 பட்டதாரி ஆசிரியர் மற்றும் 3,876 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 14,019 ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் நியமனம் செய்யப்பட்டனர்.
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்
பள்ளிகளில் கட்டமைப்புகளை மேம்படுத்திட உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின்கீழ் 2022-23 மற்றும் 2023-24ஆம் கல்வியாண்டுகளில் 614 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.1087.76 கோடியும், 2,455 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.800 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2,455 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும், 391 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்கள் மற்றும் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
மேலும் 2024–25 ஆம் கல்வியாண்டில் 440 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட ரூ.745.27 கோடியும், பராமரிப்புப் பணிகளுக்கென ரூ.200 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 526 ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.284 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வானவில் மன்றம்
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடையே அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகியவற்றில் ஆர்வத்தையும் திறனையும் தூண்டும் வகையில் நடமாடும் அறிவியல் ஆய்வகத் திட்டம் (வானவில் மன்றம்) ரூ.11.69 கோடி செலவில் 33.50 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பேராசிரியர் அன்பழகன் விருது
கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி எனப் பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் பெயரில் விருது வழங்கும் திட்டம் 2023-24 ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது
அரசின் திட்டங்கள் அனைத்தையும் சிறப்பாகச் செயல்படுத்தும் 100 தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயத்துடன் வழங்கப்படுகிறது.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகளின் உயர்கல்விச் செலவினத்திற்கான
உதவித் தொகை ரூ.50,000/- ஆக உயர்த்தப்பட்டு, 2023-24 ஆம் ஆண்டில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தகுதியான 28 மாணவ/மாணவியர்களுக்குக் கல்வி உதவித் தொகையாக ரூ.12,95,000/- வழங்கப்பட்டது.
கணினி அறிவியல் பாட தனிக் கட்டணம் ரத்து
2022-23 ஆம் கல்வியாண்டு முதல் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாகப் பயிலும் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் தனிக் கட்டணம் ரூ.200/- இரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுதோறும் ஏறத்தாழ 3.5 இலட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர்.
மகிழ் முற்றம்
அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களிடையே தலைமைப் பண்பை வளர்க்கும் வகையில், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் பெயர்களில் மாணவர் குழுக்கள் அமைத்து, மகிழ் முற்றம் எனும் திட்டம் 2024-25 ஆம் கல்வியாண்டு முதல் 37,470 அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.
ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை திட்டம்
ஆசிரியர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்வதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கென, தலா ரூபாய் 1,50,000/- ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 38 மாவட்டத்திற்கும் ஆசிரியர் நல நிதியிலிருந்து ரூபாய் 57 இலட்சம் அனுமதித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.
சாரண சாரணியர் இயக்க வைரவிழா
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, சாரண, சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி (Jamboree) 28.1.2025 முதல் 3.2.2025 முடிய திருச்சி மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த 20,000 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஊக்கப்படுத்திட உலக அளவிலும், தேசிய அளவிலும் கல்விச் சுற்றுலா
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளி அளவில் கல்வி மற்றும் இணைச் செயல்பாடுகளான மன்றச் செயல்பாடுகள், நூல் வாசிப்பு, நுண் கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்கப்படுத்திட உலக அளவிலும், தேசிய / மாநில அளவில் புகழ்பெற்ற இடங்களுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல ஆண்டு தோறும் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்தார்கள். இத்திட்டத்தின் கீழ், மாணவர்கள் மலேசியா, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், ஹாங்காங், ஆகிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
2024–25 ஆம் கல்வியாண்டில் கனவு ஆசிரியர் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 52 ஆசிரியர்கள் 23.10.2024 முதல் 28.10.2024 வரை பிரான்சு நாட்டிற்குச் சர்வதேசக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். 325 ஆசிரியர்கள் டேராடூனுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
தமிழ்ப் புதல்வன் திட்டம்
இத்திட்டத்தின்கீழ் 6 முதல் 12 வகுப்பு வரை அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் பயின்ற மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2024-2025 ஆம் கல்வியாண்டில் 3.28 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
புதுமைப்பெண் திட்டம்
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியைக் கற்கும் காலத்தில் மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் 2022-23 ஆம் கல்வியாண்டில் 2,09,365 மாணவியர்களுக்கும்; 2023-24ஆம் கல்வியாண்டில் 2,73,596 மாணவியர்களுக்கும்; 2024-25ஆம் கல்வியாண்டில் 4,13,072 மாணவியர்களுக்கும் மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து உயர்கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கும் ரூ.1,000 வழங்கப்படுகிறது.
