அரசியல்

“தமிழ்நாட்டினுடைய வரலாற்றில், கூட்டணி அரசே கிடையாது...” : அதிமுக - பாஜகவுக்கு கி.வீரமணி நெத்தியடி!

தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எல்லாம் கொள்கை சார்ந்தவை என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“தமிழ்நாட்டினுடைய வரலாற்றில், கூட்டணி அரசே கிடையாது...” : அதிமுக - பாஜகவுக்கு கி.வீரமணி நெத்தியடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் கொள்கை அடிப்படையில் உள்ளவை. கட்சி வேறுபாடு பாராமல், ஆட்சியின் செயல்பாடுகள் இருப்பதால், மீண்டும் தி.மு.க. ஆட்சி, அதிக எண்ணிக்கை பலத்தோடு வெற்றி பெறுவது உறுதி என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு :

2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாசிச பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அணிகள் திட்டமிட்டு, எப்படியாவது தமிழ்நாட்டைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று நினைக்கின்ற திட்டத்தை நிறைவேற்றவிடக் கூடாது; அந்தத் திட்டத்தை வேரறுக்கவேண்டும் என்ற உணர்வோடு, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘‘உங்களுடன் ஸ்டாலின்’’ என்ற ஓர் அற்புதமான திட்டத்தின்மூலம் நேரிடையாக மக்களைச் சந்தித்து, அவர்களுடைய தேவைகளைக் கேட்டு, அவற்றை நிவர்த்தி செய்கிறார்.

=> அரசு அதிகாரிகளே மக்களை நேரில் சந்திக்கும் திட்டம்! :

இதுவரை அந்தத் தேவைகளை அதிகாரிகளின் மூலமாகச் செய்திருந்தாலும், அது காலதாமதமாகக் கூடும் என்கின்ற காரணத்தினால், அதிகாரிகளே மக்களை நேரில் சந்தித்து, அவற்றை உடனடியாக நிறைவேற்றுவதற்கான இத்திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கின்றார்.

காமராஜர் பிறந்த நாளான 15.7.2025 அன்று சிதம்பரத்தில் அத்திட்டம் சிறப்பாக முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

=> தமிழர்கள், நன்றிக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல! :

அந்தத் திட்டம், மிகப்பெரிய அளவில் வெற்றியைத் தந்திருக்கின்றது. ஒரு பக்கம் மக்களைச் சந்திக்கின்றார்; குடும்பங்களோடு, குதூகலத்தோடு முதலமைச்சரோடு பேசுகிறார்கள். அவர்களுடைய மகிழ்ச்சி கலந்த முகங்கள், மிகுந்த நம்பிக்கையை நமக்கு ஊட்டுகின்றன. நன்றி உணர்ச்சியோடு இருக்கிறார்கள் மக்கள் பெரும்பாலும் என்கிற எண்ணத்தையும் பரவலாகக் காட்டுகிறது. தமிழர்கள், நன்றிக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதையும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது தமிழ்நாடு.

இந்நிலையில், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரின் நிலை மிகப் பரிதாபம். ‘கான மயிலாட, கண்டிருந்த வான்கோழி போல’, அவரும், ‘‘நாங்களும் ரோட் ஷோ போகிறோம்; நாங்களும் மக்களைச் சந்திக்கின்றோம்’’ என்று சொல்கிறார்.

“தமிழ்நாட்டினுடைய வரலாற்றில், கூட்டணி அரசே கிடையாது...” : அதிமுக - பாஜகவுக்கு கி.வீரமணி நெத்தியடி!

=> எதிர்க்கட்சிப் பணிகளை செய்திருக்கிறாரா? :

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடியவர், கடந்த நான்கரை ஆண்டுகாலமாக, தன்னுடைய எதிர்க்கட்சிப் பணிகளை செய்திருக்கிறாரா? என்று, அவரே நெஞ்சில் கைவைத்துப் பார்த்துப் பதில் சொல்லட்டும்!

