குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் மாநிலங்களவை சபாநாயகராகவும் திகழ்ந்து வந்த நிலையில், அவர் மாநிலங்களவையில் தனது பதவியை மறந்து பாஜக அரசின் பிரதிநிதி போல அவர் செயல்பட்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே உடல்நிலையை காரணம் காட்டி குடியரசுத் துணைத் தலைவர் பதவியில் இருந்து பாதியிலேயே ஓய்வு பெறுவதாக ஜெகதீப் தன்கர் அறிவித்தார். இது அரசியல் தளத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இது குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததால், குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தியா கூட்டணி சார்பில், குடியரசுத் துணை தலைவர் வேட்பாளராக ஆந்திராவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கும்போது சுதர்சன் ரெட்டி பழங்குடி மக்களுக்கு எதிராக ஒன்றிய அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக தீர்ப்பளித்தார். இதனை குறிப்பிட்ட ஒன்றிய அமைச்சர் அமித்ஷா சுதர்சன் ரெட்டி ரக்சல் அமைப்பினருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியவர் என்று விமர்சித்தார்.
அமித்ஷாவின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு ஓய்வு பெற்ற 18 உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் அமித்ஷாவின் கருத்து நீதித்துறை சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.