RSS விடுக்கும் கட்டளைகளை நிறைவேற்றுகிற அரசாக பாஜக செய்லபடுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
கடந்த 11 ஆண்டுகளாக, இந்திய ஜனநாயகம், அதன் நிறுவனங்கள், பொருளாதாரம், ஊடகங்கள் மற்றும் சமூக அமைப்பு ஆகியவற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. பாரதிய ஜனதா கட்சி ஒரு சுதந்திரமான அரசியல் சக்தியாக இல்லாமல் இன்று இரண்டு ஆதிக்கமான மற்றும் தேர்ந்தெடுக்கப்படாத அதிகார மையங்களான ராஷ்ட்டிரிய சுயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்.) மற்றும் கௌதம் அதானியின் வணிக பேரரசின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்கிற வகையில் செயல்பட்டு வருகிறது.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கெடுத்துக் கொள்ளாத இயக்கம் ஆர்.எஸ்.எஸ். ஆனால், மதநல்லிணக்கத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணித்த மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவுக்கு மூளை சலவை செய்த இந்துத்வா சக்திகளில் ஆர்.எஸ்.எஸ்.க்கு பெரும் பங்கு இருக்கிறது.
இந்தியா விடுதலையடைந்த பிறகு, தேசிய கொடியை ஏற்றுக் கொள்ள மறுத்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மறுத்த இயக்கம் தான் ஆர்.எஸ்.எஸ். டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் தலைமையில் தயாரிக்கப்பட்ட அரசமைப்புச் சட்டம் மனுஸ்மிரிதி அடிப்படையில் இல்லை என்ற காரணத்தினால், அதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்க்கர் விமர்சனம் செய்ததை எவரும் மறுத்திட இயலாது. இந்திய மக்களை பிளவுபடுத்துகிற அரசியலை ஏறத்தாழ 75 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். நடத்தி வருகிறது. அதை எதிர்த்து தான் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் மக்கள் ஒற்றுமை பயணத்தை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இன்றைய பா.ஜ.க. அரசு, ஆர்.எஸ்.எஸ். தலைமை நிலையத்திலிருந்து விதிக்கப்படுகிற கட்டளைகளை நிறைவேற்றுவதோடு, அதானி நிறுவனம் பொருளாதார ஆதாயம் அடைகிற வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் முக்கிய அமைச்சர்களின் நியமனங்கள் பெரும்பாலும் ஆர்.எஸ்.எஸ். தலைமையால் பரிசோதித்து, பரிந்துரை செய்யப்பட்டவையாகும்.
இதனால் ஆர்.எஸ்.எஸ். விடுக்கிற கட்டளைகளை நிறைவேற்றுகிற அரசாகத் தான் பா.ஜ.க. செயல்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். ஒரு வழிகாட்டி அமைப்பு என்பதோடு மட்டுமல்லாமல் பா.ஜ.க. அரசை கட்டுப்படுத்துகிற வகையிலும் செயல்படுகிறது. பிரதமர் மோடி பொது தோற்றத்தில் சுதந்திரமாக இருப்பது போல் தோன்றினாலும், கல்வி, கலாச்சாரம், உள்நாட்டு பாதுகாப்பு வரை அனைத்து முக்கிய சித்தாந்த கொள்கை பாதைகளும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அறிவுரைக்கு உட்பட்டவையேயாகும். இதற்கு அரசியலமைப்பு சட்டம் தடையாக இருந்தாலும் பல்வேறு நிறுவனங்களின் ஆதரவோடு அந்த பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆர்.எஸ்.எஸ். ஒரு தேர்ந்தெடுக்கப்படாத பொறுப்பற்ற அமைப்பு. ஆனால், அதன் மூத்த தலைவர்கள் ஒன்றிய அமைச்சர்களுடன் வழக்கமான தொடர்புகளை வைத்துக் கொண்டு செயல்படுகின்றனர். கல்வி நிறுவனங்களில் நியமனங்கள் மற்றும் வரலாறு பாட புத்தகங்கள், சிறுபான்மையின பிரச்சினைகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை வடிவமைக்கின்றனர்.
