முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (15.7.2025) கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில், தமிழ்நாட்டிலுள்ள கடைகோடி மக்கள், அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் / திட்டங்களை, அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும், “உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர், சிறப்பு முகாமில் கலந்து கொண்ட மக்களிடம் விண்ணப்பங்களை பெற்று கொண்டு, விவரங்களை கேட்டறிந்து, மனுக்கள் பதிவு செய்யப்படுவதை ஆய்வு செய்தார்.
முதலமைச்சர் அவர்கள், மக்களின் குறைகளை வீட்டிற்கே சென்று கேட்டறிந்து தீர்வு காணும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், ஜீலை 15-ஆம் தேதி முதல் நவம்பர் 2025 வரை மாநிலம் முழுவதும் 10,000 முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
இத்திட்டத்தில், அனைத்து மாவட்டங்களிலும் முதற்கட்டமாக, இன்று முதல் 15.08.2025 வரை 3,563 முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இதில் 1,428 முகாம்கள் நகர்ப்புறங்களிலும், 2,135 முகாம்கள் ஊரகப் பகுதியிலும் நடைபெறும்.
இந்த முகாம்கள் நடைபெறும் பகுதிகளில், இத்திட்டம் குறித்த விழிப்புணர்வுப் பணிகள், விண்ணப்பம் மற்றும் அரசு வழங்கும் சேவைகளைப் பெறத் தேவையான தகுதிகள்/ஆவணங்கள், ஆகிய விவரங்கள் அடங்கிய தகவல் கையேட்டினை வழங்கும் பணியினை தன்னார்வலர்கள், அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்களுடன், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள, விடுபட்ட பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என்ற விவரமும் தன்னார்வலரால் தெரிவிக்கப்படுகிறது. முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது.
“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழான, முகாம்களில் நகர்ப்புறப் பகுதிகளில் 13 அரசுத் துறைகளின் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறைகளின் 46 சேவைகளும் வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்களின் மீது, உடனடியாகத் தீர்வு கிடைக்கக்கூடிய இனங்களில் உடனடியாகத் தீர்வு காணப்படும்.
பிற இனங்களில் அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். முதலமைச்சர் அவர்கள், 11.7.2025 அன்று தலைமைச் செயலகத்தில், மாவட்டங்களில் தன்னார்வலர்களால் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் குறித்து வீடு வீடாக சென்று மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணர்வு பணிகள், முகாம்கள் தொடர்பான முன்னேற்றப்பணிகள், முகாம்களில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதருவது ஆகியவை குறித்து, மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், பொதுமக்கள் அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகளை, அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே பெற்றுக்கொள்ள வசதியான, அரசின் மிக முக்கியமான முன்னெடுப்பு, இத்திட்டம் என்றும், இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது சரியான தீர்வினை வழங்கும் வகையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் அனைவரும் பணியாற்றிட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
இத்திட்டத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். வீடு, வீடாக விழிப்புணர்வு பணி மேற்கொள்வதற்கும், முகாம்களை ஏற்பாடு செய்வதற்கும், ஒவ்வொரு ஒன்றியம், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கும் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 378 “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில் ஊரகப் பகுதிகளில் 248 முகாம்களும், நகர்ப்புற பகுதிகளில் 130 முகாம்களும் நடைபெறும். சிதம்பரம் நகராட்சியில் மட்டும் 13 முகாம்கள் நடத்தப்படும்.
முதலமைச்சர் அவர்கள் சிதம்பரத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை தொடங்கி வைத்து, ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே, காதொலி கருவி வேண்டி விண்ணப்பித்த சபரீஷ் என்ற மாற்றுத்திறனாளி பயனாளிக்கு காதொலி கருவியையும், மருத்துவ காப்பீட்டு அட்டை வேண்டி விண்ணப்பித்த திருமதி செந்தமிழ் செல்வி என்ற பயனாளிக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டு அட்டையும், மின்சார இணைப்பு பெயர் மாற்றம் வேண்டி விண்ணப்பித்த பெருமாள் என்ற பயனாளிக்கு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான ஆணையினையும் வழங்கினார்.
மேலும், “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் வேளாண்மை – உழவர் நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை போன்ற பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்களை விளக்கி அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்.
முதலமைச்சர் அவர்களால் சிதம்பரத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட இன்றையதினமே தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் அந்தந்த மாவட்டங்களைச் சார்ந்த அமைச்சர் பெருமக்களால், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களால் முகாம்கள் தொடங்கி வைக்கப்பட்டு, மக்களிடம் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும்.