கல்வி வளர்ச்சிக்கு இதழ்கள்
தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு “ஊஞ்சல்” இதழும், உயர்வகுப்பு மாணவர்களுக்கு “தேன்சிட்டு” இதழும்; ஆசிரியர்களுக்கான சிறந்த கற்றல் கற்பித்தல் முறைகளைப் பரிமாறிக் கொள்ள “கனவு ஆசிரியர்” என்ற மாத இதழும், ரூ.7.15 கோடி மதிப்பீட்டில் வெளியிடப்பட்டுள்ளன.
நம்ம ஸ்கூல், நம்ம ஊர் பள்ளி
பள்ளி வளர்ச்சிக்குப் பொதுமக்கள் பங்களிப்பை ஊக்கப்படுத்திடும் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்திற்கு தனித்துவமாக ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் இதுவரை தமிழ்நாடு முழுவதும் உள்ள 400 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுடன் இணைந்து, 658.67 கோடி ரூபாய்க்கு மேல் திரட்டி, அரசுப் பள்ளிகளில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
மணற்கேணி
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைப்படி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக ‘மணற்கேணி’ என்ற டிஜிட்டல் கல்வித் தளம் உருவாக்கப்பட்டு, 2023 ஜூலை 25 அன்று மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்கள். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர்தரமான டிஜிட்டல் உள்ளடக்கங்களை வழங்குவதன் வாயிலாக, இந்தச் செயலி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உதவுகிறது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப் பகுதிகள் அனைத்திலும் செயல்படும் அனைத்து அரசுத் தொடக்கப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளிலும் பயிலும் மாணவ / மாணவியருக்கு காலை உணவு வழங்கும் ஒரு முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2024–25 ஆம் கல்வியாண்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
தமிழ்வழிக் கல்வி மாணவர்கள்
தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்கும் வண்ணம் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உபகரணங்கள், பாடநூல், நோட்டு புத்தகம் போன்ற நலத்திட்ட உதவிகள், அரசு நிதியுதவின்றிச் செயல்படும் தனியார் சுயநிதி பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்புவரை தமிழ் வழியில் பாடங்களைப் பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தனியார் சுயநிதி பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் 49,498 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
தனியார் பள்ளிகளுக்குத் தொடர் அனுமதி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தனியார் பள்ளிகளுக்கான அனுமதி / தொடர் அங்கீகார ஆணை வழங்குதல் ஆகியவை இணைய வழியாக மேற்கொள்ளும் வகையில், 31.12.2022 அன்று தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறைப்படுத்துதல் இணைய முகப்பு (Regulatory Compliance Portal) மற்றும் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுச் செயலி (Inspection App) தொடங்கி வைத்தார்கள்.
குறுஞ்செய்தி மூலம் மாணவர்களுக்குத் தேர்வு முடிவுகள்
10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு, இரண்டு தேர்வு முடிவுகளும் ஒரே நாளில் ஏறத்தாழ 17.50 இலட்சம் மாணாக்கர்களுக்கு குறுஞ்செய்தியாகவும் / இணையதளத்திலும் 2022 ஆம் ஆண்டுமுதல் வெற்றிகரமாக வெளியிடப்படுகிறது.
தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு
பள்ளி மாணவர்களின் தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்தும் வகையில், 2022-23 ஆம் கல்வியாண்டு முதல் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு நடத்தப்பட்டு 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வில் 500 மாணவர்கள், 500 மாணவியர்கள் உள்ளிட்ட மொத்தம் 1,000 மாணாக்கர்கள் தெரிவு செய்யப்பட்டு ஊக்கத்தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மாதம் ரூ.1,000/- வீதம் வழங்கப்படுகிறது.
இணையவழியில் சான்றிதழ்கள் பெறும் வசதி
டிசம்பர் 2023 முதல் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களின் இரண்டாம் படி, மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல், புலப்பெயர்ச்சி சான்றிதழ்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான தமிழ் வழியில் பயின்றமைக்கான சான்றிதழ்கள் இணையவழியில் பெறும் வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நவம்பர் / டிசம்பர் 2024–ல் ஃபெஞ்சல் புயல் மற்றும் வெள்ளத்தால் மதிப்பெண் சான்றிதழ்களை இழந்த 484 பேருக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் கட்டணமின்றி உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் விடைத்தாள் நகல்
மேல்நிலை பொதுத்தேர்வு மாணாக்கர்களுக்கு நடைமுறையிலிருக்கும் விடைத்தாள் நகல் வழங்கும் நடைமுறை 2004 மார்ச் முதல் பத்தாம் வகுப்பு மாணாக்கர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
மதிப்பீட்டுப் புலம்
பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக ரூ.40 இலட்சம் செலவில் மாநில மதிப்பீட்டுப் புலம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமும் (IIT-Madras) சீடாக் (CDAC) நிறுவனமும் இணைந்து உருவாக்கிய மென்பொருளைப் பயன்படுத்தி அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அந்தந்தப் பள்ளியின் ஆசிரியர்களே வினாத்தாள்களைத் தயாரித்து மாணவர்களுக்குத் தேர்வு நடத்தி வருகின்றனர். 2022-23 ஆம் கல்வியாண்டில் இருந்து மாநில மதிப்பீட்டுப் புலம் உயர்தொழில் நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து 6029 அரசுப் பள்ளிகளிலும் 25 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இணைய வழி வினாடி வினா நிகழ்வுகளை நடத்தி வருகிறது.
திறன் மேம்பாட்டுப் பயிற்சி
பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் 12,000 அலுவலர்களுக்கு நாட்டின் தலைசிறந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் உதவியுடன் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு கற்பித்தல் திறன் மற்றும் மாணவர்களின் கற்றல் திறன் ஆகியவற்றை மேம்படுத்திடும் பொருட்டு, 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என 1,53,000 பேருக்கு குறுவளமைய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
கல்வித் தொலைக்காட்சி
1 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்துப் பாடங்களையும் காணொலிகளாக உருவாக்கி கல்வித் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்து வருகிறது. மெய்ந்நிகர் ஒளிப்பதிவுக்கூடம்: நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, காணொலிகள் தயாரிப்பதற்காக, மெய்ந்நிகர் ஒளிப்பதிவுக்கூடம் உள்ளிட்ட 5 உயர்தொழில்நுட்பப் படப்பதிவுக்கூடங்கள் மற்றும் ஒரு ஒலிப்பதிவுக்கூடம் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இக்காணொலிகள் மூலம் 58,721 பள்ளிகளில் உள்ள 1,23,73,598 மாணவர்களும் 5,32,909 ஆசிரியர்களும் பயன்பெறுவர்.
