அரசியல்

"தமிழுக்கு துரோகம் செய்யும் பாஜகவுக்கு கொத்தடிமையாகக் கிடப்பது அதிமுகவின் பழக்கம்" - முரசொலி காட்டம் !

தமிழ்நாட்டுக்கு கெடுதல் செய்வது ஒன்றையே வழக்கமாக வைத்துள்ளது பா.ஜ.க. அதற்கு தலையாட்டி கொத்தடிமையாக இருந்துள்ளது அ.தி.மு.க.

"தமிழுக்கு துரோகம் செய்யும் பாஜகவுக்கு கொத்தடிமையாகக் கிடப்பது அதிமுகவின் பழக்கம்" - முரசொலி காட்டம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (25-08-2025)

துரோக கொத்தடிமைக் கூட்டணி

“தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது வெறும் அரசியல் கூட்டணி அல்ல. தமிழ்நாட்டை வளர்ச்சி, முன்னேற்றம் அடையச் செய்யும் கூட்டணி” என்று திருநெல்வேலியில் வைத்து பொய்- மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

தமிழ்நாட்டுக்கு பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் சேர்ந்து என்ன வளர்ச்சியைக் கொடுத்துள்ளன என்பதையும் அமித்ஷா சொல்லி இருந்தால் பாராட்டலாம். தமிழ்நாட்டுக்கு கெடுதல் செய்வது ஒன்றையே வழக்கமாக வைத்துள்ளது பா.ஜ.க. அதற்கு தலையாட்டி கொத்தடிமையாக இருந்துள்ளது அ.தி.மு.க. இத்தகைய துரோகக் கூட்டணிதான், இப்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

“புண்ணிய பூமியான தமிழ் மண்ணில் தமிழ் மொழியில் பேச முடியாதது வருத்தமளிக்கிறது. இந்த தமிழ் மண் வரலாறு, வீரம், பண்பாடு மிகுந்தது. இந்த மண்ணை வணங்குகிறேன்” என்று சொல்லி தனது உரையைத் தொடங்கி இருக்கிறார் அமித்ஷா. சமஸ்கிருதத்துக்கு மகுடம் சூட்டி, தமிழின் தலையில் மண்ணைப் போட்டதுதானே ஒன்றிய பா.ஜ.க. அரசு? தமிழை விட சமஸ்கிருத வளர்ச்சிக்காக 17 மடங்கு அதிக நிதியை ஒதுக்கிவிட்டு, 'தமிழில் பேச முடியாதது வருத்தமளிக்கிறது' என்று சொல்வது மோசடித்தனம் அல்லவா? உள்துறை அமைச்சருக்கு தமிழ் தெரியாமல் இருப்பதும், தமிழில் பேச முடியாததும் நல்லதுதான்.

"தமிழுக்கு துரோகம் செய்யும் பாஜகவுக்கு கொத்தடிமையாகக் கிடப்பது அதிமுகவின் பழக்கம்" - முரசொலி காட்டம் !

“இந்திதான் அனைத்துக்கும் மூலமொழி' என்று கண்டுபிடித்துச் சொன்னவர் இதே அமித்ஷா அவர்கள்தான். இதை விட தமிழுக்குச் செய்யும் துரோகம் இருக்க முடியுமா? ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த கோல்வாக்கர் எழுதுகிறார்; “மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வுதான் இருக்கிறது; சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக வருகின்ற காலம் வரை, இந்திக்கே நாம் முன்னுரிமை தந்து, நமது வசதிக்காக ஆட்சி மொழியாக்கிக் கொள்ள வேண்டும்.” (As a solution to the problem of “Lingua franca,' till the time Sanskrit takes that place / we shall have to give priority to Hindi on the score of convenience) என்பதே அவர்களது கொள்கையாகும். 'நாடு முழுவதும் சமஸ்கிருதத்தை கட்டாயப் பாடமாக்க வேண்டும்' என்று ஜனசங்கம் தீர்மானம் போட்டுள்ளது. அதனால் தான் சமஸ்கிருத வளர்ச்சிக்காக பல்லாயிரம் கோடியை பா.ஜ.க. அரசு ஒதுக்கீடு செய்து கொண்டு இருக்கிறது. இதனை மறைக்கத் தான் 'தமிழில் பேச முடியவில்லையே' என்ற நாடகங்கள் ஆகும்.