எத்தனை முறை, எந்தெந்தத் திட்டத்தைச் செய்திருக்கிறார்கள் – எத்தனை முறை அவர்கள் மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்திருக்கிறார்கள்? தமிழ்நாட்டினுடைய நலன் எப்போதெல்லாம் பாதிக்கப்பட்டதோ, அப்போதெல்லாம் அவர்கள் ஒன்றிய பா.ஜ.க. அரசை எதிர்த்து ஓங்கிக் குரல் கொடுத்திருக்கிறார்களா? என்றால், கிடையவே கிடையாது.

அதற்கு ஒரு சிறிய உதாரணத்தைச் சொல்லவேண்டுமானால், தமிழ்நாட்டு அடாவடி ஆளுநர், பல மசோதாக்களை நிறுத்தி வைத்த நேரத்தில், அதில் ஒரு மசோதா, ஜெயலலிதா அம்மையார் பெயரில் இருந்த பல்கலைக்கழகத்திற்கான மசோதாவாகும். ஏற்கெனவே அ.தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட அந்த மசோதாவையும் கிடப்பில் போட்டிருந்தார். அந்த மசோதாவிற்கும் ஒப்புதல் கொடுக்கவேண்டும் ஆளுநர் என்று வாதாடினார் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

=> ஒரு வரலாற்றுத் தீர்ப்பை ‘திராவிட மாடல்’ அரசு பெற்றது :

எதிரும் புதிருமாக இருக்கின்றவர்கள் என்பதற்காக, அவர்களுக்காக வாதாடாமல் இருக்கவில்லை. கட்சி வேறுபாடு பார்க்காமல், கருத்து வேறுபாடு பார்க்காமல், அதற்கும் சேர்த்துத்தான், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, ஒரு வரலாற்றுத் தீர்ப்பை ‘திராவிட மாடல்’ அரசு பெற்றது. ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கின்ற நிலையில், தங்களுடைய கட்சியைப்பற்றிகூட அ.தி.மு.க.வினர் கவலைப்படவேயில்லை.

அவர்கள் கூட்டணி சேர்ந்திருக்கின்ற ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மோடி – அமித்ஷா ஆகியோர் எதிர்க்கட்சிகளை எப்படி மதிக்கின்றனர்; ஜனநாயகத்தை எப்படி மதிக்கின்றார்கள் என்பதற்கு ஒரு சிறிய உதாரணமே போதும்!

=> கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற மக்களவைத் துணைத் தலைவர் பதவி நிரப்பப்படவில்லை! :

கடந்த 5 ஆண்டுகளுக்கும்மேலாக, நாடாளுமன்ற மக்களவைத் துணைத் தலைவர் பதவி நிரப்பப்படவில்லை. அதனுடைய தத்துவம், நடைமுறையில் எப்படி என்றால், ஆளுங்கட்சியாக இருக்கக்கூடியவர்களுக்கு மூக்கணாங்கயிறு போடக்கூடிய அளவிற்கு, எதிர்க்கட்சிக்கு மரியாதை கொடுக்கக்கூடிய முறையில், அல்லது தோழமைக் கட்சிகளுக்காவது மக்களவைத் துணைத் தலைவர் பதவி கொடுப்பார்கள். இதற்கு நிறைய முன்னுதாரணங்கள் உண்டு.

ஆனால், பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ அதுபோன்று செய்யவில்லை. மாறாக, வெளிநாட்டுக்காரர்கள் சிரிக்கக்கூடிய அளவிற்கு, இந்திய நாட்டின் நிலை இருக்கின்றது. ஜனநாயகம் எப்படி இருக்கின்றது என்பதற்கு இன்னொரு உதாரணம் சொல்லவேண்டுமானால், காஷ்மீரில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரு முதலமைச்சர், ‘தியாகிகள் நினைவுச் சின்னத்தில்’ மரியாதை செய்யும் உரிமையைக்கூட தரவில்லை.

