முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (15.7.2025) கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், லால்புரத்தில், ஐயா எல். இளையபெருமாள் அவர்களின் திருவுருவச் சிலையுடன் கூடிய நூற்றாண்டு அரங்கத்தை திறந்துவைத்து ஆற்றிய உரை.
வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது. நம்முடைய அருமை பெரியவர் ஐயா இளையபெருமாள் அவர்களின் நினைவரங்கத்தை திறந்து வைத்திருக்கிறேன். அதுமட்டுமல்ல, பெருந்தலைவர் காமராசர் அவர்களுடைய பிறந்தநாளில் பொதுமக்களின் குறைகளை விரைந்து தீர்க்க மாபெரும் முன்னெடுப்பாக ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற சிறப்பு முகாமைத் தொடங்கி வைத்துவிட்டு, இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன்!
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு – “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற முன்னெடுப்பு மூலமாக பொதுமக்களான உங்களிடமிருந்து பெற்ற மனுக்களுக்கு நூறு நாட்களில் தீர்வு காண்பேன்; நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியளித்திருந்தேன். சொன்னது போலவே முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்று தனித்துறையை உருவாக்கி அந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது! இதனால், நம்முடைய அரசின் மீது நம்பிக்கை வைத்து, இன்னும் பலர் மனுக்களை வழங்க தொடங்கினார்கள்! அதற்காக “முதல்வரின் முகவரி” என்ற தனி துறையை உருவாக்கினோம்.
அடுத்து, “மக்களுடன் முதல்வர்” என்ற திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 5000 முகாம்கள் நடத்தி, பல இலட்சம் மனுக்களுக்கு தீர்வு கண்டோம். இதுவரை, ஆட்சிக்கு வந்து மனுக்களைப் பெற்று அதன் மீது தீர்வு கண்ட விபரங்களை நேற்று கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா, இ.ஆ.ப., அவர்கள் விரிவாக தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளுக்கு அவர் எடுத்துச் சொன்னார்.
இப்போது, அதன் அடுத்த கட்டமாக “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களை தொடங்கி இருக்கிறோம்! மொத்தம் 10 ஆயிரம் முகாம்கள் நடைபெற இருக்கிறது. தன்னார்வலர்கள் வீடு வீடாக வந்து உங்களை சந்தித்து, முகாம் நடக்கும் நாள், இடம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சொல்லிவிடுவார்கள்.
என்னென்ன ஆவணங்களை நீங்கள் முகாமிற்கு கொண்டுவர வேண்டும் என்ற தகவலையும் சொல்லி, விண்ணப்பங்களை வழங்கி விடுவார்கள். மாதம் 1000 ரூபாய் வழங்குகின்ற கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் உள்ளிட்ட 46 சேவைகள் தொடர்பாக தீர்வுகாண விண்ணப்பங்களை வழங்கப் போகிறோம்.
தகுதி இருந்தும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் உங்கள் பகுதியில் முகாம் நடைபெறுகின்ற அன்றைக்கு விண்ணப்பங்களை கொடுத்தால் போதும். நிச்சயமாக சொல்கிறேன் – உங்களுக்கு நிச்சயமாக உரிமைத் தொகை வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் நோக்கமே மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று, அரசின் சேவைகளையும், திட்டங்களையும் வழங்குவதுதான்.
இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம் அந்த வரிசையில் இந்த முன்னெடுப்பில், அரசு அலுவலர்களும், அதிகாரிகளும் உங்களைத் தேடி வரப் போகிறார்கள். இந்த முகாம்கள் நடைபெறும் இடங்களில், மருத்துவ முகாம்களும் சேர்த்து நடைபெறும். இப்படி மக்களான உங்களின் தேவையை அறிந்து தீர்த்து வைப்பதுதான் நம்முடைய திராவிட மாடல் அரசு!
எதிர்காலத்திற்கான கட்டமைப்புகளை வலுப்படுத்தும் அதேநேரத்தில் நிகழ்காலத்தில் நாம் நெஞ்சை நிமிர்த்தி நடைபோட கடந்த காலத்தில் தமிழ்ச் சமுதாயத்தின் விடியலுக்கும், உயர்வுக்கும் உழைத்த மாமனிதர்களையும் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்!
அந்த வகையில்தான், ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிவிளக்காக நெறிசார்ந்த அரசியலின் அடையாளமாக விளங்கிய பெரியவர் அய்யா இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டு நினைவரங்கத்தை திறந்து வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மகிழ்ச்சி என்று சொல்வதைவிட பெருமை அடைகிறேன் என்றுதான் சொல்ல வேண்டும்!