இந்தத் துரோகத்தை மறைக்கத்தான் அ.தி.மு.க. கொத்தடிமைகள் அமித்ஷாவால் மிரட்டி பணிய வைக்கப்பட்டுள்ளார்கள். இந்திக்கு ஆதரவாக அமித்ஷா கருத்துச் சொன்னபோது, “அது அவரது சொந்தக் கருத்து” என்று சொன்னவர்தான் கொத்தடிமை பழனிசாமி.

சிறுபான்மை சமூகத்துக்கும் இலங்கைத் தமிழர்க்கும் துரோகம் இழைக்கும் வகையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மாநிலங்களவையில் ஆதரித்த கட்சிதான் அ.தி.மு.க. மாநிலங்களவையில் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் அ.தி.மு.க. எம்.பி.க்கள். அன்றைக்கு அ.தி.மு.க.வைச் சேர்ந்த பத்து உறுப்பினர்களும், பா.ம.க.வைச் சேர்ந்த அன்புமணியும் ஆதரித்து வாக்களிக்காமல் இருந்திருந்தால் இந்த சட்டமே நிறைவேறி இருக்காது என்பதுதான் உண்மை.

"குடியுரிமைச் சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லையே? எந்த முஸ்லீம் பாதிக்கப்பட்டார்? காட்டுங்கள்?” என்று கொத்தடிமை பழனிசாமி பா.ஜ.க.வின் ஊதுகுழலாக அன்றைய தினம் கேட்டார்.

மூன்று வேளாண் சட்டங்களை பா.ஜ.க. கொண்டு வந்தபோது, “அது மிக நல்ல சட்டம், அது பற்றி நான் விவாதிக்கத் தயார், என்னிடம் விவாதிக்க வாருங்கள்” என்று நிருபர்களையே சவாலுக்கு அழைத்தவர்தான் அன்றைய முதலமைச்சர் பழனிசாமி. மூன்று வேளாண் சட்டத்துக்கு எதிராக போராடும் எட்டு மாநில விவசாயிகளை, 'அவர்கள் விவசாயிகள் அல்ல, புரோக்கர்கள்' என்று கொச்சைப்படுத்தினார் பழனிசாமி.

"தமிழுக்கு துரோகம் செய்யும் பாஜகவுக்கு கொத்தடிமையாகக் கிடப்பது அதிமுகவின் பழக்கம்" - முரசொலி காட்டம் !

‘நீட் தேர்வு வைத்தால் எழுதித்தான் ஆக வேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை' என்று சொன்னவர் தான் அன்றைய முதலமைச்சர் பழனிசாமி. நீட் விலக்கு மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஒப்புக்கு அனுப்பி விட்டு, அதை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியதைக் கூட ஒன்றரை ஆண்டுகள் வெளியில் சொல்லாமல் வைத்திருந்தவர்தான் பழனிசாமி. முதலமைச்சர் பதவியில் இருந்து இறக்கப்பட்ட பிறகும், “நீட் தேர்வில் இருந்து விலக்கு எல்லாம் கிடையாது. எல்லாரும் எழுதித்தான் ஆக வேண்டும். உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கொடுத்துவிட்டது. அதன்படி தான் நடத்துகிறோம். அனைத்து மாநிலத்தவரும் எழுதித்தான் ஆகவேண்டும்” என்று பேசினார் பழனிசாமி.

திராவிடத்தை விமர்சித்தும், பேரறிஞர் அண்ணாவை விமர்சித்தும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்ட மேடையில் வெட்கமில்லாமல் பழனிசாமியின் அ.தி.மு.க. உட்கார்ந்து இருந்தது. இதெல்லாம் கொத்தடிமைத்தனத்தின் தொடர்ச்சி அல்லவா?

தமிழுக்கும், தமிழினத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் துரோகம் செய்வது பா.ஜ.க.வின் வழக்கம். அதனைக் கண்டும் காணாமல் கொத்தடிமையாகக் கிடப்பது அ.தி.மு.க.வின் பழக்கம். அது வளர்ச்சி - முன்னேற்றக் கூட்டணி அல்ல. துரோக - கொத்தடிமைக் கூட்டணி ஆகும்.

banner

Related Stories

Related Stories