'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் முதலமைச்சரின் பெயர் பயன்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சி.வி. சண்முகம் தொடர்ந்த வழக்கில் அவருக்கு உச்சநீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது. இந்த அபராதத்தை, கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதிகளில் நடக்கும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்திற்கு பயன்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், " தமிழ்நாடு முதலமைச்சர் 15.07.2025 அன்று கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அரசு துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்று சேரும் வகையிலும் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திட, "உங்களுடன் ஸ்டாலின்" என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.
உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பெயரைப் பயன்படுத்த அனுமதி அளிக்கக் கூடாது என அதிமுக எம்பி சி.வி. சண்முகம் அவர்களால் தொடரப்பட்ட வழக்கின் மீது தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், உச்ச நீதிமன்றம் அம்மனுவை தள்ளுபடி செய்தும், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பெயரைப் பயன்படுத்த அனுமதி அளித்தும், வழக்கு தொடுத்த சி.வி. சண்முகம் அவர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டது.
இந்த அபராதத் தொகையினை தமிழ்நாடு அரசுக்கு செலுத்தவும், அந்த தொகையினை தமிழ்நாடு அரசு சார்பில் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களுக்காக பயன்படுத்தவும் உத்தரவிட்டது.இந்த உத்தரவிற்கிணங்க சி.வி. சண்முகம் அவர்கள் அபராதத் தொகையான ரூ.10 லட்சத்தை இன்று தமிழ்நாடு அரசுக்கு செலுத்தியுள்ளார்.
தமிழ்நாடு அரசு இந்த தொகையை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன் மலை வட்டாரத்தில் அதிகமாக வசிக்கும் மலைவாழ் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சுகாதார நலத்திட்டங்களுக்கும் அங்கு நடைபெறும் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்திற்கும் பயன்படுத்தி கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.