சமூக சீர்திருத்த தலைவர்களான அயோத்திதாசப் பண்டிதர், தாத்தா இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, என்.சிவராஜ், எல்.சி.குருசாமி, சுவாமி சகஜானந்தர் வரிசையில் கம்பீரமாக போராடியவர்தான் நம்முடைய அருமை பெரியவர் இளையபெருமாள் அவர்கள். நந்தனை மறித்த சிதம்பரம் மண்ணில் பிறந்து, நாடு முழுவதும் பட்டியலின மக்களுக்கான உரிமை வாசலைத் திறந்தவர் அய்யா இளையபெருமாள் அவர்கள்!
அவருக்கு சிதம்பரத்தில் நம்முடைய எழுச்சித் தமிழர் ஆரூயிர் சகோதரர் தொல் திருமாவளவன் அவர்களுடன் நான் இன்றைக்கு அய்யா இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டு அரங்கத்தை திறந்து வைத்திருக்கிறேன். திருமா அவர்கள் சிதம்பரத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல, சிதம்பரத் தொகுதியின் சீர்திருத்தப் பிள்ளையாக அவர் விளங்கிக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு தன்னுடைய எழுத்தால் துணை நிற்கிறார், நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் ரவிக்குமார் அவர்கள். தனது பேச்சால் துணை நிற்கிறார், சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் சிந்தனைச் செல்வன் அவர்கள். இந்த விழாவிற்கு என்னுடைய அழைப்பை ஏற்று, வருகை தந்திருக்கக்கூடிய சகோதரர் செல்வப்பெருந்தகை அவர்களும், தோழர் பாலகிருஷ்ணன் அவர்களும், முத்தரசன் அவர்களும், பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன் அவர்களும், கே.எஸ்.அழகிரி அவர்களும், வேல்முருகன் அவர்களும், இப்படி எல்லோரும் இங்கே வருகை தந்திருக்கிறார்கள்.
அய்யா இளையபெருமாள் அவர்களுக்காக மட்டுமல்ல, அதற்காக மட்டும் வந்திருப்பதாக நான் கருதவில்லை – நம்முடைய திராவிட மாடல் அரசின் அனைத்து சமூக சீர்திருத்தத் திட்டங்களுக்கு துணையாக இருப்பவர்கள் – இவர்கள் என்பதற்கு வெளிப்படுத்துவதற்கு வந்திருக்கிறார்கள். அதனால், அனைவருக்கும் எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த மேடையில், பெரியாரின் வழியில் வந்த திராவிட இயக்கத் தலைவர்கள் - மார்க்சிய சிந்தனையை கொண்டிருக்கக்கூடிய பொதுவுடைமை இயக்கத்தின் தலைவர்கள் – காந்திய வழியில் வந்திருக்கக்கூடிய தேசிய இயக்கத்தின் தலைவர்கள் – அம்பேத்கர் இயக்கத்தின் தலைவர்கள் என்று எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறோம் – இதுதான் ஓரணியில் தமிழ்நாடு.
அதைத்தான் திருமாவளவன் அவர்கள் இங்கே பெருமையோடு குறிப்பிட்டுச் சொன்னார். நானும் அதை வழிமொழிகிறேன். உறுதியோடு சொல்கிறேன். தமிழ்நாடு இப்படி ஓரணியில் இருக்கும்போது, எந்த டெல்லி அணியின் காவித் திட்டமும் இங்கே பலிக்காது, பலிக்காது.
பெரியவர் அய்யா இளையபெருமாள் அவர்கள் பள்ளியில் படிக்கும்போதே தீண்டாமையின் அடையாளமாக இருந்த ‘இரட்டைப் பானை முறையை’ எதிர்த்துப் போராடியவர்! இராணுவத்தில் பணியாற்றியபோது, அங்கும் பாகுபாடு நிலவுவதை பார்த்து, அவருக்கே உரிய துணிச்சலோடு உயர் அதிகாரிக்குப் புகார் அளித்து, அந்தப் பாகுபாடுகளை களைய காரணமாக இருந்தார்!
