திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ், தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவகாரத்தில் தனுஷின் சகோதரரை கடத்தியது தொடர்பாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், அதிமுக சின்னத்தில் நின்று கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்றவருமான பூவை ஜெகன்மூர்த்தியை போலீசார் தேடி வந்தனர்.
இதனிடையே அவர் முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி பூவை ஜெகன்மூர்த்திக்கு உத்தரவிட்டது. அதன்படி அவர் விசாரணைக்கு ஆஜரானார்.அப்போது காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
அதனை தொடர்ந்து காவல்துறை ஜெகன் மூர்த்தியிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற முன் ஜாமீன் வழக்கு விசாரணையின் போது போலீசார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'ஒட்டு மொத்த கடத்தல் சம்பவத்துக்கும் மூளையாக செயல்பட்டது பூவை ஜெகன்மூர்த்தி தான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீஸ் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை. அவரை கைது செய்து விசாரிக்க வேண்டியது உள்ளது. முன்ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார்.
இந்த சம்பவத்தில் கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமிற்கு தொடர்பு உள்ளது. சம்பவத்தின்போது பூவை ஜெகன்மூர்த்தியும், ஜெயராமும் சந்தித்துள்ளனர். அதற்கு ஆதாரங்கள் உள்ளன. வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளது. தனது அலுவலக கார் கடத்தலில் பயன்படுத்தப்பட்டது என்பதை கூடுதல் டி.ஜி.பி.ஜெயராம் மறுக்கவில்லை. பூவை ஜெகன்மூர்த்திக்கும், கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமிற்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்கப்பட வேண்டியது உள்ளது. எனவே, முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என வாதாடினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "சிறுவன் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட மகேஸ்வரி என்பவர் அளித்த வாக்குமூலம் மற்றும் செல்போன் உரையாடல்களில் இருந்து இந்த சம்பவத்தில் மனுதாரருக்கு தொடர்பு உள்ளது என்பதற்கு ஆரம்பகட்ட முகாந்திரங்கள் உள்ளன. மனுதாரரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என உத்தரவிட்டார். ஜெகன்மூர்த்தி மனு தள்ளுபடியான நிலையில் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தி குடும்பத்துடன் தலைமறைவு ஆகியுள்ளார்.
இதன் காரணமாக ஜெகன்மூர்த்தியை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெகன் மூர்த்தி வீட்டு பணியாட்கள் நண்பர்களிடம் சிபிசிஜடி போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.