அரசியல்

“தமிழரின் தொன்மையை அழிக்க துடிக்கும் பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ்!” : செல்வப்பெருந்தகை கண்டனம்!

பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ்-ஐ கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை.

“தமிழரின் தொன்மையை அழிக்க துடிக்கும் பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ்!” : செல்வப்பெருந்தகை கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

கீழடி அகழாய்வு ஆராய்ச்சி மூலம் தமிழரின் பெருமை வெளிப்படும் என்று அதை மறைக்க முற்படுவதும், பிரிவினைவாத அரசியல் தமிழ்நாட்டில் செல்லுபடியாகாது என அறிந்து, முருகரை பிரச்சாரத்திற்கு பயன்படுத்த முற்படுவதுமான செயல்களில் ஈடுபடும் பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ்-ஐ கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ளவை பின்வருமாறு,

2014 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை கீழடி அகழாய்வுப் பணிகளை மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணா பல்வேறு ஆதாரங்களை அறிவியல் பூர்வமாக வெளிக் கொண்டு வந்தார். ஆனால், மேலும் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த அறிவியல் ஆதாரங்கள் வேண்டும் என்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

தமிழர்கள் 5,350 ஆண்டு பழமை கொண்டவர்கள், தொழில்நுட்பங்களை கொண்டவர்கள், மூத்த நாகரீகம் படைத்த முதுமக்கள் என்று உலக ஆய்வு முடிவுகள் ஒப்புக் கொண்டுள்ளன. ஆனால், தமிழர்களுக்கு எதிரான ஒன்றிய பா.ஜ.க. அரசு மட்டும் அதை ஏற்க மறுக்கிறது. இந்நிலையில், கீழடி அகழாய்வு அறிக்கையை சமர்ப்பித்த தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணாவை உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவிற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு பணியிட மாற்றம் செய்திருக்கிறது.

இதன்மூலம் பல நூற்றாண்டுகளாக போராடி வெளிக் கொண்டுவந்த வரலாற்றை அழிக்க ஒவ்வொரு நாளும் பா.ஜ.க. அரசு முயற்சி செய்து வருகிறது. தமிழ் பாரம்பரியத்தின் உண்மை குறித்த அறிவியல் பூர்வமான ஆதாரங்களை வெளிக் கொணர்ந்த அமர்நாத் பழிவாங்கப்பட்டிருக்கிறார். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றேன்.

முதலில் கீழடியில் ஒன்றுமே இல்லை என்றார்கள். அடுத்து ஆய்வு அதிகாரியை இடம் மாற்றினார்கள். பிறகு இனிமேல் நிதி ஒதுக்க மாட்டோம் என்றார்கள். கடைசியாக சமர்ப்பித்த அறிக்கையை இரண்டு ஆண்டுகள் கிடப்பில் போட்டார்கள். இப்போது வெளிக் கொணர்ந்த ஆதாரம் போதவில்லை என்கிறார்கள்.

அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது தொடர் கதையாக இருக்கிறது. கண்டுபிடிக்கும் காரணங்கள் தான் வேறு வேறாக இருக்கிறது. தமிழர்களின் தொன்மையான நாகரீகத்தை வெளிக் கொணர்ந்த கீழடி அகழாய்வு அறிக்கையை ஏற்க மறுக்கிற பா.ஜ.க.வினர் மதரீதியாக அணி திரட்ட தமிழ்நாட்டில் முயற்சித்து வருகிறார்கள்.

அமர்நாத் ராமகிருஷ்ணா
அமர்நாத் ராமகிருஷ்ணா

தமிழ்நாட்டில் அரசிலையும், மதத்தையும் கலக்கிற ஒரு உத்தியின் அடிப்படையில் இப்போது மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துகிறார்கள். இதுகுறித்து கருத்து கூறிய தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் ‘இப்போது முருகனை கையில் எடுத்துள்ளோம். அடுத்தாண்டு தமிழ்நாட்டை கையில் எடுபோம்” என்று கூறியிருக்கிறார்.

முருகனை கையில் எடுத்தால் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முடியும் என்கிற அரசியல் சூத்திரத்தை எப்படி கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை. மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு மத வெறுப்பு அரசியல் நடத்தும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் அரசியல் ஜோக்கர் பவன் கல்யாண் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இவர்களை அழைத்து விட்டு இது அரசியல் கட்சி மாநாடு அல்ல, யாரும் அரசியல் பேச மாட்டார்கள் என்று தமிழர்கள் காதில் பூ சுற்றுவதற்கு நயினார் நாகேந்திரன் முயற்சிக்கிறார். இது முருக பக்தர்கள் மாநாடு என்று கூறி, தமிழ்க் கடவுள் முருகன் என்றார் நயினார் நாகேந்திரன். ஆனால் கோயில்களில் தமிழ் அர்ச்சனையை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று தடுத்து நிறுத்த வாதாடியவர்கள் இன்று முருகனை தமிழ்க் கடவுள் என்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்., சனாதன, பாசிச கொள்கைகளை கொண்ட பா.ஜ.க.வின் சுயரூபத்தை தான் மதுரை முருக பக்தர்கள் மாநாடு வெளிப்படுத்துகிறது. முருக பக்தர்கள் செல்ல வேண்டிய இடம் அறுபடை வீடுகளே தவிர, பா.ஜ.க. மதுரையில் நடத்துகிற முருக பக்தர்கள் மாநாடு அல்ல. முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் பா.ஜ.க. அரசியல் மாநாடு நடத்துகிறது.

அரசியல் மாநாடு என்று சொன்னால் தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்காது என்பதால், முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையின் மூலமாக மக்களைத் திரட்ட முயற்சிக்கிறார்கள். முன்னாள் பா.ஜ.க. தலைவர் எல். முருகன் கடந்த காலங்களில் ஊர் ஊராக வேலைத் தூக்கிக் கொண்டு அலைந்தார்.

ஆனால், அவர் தேர்தலில் தோல்வியடைந்ததோடு, பதவியை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது நயினார் நாகேந்திரன் முருகனை கையில் எடுத்திருக்கிறார். முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் பா.ஜ.க. விரிக்கும் மாய வலையில் நிச்சயம் தமிழ்நாட்டு மக்கள் எவரும் சிக்க மாட்டார்கள்.

எனவே, கீழடி அகழாய்வு அறிக்கையை முடக்குவதையும், முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் மக்களை ஏமாற்ற முயற்சிக்கிற பா.ஜ.க.வையும் தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

banner

Related Stories

Related Stories

live tv