இராணுவத்தில் ஓராண்டுகாலம் பணியாற்றிய பெரியவர் இளையபெருமாள் அவர்கள் மீண்டும் இந்தப் பகுதிக்கே வந்து, ஒன்றுபட்ட தென்னார்க்காடு மாவட்டத்திலும், தஞ்சை மாவட்டத்திலும் 1940 முதல் 1970 வரை நடந்த மிகப்பெரிய சமூகப் போராட்டங்களை முன்னெடுத்தவர்! 1946-இல் தன்னுடைய 22 வயதில் இரண்டாயிரம் பேரை திரட்டி, போராட்டத்தை நடத்தியவர்!
பரங்கிப்பேட்டையில், பட்டியல் சமூகத்தினர் செருப்பு போடக்கூடாது என்று இருந்த அந்த அக்கிரமத்திற்கு எதிராக போராடியவர். எங்கேயாவது பறை அடிக்கப்பட்டால், உடனே அங்கே சென்று தடுத்து நிறுத்திவிடுவார். இதற்காகவே பல வழக்குகளை எதிர்கொண்டார்.
பல பொய் வழக்குகளில் சிக்கி, ஆறு மாதம் சிறைத் தண்டனை பெற்றார். நிலமற்ற கூலித் தொழிலாளர்களின் உரிமைக்காகப் போராடினார். இப்படி இவர் தொடர்ச்சியாக போராடியதுதான் ஆதி திராவிட மக்களிடையே எழுச்சி ஏற்பட காரணமாக இருந்தது.
இப்படி சமூகத்தில், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய பெரியவர் இளையபெருமாள் அவர்கள், காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்து, 1952-ஆம் ஆண்டு விடுதலை இந்தியாவில் நடந்த முதல் பொதுத் தேர்தலில், 27 வயது இளைஞராக கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அவர் போட்டியிட்டு வென்றார்!
எம்.பி.- ஆகி, டெல்லியில் புரட்சியாளர் அம்பேத்கரைச் சந்திக்கிறார். “இவ்வளவு இளம் வயதில் எம்.பி.,யாகி வந்திருக்கிறீர்களே? அந்த மக்களுக்காக இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள்?” என்று அண்ணல் அம்பேத்கர் கேட்டபோது தென்னார்க்காடு மற்றும் தஞ்சை மாவட்டங்களில் அவர் நடத்திய மனித உரிமைப் போராட்டங்கள், தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்களை பட்டியலிட்டுச் சொன்னதைக் கேட்டு, அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஆச்சரியத்துடன் பாராட்டினார்!
மக்களின் உரிமைக்காகவும் – சமூக விடுதலைக்காகவும் போராடிய அய்யா இளையபெருமாள் அவர்கள் 1980 முதல் 1984 வரை எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் - 3 முறை நாடாளுமன்ற உறுப்பினர் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் – அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியின் தலைவர் - இப்படி ஏராளமான பொறுப்புகளை வகித்து, தொண்டாற்றியிருக்கிறார்!
இந்தப் பொறுப்புகளில் முக்கியமானது, பட்டியல் – பழங்குடியின மக்களின் மேன்மைக்காக 1965- ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட, அகில இந்திய ஆணையத்தின் தலைமைப் பொறுப்பை அவர் வகித்ததுதான். 3 ஆண்டுகாலம் இந்தியா முழுவதும் பயணித்து, சாதிக் கட்டமைப்பையும், தீண்டாமைக் கொடுமையையும் ஆய்வு செய்து அவர் கொடுத்த அறிக்கை – இந்தியச் சமூக அமைப்பின் சாதிய வேர்களை மறைக்காமல், துல்லியமாக வெளிப்படுத்தியது.
அதனால், அந்த அறிக்கை வெளியே வரக்கூடாது என்று சிலர் தடுக்கப் பார்த்தார்கள். நாடாளுமன்றத்தில், தாக்கல் செய்யும் நாளில் அவர் தங்கியிருந்த அறையில் தாக்குதல் நடத்தினார்கள். அங்கிருந்து தப்பித்து வந்து அறிக்கையை தாக்கல் செய்தார்! இப்படி, தாக்குதல் நடக்கும் என்று முன்பே தெரிந்துதான், திராவிட முன்னேற்றக் கழகத்தின் எம்.பி-யாக இருந்த இரா. செழியன் அவர்களிடம் அறிக்கையின் நகலினை கொடுத்து வைத்திருந்தார்.
அதனால்தான், திட்டமிட்டபடி அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில், அவரால் தாக்கல் செய்ய முடிந்தது. பிற்காலத்தில் கொண்டு வரப்பட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திற்கு அடித்தளமே, பெரியவர் இளையபெருமாள் கமிட்டியின் அறிக்கைதான்!
தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள், 1971-ஆம் ஆண்டு அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கின்ற சட்டம் கொண்டு வந்து தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற நினைத்தார். அதற்கு எதிராக வழக்கம்போல் ‘அந்த சிலர்’ உச்சநீதிமன்றம் சென்றார்கள்.
அப்போது கழக அரசு தாக்கல் செய்த மனுவில், “சமூக சீர்திருத்தத்திற்காக அமைக்கப்பட்ட இளையபெருமாள் கமிட்டி அறிக்கை அடிப்படையில்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று சொல்லியிருந்தது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் செல்லும் என்று சொல்வதற்கும், இளையபெருமாள் கமிட்டி அறிக்கையைத்தான் உச்சநீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் ஆதாரமாக சுட்டிக்காட்டியது.
இன்றைக்கு தமிழ்நாடு அரசு சார்பில், 29 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு, பல்வேறு கோயில்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால், பெரியவர் இளையபெருமாள் அவர்களின் அறிக்கையும் அதற்கு ஒரு முக்கியமான காரணம்! தந்தை பெரியார் - புரட்சியாளர் அம்பேத்கர் - தோழர் ஜீவா - பெருந்தலைவர் காமராசர் என்று மிகப் பெரிய தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர் அய்யா இளையபெருமாள் அவர்கள்.
தீண்டப்படாத மக்களுக்குக் கல்வியளிப்பது மூலமாக அவர்களை தீண்டாமை இழிவில் இருந்து மீட்டெடுக்க முடியும் என்று சுவாமி சகஜானந்தர் திடமாக நம்பினார். அதற்காக, நந்தனாரையே ஒரு அடையாளமாக அவர் தேர்ந்தெடுத்துவிட்டார். அப்படிப்பட்ட சுவாமி சகஜானந்தரை பெரியவர் இளைய பெருமாள் பின்பற்றினார்.
பெரியவர் இளையபெருமாள் மீது தலைவர் கலைஞர் மிகப்பெரிய மரியாதை வைத்திருந்தார். இளைய பெருமாள் அவர்கள் சிதம்பரத்தை சேர்ந்தவர் என்பதால், “சம்பந்தி” என்றுதான் வாய்நிறைய அழைப்பார். என்னுடைய பெரியம்மா பத்மா அம்மையாரின் ஊர் இந்த சிதம்பரம் தான். அந்த குடும்ப பாச உணர்வோடுதான் தலைவர் கலைஞர் அவர்கள் பழகினார்.
1980-ஆம் ஆண்டு தேர்தலில், தலைவர் கலைஞர், அம்மையார் இந்திரா காந்தி, பெரியவர் இளையபெருமாள் ஆகிய மூன்று பேரும் திறந்தவெளி காரில் ஊர்வலமாக சென்று வாக்கு கேட்ட காட்சியை இன்றைக்கும் யாராலும் மறக்க முடியாது!
1998-ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கர் பெயரிலான தமிழ்நாடு அரசின் விருதை நம்முடைய திருமா அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியதைப் போல, முதன்முதலாக பெரியவர் இளையபெருமாள் அவர்களுக்குத்தான் தலைவர் கலைஞர் அவர்கள் அதை தேர்ந்தெடுத்து வழங்கினார்.
அதேபோல், அய்யா இளையபெருமாள் அவர்கள் சமூகநீதி மாநாட்டை சென்னையில் நடத்தியபோது, அதைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்ற முதலமைச்சர் கலைஞரைத்தான் அழைத்திருந்தார். அவர்கள் இரண்டு பேருக்கும் அப்படி ஒரு நட்பு! சொல்லி வைத்தது போன்று இரண்டு பேருமே 1924-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்திருக்கிறார்கள்!
கலைஞர் ஜூன் 3-ஆம் தேதி! பெரியவர் இளையபெருமாள் ஜூன் 26-ஆம் தேதி! “சலிப்பேறாத சமூகத் தொண்டர்” என்று இளையபெருமாள் அவர்களை தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வார். இந்த நட்பின் தொடர்ச்சியாகதான் பெரியவர் இளையபெருமாள் அவர்களின் பணிகளை சிறப்பிக்க, இந்த கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அவருக்கு நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2023-ஆம் ஆண்டு 110 விதியை பயன்படுத்தி நான் அறிவித்தேன்.