இதன் காரணமாகத் தான் என்.சி.இ.ஆர்.டி. பாட புத்தகங்களை மாற்றியமைத்தல், நிறுவனங்களில் மதச்சார்பற்ற மதிப்புகளை அளித்தல், அல்லது வெறுப்பு பேச்சை ஊக்கப்படுத்துதல் போன்ற பா.ஜ.க.வின் செயல்கள், ஜனநாயகம் மற்றும் பன்முகத் தன்மை கொண்ட குடியரசாக அல்லாத ஒரு பெரும்பான்மை இந்து ராஷ்டிரியத்தை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸ். நோக்கத்துடன் ஒத்துப் போகிற வகையில் தான் அமைந்திருக்கிறது. கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பது முதல் மாநில முதல்வர்களை தேர்வு செய்வது வரை, பெரும்பாலும் திரைக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ். தீவிரமான பங்கு வகிக்கிறது.
பா.ஜ.க.வின் முக்கிய திட்டங்கள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். இலக்கை நோக்கியே பிரதிபலிக்கின்றன. இராமர் கோயில் கட்டுவது, அரசமைப்புச் சட்டத்தில் 370-வது பிரிவை நீக்குதல் மற்றும் ஒரே சிவில் சட்டம் போன்ற முக்கிய நடவடிக்கைகள் பா.ஜ.க.வின் கண்டுபிடிப்புகள் அல்ல. அவை ஆர்.எஸ்.எஸ்.சின் நீண்டகால கோரிக்கைகளாக இருக்கின்றன. அதை பா.ஜ.க. அரசு ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது.
ஒன்றிய பா.ஜ.க. அரசு, ஆர்.எஸ்.எஸ். ஆலோசனைகளை கேட்பது போல, இன்னொரு பக்கம் அதானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக ஆதாயம் தேடுகிற வகையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் அதானி குழுமம், துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின் உற்பத்தி மற்றும் சிமெண்ட் உற்பத்தி போன்ற முக்கிய துறைகள் என அனைத்தையும் ஏகபோகமாக கைப்பற்றி வருகின்றன. அதேநேரத்தில் சாதாரண குடிமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.
இந்தியாவின் வளர்ச்சி என்பது, அதானி உள்ளிட்ட 1 சதவிகித கார்ப்பரேட்டுகள் பயனடைந்து நாட்டின் சொத்து மதிப்பில் 70 சதவிகிதம் அவர்களால் குவிக்கப்பட்டு வருகிறது. இதனால், சமூகத்தில் சமநிலையற்றத் தன்மை உருவாகி வருகிறது. மோடி அரசின் தீவிர ஆதரவு காரணமாக 2014 இல் அதானியின் நிகர சொத்து மதிப்பு 2.9 பில்லியன் டாலராக இருந்தது, 2022 இல் 120 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது.
அதாவது 4,000 சதவிகிதம் சொத்து மதிப்பு உயர்ந்திருக்கிறது. இது பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில் நிகழ்த்தப்பட்ட அசுர வளர்ச்சியாகும். எல்.ஐ.சி. மற்றும் எஸ்.பி.ஐ. ஆகிய நிறுவனங்களின் மூலம், ஹிண்டன்பர்க் அறிக்கையினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து அதானி காப்பாற்றப்படுவதற்கு பிரதமர் மோடி அரசு பெரும் நிதி அளித்து உதவி செய்திருக்கிறது. அதானி குழுமம் எவ்வாறு நிலக்கரி விலைகளை உயர்த்தி முழு நாட்டையும் கொள்ளையடித்தது என்பதை நாளேடுகள் ஆதாரத்துடன் வெளியிட்ட போது கூட, அதுகுறித்து பிரதமர் மோடி பதில் கூற தயாராக இல்லை.
எனவே, பிரதமர் மோடியின் 11 ஆண்டு ஆட்சிக்காலத்தில் ஆர்.எஸ்.எஸ். கட்டளையின் பேரில் இந்துத்வா அரசியல், அதானிக்கு ஆதரவான நடவடிக்கைகளின் மூலமாக பெரும் சொத்து குவிப்பு, அதன்மூலம் தேர்தல் பத்திர நன்கொடை வசூல் என பா.ஜ.க. அரசு செயல்படுவதன் மூலம் 146 கோடி மக்களின் வாழ்க்கை கடுமையாக சீரழிக்கப்பட்டு வருகிறது. மோடி ஆட்சியை பின்னால் இருந்து இயக்குகிற இந்த நச்சு சக்திகளை எதிர்த்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் தீவிர பரப்புரை மேற்கொண்டு அதை முறியடிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.