நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21-ம் தேதி தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளுங்கட்சியாக பாஜகவை நோக்கி நாட்டு மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
குறிப்பாக தேர்தல் ஆணையம் முனைப்பு காட்டும் வாக்காளர் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. மேலும் இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தி வருகிறது. போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடத்தினாலும் மற்ற கேள்விகளை தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் நாடாளுமன்றத்தில் மௌலானா ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை பல மாதங்களாக சிறுபான்மை ஆய்வு மாணவர்களுக்கு வழங்கப்படாததும், நூற்றுக்கணக்கான ஆய்வு மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதுமான நிலை குறித்த கேள்வியை (எண் 484/ 23.07.2025) சு.வெங்கடேசன் எழுப்பி இருந்தார். அதற்கு ஒன்றிய அமைச்சரும் பதில் அளித்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு :
=> சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி :-
சிறுபான்மை ஆய்வு மாணவர்களுக்கு வழங்கு வழங்கபட வேண்டிய மௌலானா ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை பல மாதங்களாக ஏன் வழங்கப்படவில்லை? மாணவர்கள் தங்கள் கல்வி மற்றும் நடைமுறை தேவைகளை எல்லாம் நிறைவு செய்த பின்பும் ஏன் இந்த நிலை? நிதியமைச்சகத்திடம் இருந்து ஒப்புதல் கிடைக்கவில்லை என்பதுதான் காரணமா? கல்வி உதவித் தொகை வழங்கப்பட என்ன நடவடிக்கைகள் அமைச்சகத்தால் எடுக்கப்பட்டுள்ளன?
=> கேள்விக்கு சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு பதில் :-
"2022 - 23 நிதியாண்டிலேயே இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது என்றாலும், ஏற்கனவே இந்த திட்டத்தில் பயன்பெற்று வருபவர்களுக்கு அவர்கள் கல்வியை முடிக்கிற வரை தொடர்ந்து தரப்பட்டு வருகிறது. ஜனவரி 2025 இல் இருந்து நிலுவையில் இருந்த கல்வி உதவித் தொகைக்கு தற்போது ஒப்புதல் பெறப்பட்டு வழங்கப்பட துவங்கி இருக்கிறோம்" என அமைச்சர் தனது பதிலில் தெரிவித்திருக்கிறார்.
=> சு.வெங்கடேசன் கருத்து :-
"சிறுபான்மை மாணவர்களுக்கான மௌலானா ஆசாத் கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டதையே நாங்கள் கண்டித்து இருந்தோம். அது தொடர வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. ஆனால் ஏற்கனவே கல்வி உதவித்தொகை பெற்று வருபவர்களுக்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டாலும் அவர்களுக்கே ஆறு மாதங்களுக்கும் மேலாக தாமதமாகிறது என்றால் எவ்வாறு அந்த மாணவர்கள் தங்கள் ஆய்வு படிப்பை தொடர முடியும்? தற்போது ஒப்புதல் தரப்பட்டு விட்டதாக அமைச்சர் கூறி இருப்பது மகிழ்ச்சி. ஆனால் சிறுபான்மையினர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஒவ்வொன்றிலும் இப்படிப்பட்ட தடைகள் ஏற்படுத்தப்படுவதும் அவற்றைப் பெறுவதற்காக எங்களைப் போன்றவர்கள் போராட வேண்டி இருப்பதும் அவலமான நிலையாகும்.
அமைச்சர் பதிலிலேயே கூட தாமதத்தை ஏற்றுக் கொள்கிறார். மாணவர்கள் தரப்பிலிருந்து கல்வி, நடைமுறை சார்ந்த தேவைகளை நிறைவு செய்யவில்லை என்றும் அவரால் காரணம் கூற முடியவில்லை. நிதி அமைச்சகத்திடமிருந்து ஒப்புதல் பெற ஏற்பட்ட கால தாமதத்திற்கும் காரணம் சொல்லாமல் அவர் கடந்து செல்கிறார். சிறுபான்மை விவகார அமைச்சகம் உண்மையில் சிறுபான்மையினரின் நலனுக்காக செயல்படுகிறதா என்ற ஐயம் இந்தப் பிரச்சினையிலும் வலுப்பட்டுள்ளது."