இது ஏதோ பெரியவர் இளையபெருமாள் அவர்களுக்கு புகழ் சேர்க்க மட்டும் என்று நினைத்துவிடாதீர்கள்! இது, திராவிட மாடல் அரசு அவருக்கு செலுத்துகின்ற நன்றிக்கடன்! இப்படிப்பட்ட அடையாளங்களால், குறியீடுகளால், நினைவுச் சின்னங்களால் மட்டுமல்ல, உண்மையான சமூகநீதி அரசாக ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக செயலிலும் பல சாதனைகளை செய்திருக்கிறோம். பட்டியல் பெரியதாக இருக்கிறது.
சொல்வதற்கு நேரம் தான் இல்லை – ஆனால், நெஞ்சை நிமிர்த்திச் சொல்கிறேன் – உறுதியாக சொல்கிறேன் – தமிழ்நாடு வரலாற்றிலேயே திராவிட மாடல் அரசில் தான் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு அதிகமான திட்டங்களை தந்திருக்கிறோம். ஆனால், இந்தத் திட்டங்கள் மட்டும் போதுமா? என்று கேட்டால், போதாது.
சுயமரியாதைச் சமதர்மச் சமூகத்தை உருவாக்க நாம் இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும். அதையும் திராவிட மாடல் அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அப்படித்தான், ‘காலனி’ என்ற சொல்லை அரசு ஆவணங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்!
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களின் சாதிப் பெயரில் இறுதி எழுத்து, ‘ன்’ என முடியாமல் ‘அர்’ விகுதியோடு மரியாதையாக இருக்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். அதற்காக தொடர்ந்து போராடுவோம்.
சாதி அடையாளத்துடன் இருந்த பள்ளி, கல்லூரி விடுதிகளை, இனி “சமூகநீதி விடுதிகள்” என்று மாற்றியிருக்கிறோம்!
நம்முடைய செயல்கள் மூலம் இன்றைக்கு, நாளைக்கே எல்லாம் மாறிவிடும் என்று நான் சொல்ல வரவில்லை! சமூக விடுதலைப் பயணம் என்பது, நீண்ட நெடிய பயணம்! அதற்கு காலம் பிடிக்கும்! ஆனால், எல்லாம் மாறும்; எல்லாம் மாறும்! நிச்சயம் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மாற்றுவேன்!
அதற்காக திராவிட மாடல் அரசு சமூக விடுதலைக்கு தன்னுடைய பங்களிப்பை எப்போதும் உறுதியாக செலுத்தும்! அதற்கு பெரியவர் இளையபெருமாள் போன்ற தலைவர்களின் வாழ்வும் பணியும் நமக்கு வழிகாட்டட்டும்! ஐயா இளையபெருமாள் புகழ் வாழ்க! வாழ்க! என வாழ்த்தி, ஒரு அறிவிப்பு என்ன அறிவிப்பு என்று கேட்டால்,
ஒரு சிறப்பு அறிவிப்பு – இவ்வளவு பேசிவிட்டு, எதுவும் சொல்லாமல் போய்விட்டால், பன்னீர்செல்வமும், கணேசனும் என்னை விடமாட்டார்கள்.
நான் முதலமைச்சர், இது அரசு நிகழ்ச்சி, இந்த மாவட்டத்திற்கு ஏதாவது சிறப்பு சேர்க்கக்கூடிய வகையில் அறிவிப்பு வெளியிடக்கூடாதா? என்று கேட்பார்கள் – அவர்கள் மட்டுமல்ல, எம்.பி.-ஆக இருக்கக்கூடிய திருமாவளவனும் கேட்பார்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கேட்பார்கள் – அதிலும் முக்கியமாக நம்முடைய வேல்முருகன் அவர்கள் கேட்காமல் விடமாட்டார். அதற்காக ஒரு அறிவிப்பு:
கடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி பகுதிகளில் வாழும் மகளிருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில், குறிஞ்சிப்பாடி அருகில் இருக்கும் கொடுக்கன்பாளையத்தில், 150 ஏக்கர் பரப்பளவில், தோல் அல்லாத காலணி மற்றும் காலணிகளுக்கான உதிரிபாகங்கள் உற்பத்திக்கான பெரும் தொழில் பூங்கா அமைக்கப்படும்.
சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், 75 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள இந்த தொழில் பூங்காவில், சுமார் 12 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இப்படி ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மகளிர், மாணவர் விவசாயிகள் என்று எல்லோருக்கும் எல்லாம் வழங்கி, என்றும் உங்களுடன் இந்த ஸ்டாலின் நிற்பேன், நிற்பேன்!