97 வட்டாரக் கல்வி அலுவலர்கள் முதுகலை ஆசிரியர்கள் நியமனம்
2021–22 ஆம் ஆண்டில் 97 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு இணைய வழியாகத் தேர்வுகள் நடத்தப்பட்டு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 2023–24 ஆம் ஆண்டில் 33 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 / கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய பணியிடங்களுக்குக் கணினி வழியாக போட்டித்தேர்வு நடத்தப்பட்டு, 3,043 முதுகலை ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுப் பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கான தேர்வுகள் இணையவழியில் 14.10.2022 முதல் 19.10.2022 வரை நடத்தப்பட்டு, 21543 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றனர்; தாள் 2-க்கான கணினி வழித் தேர்வுகள் 3.2.2023 முதல் 15.02.2023 வரை நடத்தப்பட்டு, அதில் 16090 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ்களின் மறுபிரதி சான்றிதழ்கள் 17.7.2023 முதல் இணைய வழியில் இ-சேவை மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஜனவரி 2025 வரை 9113 சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
3192 பட்டதாரி ஆசிரியர் / வட்டார வள மைய பயிற்றுநர் பணியிடங்களுக்கு பணிநாடுநர்களை தெரிவு செய்வதற்கான தேர்வு 4.2.2024 அன்று நடத்தப்பட்டு, தகுதியான பணிநாடுநர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 2,768 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்குப் பணிநாடுநர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்வு 21.7.2024 அன்று நடத்தப்பட்டுள்ளது.
2025 டிசம்பர் மாதத்திலும் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடைப்பெற்றுள்ளது.
கலைஞர் நூற்றாண்டு நூலகம்
மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரில் சர்வதேசத் தரத்திலான “கலைஞர் நூற்றாண்டு நூலகம்” ரூ.218.19 கோடி செலவில் மதுரையில் அமைக்கப்பட்டு; 3,64,521 புத்தகங்களுடன் செயல்பட்டு வருகிறது. 2024–25 ஆம் ஆண்டில் 8,36,260 வாசகர்கள் இந்நூலகத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.
புத்தகக் கண்காட்சிகள்
புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக ஊக்குவிக்க சென்னை புத்தகக்கண்காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 2022–23 ஆம் கல்வியாண்டு முதல் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இலக்கியத் திருவிழாக்கள்
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற நதி நாகரிக மரபு அடிப்படையில், திருநெல்வேலி மாவட்டத்தில் பொருநை, கோவை மாவட்டத்தில் சிறுவாணி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரி, மதுரை மாவட்டத்தில் வைகை, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை இலக்கியத் திருவிழாக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.2.18 கோடி நிதி ஒதுக்கீட்டில் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளன.
இளைஞர் இலக்கிய விழா
2023-2024 ஆம் ஆண்டு முதல் இலக்கியத் திருவிழாக்களுடன் கூடுதலாக இளைஞர் இலக்கிய விழா ஆண்டுதோறும் ரூ.30 இலட்சம் செலவில் நடத்தப்பட்டு வருகிறது.
சிறந்த கற்போர் மையங்களுக்கு விருதுகள்
வயது வந்தோர் கல்வித் திட்டச் செயல்பாடுகளைச் சிறப்பாகச் செயல்படுத்திய 228 சிறந்த கற்போர் மையங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கங்களை உள்ளடக்கிய மாநில எழுத்தறிவு விருது 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டது.
புதிய எழுத்தறிவுத் திட்டம்
15 வயதுக்குமேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத நபர்களுக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வியை வழங்கும் பொருட்டு 2022–23 ஆம் ஆண்டு முதல் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ரூ.9.83 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி 15 இலட்சம் கற்போர் தங்களின் அடிப்படை எழுத்தறிவைப் பெற்று பயனடைந்துள்ளனர்.
சிறைவாசிகளுக்கான சிறப்பு எழுத்தறிவுத் திட்டம்
மத்திய மற்றும் மாவட்ட சிறைச்சாலைகளில், எழுதப்படிக்கத் தெரியாத சிறைவாசிகளுக்கு, அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிடும் வகையில் ரூ.25 இலட்சம் செலவில், சிறைவாசிகளுக்கான சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. 2023-24 மற்றும் 2024–25 ஆம் ஆண்டுகளில் முறையே 1,249 மற்றும் 1,398 எழுதப்படிக்கத் தெரியாத சிறைவாசிகள் பயனடைந்துள்ளனர்.
இவ்வாறாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் நான்கரை ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறையில் புதுமையான பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை இந்திய அளவில் சிறப்பான பல சாதனைகளைப் படைத்துப் பெருமைக்குரிய துறையாக உயர்ந்து சிறந்து விளங்குகிறது.