ஆளுநர் உத்தரவு காரணமாக, தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர், சுவர் ஏறிக் குதித்துச் சென்று, தியாகிகள் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தினார் என்பது, ஜனநாயகத்திற்குப் பெருமையா? உலக நாடுகள் இதைப் பார்த்து எள்ளி நகையாடாதா?

தமிழ் மண்ணை காவி மண்ணாக ஆக்கவேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்களோடு கூட்டணி சேர்ந்துதான், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஜனநாயக ஆட்சியை ஒழிக்கவேண்டும்; மதச்சார்பற்ற ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, தங்கள் கட்சியை அடமானம் வைத்து, தமிழ் மண்ணை காவி மண்ணாக ஆக்கவேண்டும் என்று அவர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அதற்குத் துணை போகும் வகையில்தான் தன்னுடைய சொந்தக் காரணங்களுக்காக அல்லது அச்சுறுத்தலின் காரணமாக அல்லது வேறு காரணங்களுக்காக இப்படி நடந்துகொள்ளக்கூடிய சூழல்– நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கின்றது.

இந்நிலையில், ஊடகங்களைத் தங்கள் கைகளில் வைத்துகொண்டு, தி.மு.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் உள்ள கட்சியினர் மிகத் தெளிவாக அவர்களுக்குப் பதில் சொல்லியிருக்கிறார்கள்.

“தமிழ்நாட்டினுடைய வரலாற்றில், கூட்டணி அரசே கிடையாது...” : அதிமுக - பாஜகவுக்கு கி.வீரமணி நெத்தியடி!

=> அவர்களுடைய கூட்டணியே குழப்பத்தில் இருக்கின்றது! :

இப்போதுகூட, ரத்தினக் கம்பளத்தை விரிக்கிறோம் என்கிறார்கள்; இப்போதும் கதவு திறந்திருக்கிறது என்கிறார்கள். இன்னொரு பக்கம் ஆத்திரமடைகிறார்கள். அவர்களே சொன்னபடி, ‘‘இந்தக் கட்சி இருக்கிறதா?’’ என்று முதல் நாள் கேட்கிறார்கள்; அடுத்த நாள், ‘‘அந்தக் கட்சிக்கு வரவேற்பு கொடுக்க ரத்தினக் கம்பளத்தை விரித்திருக்கின்றோம், எங்களோடு வாருங்கள், வாருங்கள்’’ என்று சொல்கிறார்கள்; சிறிதும் வெட்கமில்லாமல், ‘‘கதவைத் திறந்தே வைத்திருக்கின்றோம்’’ என்று சொல்கிறார்கள். பல கட்சிகள் தங்கள் கூட்டணியில் சேரும் என்று நினைத்தார்கள். அவர்களுடைய கூட்டணியே குழப்பத்தில் இருக்கின்றது. ‘‘கூட்டணி ஆட்சிதான்’’ என்று அமித்ஷா சொல்கிறார்.

‘‘இல்லை, இல்லை. நான்தான் எல்லாவற்றையும் முடிவு செய்வேன்’’ என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். இவருடைய முடிவை அமித்ஷா ஏற்றுக் கொண்டிருக்கின்றாரா? என்பது அடுத்த கேள்வி.

=> தமிழ்நாட்டினுடைய வரலாற்றில், கூட்டணி அரசே கிடையாது :

ஆனால், அதைவிட மிக முக்கியமான ஒன்று – கூட்டணி என்று பேசுகின்றவர்கள் எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு செய்தி என்னவென்றால், தமிழ்நாட்டினுடைய வரலாற்றில், கூட்டணி அரசே கிடையாது.

அண்ணா காலத்தில்கூட, கூட்டணி இருந்தது. ஆனால், அது கூட்டணி அரசு அல்ல!

=> தி.மு.க. தலைமையில் இப்போது இருப்பது கொள்கைக் கூட்டணி!

