இந்தியாவின் வடமுனையான ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் பட்டியல் திருத்த செயல்பாடுகள், தொகுதி மறுவரையறை, அகமதாபாத் விமான விபத்து உள்ளிட்ட ஏராளமான சிக்கல்கள் அரங்கேறிய நிலையில், நேற்றைய நாள் (ஜூலை 21) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.
இத்தொடரில் ஒன்றிய பா.ஜ.க அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பவும், பல்வேறு விவாதங்களை மேற்கொள்ளவும் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி முடிவெடுத்தது.
இந்நிலையில், இன்றைய நாள் (ஜூலை 22) தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கதிர் ஆனந்த் மற்றும் செல்வகணபதி ஆகியோர் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு,
“நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்கள் என்ன? திட்டங்களை முடிப்பதற்கான கால அவகாசம் என்ன?” என தென் சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி
தமிழ்நாட்டில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களை விரைவுபடுத்த நிலம் கையகப்படுத்தும் செயல்முறைக்கு அரசாங்கம் போதுமான நிதியை வழங்குகிறதா என்று நாடாளுமன்றத்தில் திமுக தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார்.
அதில் அவர், NHAI மற்றும் பிற அரசுத் துறைகள் வழங்கும் விலையுடன் ஒப்பிடும்போது நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் ஒரு ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கு அரசாங்கம் நிர்ணயித்த சராசரி விலையின் விவரங்கள் என்ன? தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள மற்றும் நடந்து வரும் ரயில்வே திட்டங்களுக்கு அரசாங்கம் போதுமான நிதியை வழங்கியுள்ளதா, அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களை சரியான நேரத்தில் முடிப்பதை உறுதி செய்ய ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களை விரைவாக முடிக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் என்ன? என்றும் கேட்டுள்ளார்.
“தொடரும் இரயில் விபத்துகள். நடவடிக்கை என்ன? என” சேலம் திமுக எம்.பி. செல்வகணபதி கேள்வி
காலியாக உள்ள கெசட்டட் அல்லாத பதவிகளுக்கு ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த ரயில்வே முடிவு எடுத்துள்ளது குறித்து திமுக மக்களவை உறுப்பினர் செல்வகணபதி நாடாளுமன்றத்டில் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோட்ட ரயில்வே மேலாளர்களுக்கு அவர்களை ஒப்பந்த அடிப்படையில் தன்னார்வலர்களாக நியமிக்க அதிகாரம் உள்ளதா, அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? ரயில்வேயில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட காலியாக உள்ள பதவிகவிளை நிரப்ப இந்த முறை பின்பற்றப்படுவது பற்றிய விவரங்கள் என்ன?
கடந்த சில ஆண்டுகளில் நடந்த அனைத்து ரயில் விபத்துகளுக்கும் பணியாளர் பற்றாக்குறையால் ஏற்பட்ட மனித தவறு முக்கிய காரணமாக இருந்தது. இது தொடர்பாக ரயில்வே எடுத்த திருத்த நடவடிக்கைகளின் விவரங்கள் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.
“வானிலை முன்னறிவிப்பை வலுப்படுத்த வேண்டும்” என வேலூர் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் கோரிக்கை
பேரிடர் காலங்களில் துரிதமாகவும் முன்னெச்சரிக்கையுடனும் செயல்பட உதவும் வகையில் ஒன்றிய அரசு ஏதேனும் மேம்பட்ட தொழில்நுட்பம் அல்லது பருவமழை முன்னறிவிப்பு மாதிரிகளை நடைமுறைப்படுத்தியுள்ளதா என்று திமுக மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த கேள்வி எழுப்பினார்.
அதில் அவர், கடலோர வெள்ளப் பாதுகாப்புகளை வலுப்படுத்த எடுக்கப்பட்ட பயனுள்ள நடவடிக்கைகள் என்ன? நில அதிர்வு கண்காணிப்பு வலையமைப்புகளை விரிவுபடுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் பேரிடர் மீள்தன்மையில் அவற்றின் தாக்கம் என்ன? என்று கேட்டுள்ளார்.
சாதாரண மக்கள், குறிப்பாக விவசாயிகள், பருவமழை உள்ளிட்ட வானிலை முன்னறிவிப்பு எச்சரிக்கைகளை சரியான நேரத்தில் பெறுவதற்கு ஒன்றிய அரசு செய்துள்ள வசதிகள் என்ன? வறட்சியிலிருந்து மக்களையும் விவசாயிகளையும் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் உள்ளூரில் மேம்பட்ட வானிலை நிலையங்களை நிறுவுவதற்கான காலக்கெடு என்ன? என்றும் அவர் தனது நாடாளுமன்ற கேள்விகளில் குறிப்பிட்டுள்ளார்.