பீகார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு வாக்காளர் சிறப்பு பட்டியல் தீவிர திருத்தம் நடைபெற்றது. அதன் அடிப்படையில் புதிய வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 65 முதல் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவுக்கு ஆதரவாக இந்த நீக்கம் நடத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனிடையே வரைவு வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது அம்பலமாகியுள்ளது தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை கேள்விக்குள்ளாகியுள்ளது.
மேலும் வாக்காளர் பட்டியலில் நீடிக்க ஆதாரை ஆவணமாக ஏற்றுக்கொள்ளமுடியாது என தேர்தல் ஆணையம் கூறியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது ஆதாரை ஆவணமாக ஏற்க வேண்டும் என உச்சமீதிமன்றம் உத்தரவிட்டது.
அதோடு பீகாரில் நடத்திய வாக்காளர் சிறப்பு பட்டியல் தீவிர திருத்தத்தை நாடு முழுவதும் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வாக்காளர் சிறப்பு பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் குறித்து பேசிய கேரள முதலமைசார் பினராயி விஜயன், "வாக்காளர் சிறப்பு திருத்தம் மூலம் சிறுபான்மை சமூகத்தினர், பட்டியல் பழங்குடி பிரிவினர், பெண்கள், வெளிநாடுகளின் வேலை செய்வோர் உள்ளிட்டோரின் வாக்குரிமை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல், அதன் பின்னர் சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் செய்ய திட்டமிடுவது தவறான நோக்கம் கொண்டது. 2002 வாக்காளர் பட்டியல் அடிப்படையில் திருத்தம் செய்வது அறிவியல் ரீதியானது அல்ல. பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் போன்று நாடுமுழுதும் செயல்படுத்த திட்டமிடுவது உள்நோக்கம் கொண்டது" என்று தெரிவித்தார்.