அதாவது, முழுக்க முழுக்க பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் – ஜனநாயகத்திற்கு விரோதமாக நடக்கக்கூடிய அளவிற்கும், சமதர்மத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு, மதச்சார்பின்மையை அலட்சியப்படுத்திவிட்டு, அரசமைப்புச் சட்டத்திலிருந்தே அதை மறைக்கவேண்டும் என்று சொல்லக்கூடிய போக்கை எதிர்க்கின்ற ஒரு கொள்கைக் கூட்டணிதான் – இன்றைக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆற்றல்மிகு முதலமைச்சர் அவர்களுடைய தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி – இத்தனை ஆண்டுகளாகத் தொடரக்கூடிய கூட்டணி.

ஆகவே, ஊடகங்கள் எல்லாம் சேர்ந்து, ‘‘அந்தக் கூட்டணியிலிருந்து இவர் வெளியேறுவார்; அவர் வெளியேறுவார்’’ என்று மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை உண்டாக்கலாம் என்று நினைக்கிறார்கள்; நிச்சயமாக அதில் வெற்றி பெற மாட்டார்கள். காரணம் என்ன தெரியுமா?

=> தங்கு சட்டசபைதானே தவிர, தொங்கு சட்டசபை கிடையாது! :

தமிழ்நாடு பெரியார் மண், பகுத்தறிவு மண் என்ற காரணத்தினால், தமிழ்நாட்டு மக்கள் அதனை மிகத் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் எப்போதும் ‘‘தங்கு சட்டசபைதானே தவிர, ஒருபோதும் தொங்கு சட்டசபை வந்ததே கிடையாது!’’ அதுமட்டுமல்ல, கூட்டணி அரசு என்று தமிழ்நாட்டின் வரலாற்றில் வந்ததே இல்லை. ஏனென்றால், மக்கள் தெளிவாகத் தீர்ப்பளிப்பார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகம் 1967 ஆம் ஆண்டு வெற்றி பெற்றபோது, தந்தை பெரியார் அவர்கள் ஒரு நல்ல உதாரணத்தைச் சொன்னார், ‘‘தோசையைத் திருப்பிப் போட்டதைப் போல’’ என்று. எதிர்க்கட்சி ஆளுங்கட்சியாக ஆயிற்று; ஆளுங்கட்சி எதிர்க்கட்சியாக ஆயிற்று அன்று. இதுதான் தொடர்ந்து தமிழ்நாட்டினுடைய நிலை.

ஆளுங்கட்சிகள் மாறி இருக்கலாம்; வெற்றி, தோல்விகள் மாறி மாறி வந்திருக்கலாம். ஆனால், நிலையான ஆட்சியைத்தான் தமிழ்நாட்டு மக்கள் விரும்புவார்கள். இத்தனை ஆண்டுகாலமும் அந் நிலைதான்.

“தமிழ்நாட்டினுடைய வரலாற்றில், கூட்டணி அரசே கிடையாது...” : அதிமுக - பாஜகவுக்கு கி.வீரமணி நெத்தியடி!

=> அவர்களுடைய ஆசை, நிராசையாகத்தான் ஆகும்! :

எனவே, மீண்டும் மீண்டும் கூட்டணி அரசு, கூட்டணி அரசு என்று அவர்கள் சொல்வது, அவர்களுடைய ஆசையாக இருக்கலாம். ஆனால், அந்த ஆசை நிராசையாகத்தான் ஆகும்.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையில் உள்ள கூட்டணி, ‘‘எத்தனை சீட்டுகள் என்பதைப் பொருத்து அமையவில்லை’’ – கொள்கைக்காகத்தான் அந்தக் கூட்டணி.

=> தி.மு.க. கூட்டணி – கொள்கைக் கூட்டணி! :

சீட்டுக்காகவோ அல்லது வேறு பல லாபங்களுக்காகவோ அந்தக் கூட்டணி அமைந்திருந்தால், இந்நேரம் அந்தக் கூட்டணியிலிருந்து யாராவது வெளியேறி இருப்பார்கள். கொள்கைக் கூட்டணி என்பதால்தான் அந்நிலை ஏற்படவில்லை.

