அதிமுகவை வெளியில் இருந்து யாரும் அழிக்க வேண்டாம். பழனிசாமியே அதற்கான வேலைகளை செய்து விடுவார் என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர், நடிகர் கருணாஸ் விமர்சித்துள்ளார்.
சிவகங்கை அருகே உள்ள பனங்காடியில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர், நடிகர் கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது வருமாறு :-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ரூ.15,516 கோடி தொழில் முதலீடுகளை ஈர்த்து, இதன்மூலம் 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று உறுதியளித்துள்ளது பாராட்டப்படக்கூடிய ஒரு செய்தி. முக்குலத்தோர் புலிப்படை சார்பில் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
2026 தேர்தலில் பாஜக அரசியல் ஆதாயம் தேட அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. அவர்களின் முகத்திரையை வெளிக்கொண்டுவர, பாஜகவின் தமிழர் விரோதப் போக்கை எடுத்துரைக்க, ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தின் முயற்சியில் பாஜகவின் அரசியல் சூதாட்டம் குறித்து 400 பக்கத்தில் புத்தகம் எழுதி வருகிறேன்.
கீழடி, விவசாயம், நீட், விவசாயிகள் என இப்படி மக்களுக்கு எதிராக செயல்படும் பாஜகவின் முகத்திரையை கிழிக்க எளிமையாக மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் புத்தகம் எழுதி உள்ளேன். அதனை தமிழக முதல்வர் விரைவில் வெளியிடுவார்.
சுயநலத்திற்காக, கட்சி சொத்துக்காக அதிமுகவை படுகுழியில் பழனிசாமி தள்ளப் போகிறார். அதிமுகவை வெளியிலிருந்து யாரும் அழிக்க வேண்டாம், அந்த வேலையை எடப்பாடி பழனிசாமியே செய்து விடுவார். தான் செய்யும் தவறுகளை மறைக்கவே எடப்பாடி பழனிசாமி பொய் பேசி வருகிறார். பழனிசாமி நம்பிக்கை துரோகம் செய்பவர். அவருக்கு வரும் தேர்தலிலும் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தேன். பாஜக பாசிச ஆட்சி வரக்கூடாது என்பதற்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டேன். தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான நல்லாட்சி தொடர வேண்டும் என்பதால், இந்த தேர்தலிலும் திமுக கூட்டணிக்காக பிரச்சாரம் மேற்கொள்வேன்.
உடைந்த கண்ணாடி உடைந்தது தான், மீண்டும் ஒட்டாது. எந்த நிலையிலும் அதிமுகவுக்கு செல்ல மாட்டேன். தமிழ்நாட்டில் திமுக தான் 2026 தேர்தலில் வெற்றிபெறும். மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும்.
விஜய் கட்சி ஆரம்பிப்பது அவருடைய உரிமை, விருப்பம். ஆனால் எப்போதும் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப்பிலேயே அரசியல் செய்ய முடியாது. எடப்பாடி பழனிசாமியை அன்றும் எதிர்த்தேன், இன்றும் எதிர்க்கிறேன். எனக்கு வேஷம் போடத் தெரியாது. பழனிசாமியிடம் நன்றி விசுவாசம், உண்மை என எதையும் எதிர்பார்க்க முடியாது. அவரைப் பற்றி மக்களுக்கு தெரியும்.
வரும் தேர்தலில் பழனிசாமி வெற்றி பெறுவதே கடினம். கொங்கு மண்டல மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். பழனிசாமி அரசியல் செய்வது சுயநலத்திற்காகதான். அதிமுக கட்சியை படுகுழியில் தள்ளப் போகிறார். மரியாதை இல்லாத இடத்தில் நான் இருக்க மாட்டேன். தமிழ் மண் காக்கப்பட வேண்டும், தமிழக மக்களின் கலாச்சாரம் துறைச்சாற்றப்பட வேண்டும். நல்லாட்சி தொடர வேண்டும் என்றால் மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமைய வேண்டும்; அமையும்." என்றார்.