ஆகவே, ‘‘எங்களுடன் வாருங்கள், கூட்டணி சேர வாருங்கள்’’ என்று எதிர்க்கட்சிகள் கதவைத் திறந்து வைத்திருந்தாலும்கூட, அவர்களுடைய நிலை என்னாகும் என்றால், ‘‘காத்திருந்தோம் காத்திருந்தோம், இலவு காத்த கிளிபோல, காலமெல்லாம் காத்திருந்தோம்’’ என்று சொல்கின்ற நிலைதான் இருக்கும்.

ஊடகங்களுக்குத் தினமும் தீனி வேண்டி இருக்கிறது. ஏதாவது ஒரு செய்தியைப் போட்டு, வாக்காளர்களைக் குழப்பலாம் என்று நினைக்கிறார்கள்.

=> ‘‘உங்களுடன் ஸ்டாலின்’’ திட்டத்தின்மூலம் மக்களுடைய குறைபாடுகள் களையப்படுகின்றன :

அதற்கு இடமேயில்லாமல், ‘‘உங்களுடன் ஸ்டாலின்’’ என்று சொல்லக்கூடிய அற்புதமான திட்டத்தின்மூலம், மக்களை நேரிடையாகச் சந்திக்கின்றார். அப்படி சந்திக்கின்ற நேரத்தில், மக்கள் தெளிவு பெறுகிறார்கள். மக்களுடைய குறைபாடுகள் களையப்படுகின்றன.

நம்முடைய முதலமைச்சர் அவர்கள், ‘‘மாதம் மும்மாரி பொழிகிறதா?’’ என்று கேட்டுத் தெரிந்து கொள்ளக்கூடிய முதலமைச்சர் அல்ல. அதுமட்டுமல்ல, ‘‘தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டையே, தொலைக்காட்சியைப் பார்த்துத்தான் நான் தெரிந்துகொண்டேன்’’ என்று சொல்லக்கூடிய முதலமைச்சரும் அல்ல. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், உடனடியாக அதற்குத் தீர்வு காணக்கூடிய முதலமைச்சர் அவர்.

=> தன்முனைப்புக்கு இடமில்லாத பெருங்குணம்! :

அதுமட்டுமல்ல, தன்னுடைய ஆட்சியில் தவறு நடந்தால், அதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் நேரிடையாக மன்னிப்புக் கேட்கக்கூடிய, தன்முனைப்புக்கு இடமில்லாத பெருங்குணம், எளிதில் ஆட்சியாளர்களுக்கு வந்ததாக வரலாறு கிடையாது.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை இன்றைக்கு ஏற்பட்டு இருக்கிறது. எனவேதான், இந்த ஆட்சியை அசைத்துப் பார்க்கலாம் என்று நினைக்காதீர்கள்!

=> வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. கூட்டணி அதிக தொகுதிகளைக் கைப்பற்றும் :

நீங்கள் என்னென்ன ‘வித்தை’களைச் செய்தாலும், எவ்வளவு பெரிய வியூகங்களை வகுத்தாலும்கூட, தமிழ்நாடு, பெரியார் மண்ணாக இருக்கின்ற காரணத்தால், மீண்டும் அமையப் போவது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான்! இப்போது இருக்கின்ற தொகுதிகளைவிட தி.மு.க. கூட்டணி அதிக தொகுதிகளைக் கைப்பற்றும்.

பரிதாபத்திற்குரிய எதிர்க்கட்சித் தலைவராக இன்றைக்கு இருக்கக்கூடியவருக்கு அந்தப் பதவியாவது வருகின்ற தேர்தலில் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.

மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்; தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் தெளிவாக இருக்கின்றன. மற்றவர்கள் எவ்வளவு குழப்பினாலும், நீங்கள் வெற்றி பெற முடியாது என்பதுதான் எதார்த்த நிலையாகும். இதை மக்கள் நன்றாகப் புரிந்துகொண்டிருக்கின்றார்கள் – குழப்பலாம் என்று நினைப்பபவர் ஏமாறுவர்!

banner

Related Stories

Related Stories