தி.மு.கழக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா இன்று செய்தியாளர்களைச் சந்தித்து உரையாடினார். அப்போது பேசிய அவர், "நேற்றைய தினம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் மதுரையில் பேசிய பேச்சை அனைவரும் அறிவோம். நாட்டின் உள்துறை அமைச்சர் என்ற தகுதியை மறந்து , அவர் பேசியதை சுருக்கி சொல்ல வேண்டும் என்றால், அப்பட்டமான பொய் , அறுவருப்பான வஞ்சகம் , பிளவு நோக்கம் கொண்ட சூதுரை. இந்த மூன்றையும் தவிர அவரின் பேச்சில் என்னால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.
நாட்டின் உள்துறை அமைச்சர் ஒரு மாநிலத்திற்கு வரும் போது , அவருக்கு இருக்கும் தகுதி , பொறுப்பு , கடமை உணர்ச்சி ஆகியவற்றை கிஞ்சிற்றும் கவலைகொள்ளாமல் , அவதூறுகளை அள்ளி வீசுவதும்; மாற்றுக் கட்சி ஆட்சி அந்த மாநிலத்தில் நடந்தால், ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை சொல்வதும் , மதவாத பிளவை வேண்டுமென்றே உருவாக்கி, அமைதியாக இருக்கும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி, கலவரத்தை தூண்டி, அதன் மூலம் அரசியல் ஆதாயத்தை பெறமுடியுமா என்ற அருவருப்பான உணர்ச்சிதான் அவருடைய பேச்சில் வெளிபட்டுள்ளது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு அழகல்ல. மாநில - ஒன்றிய அரசிற்கு இடையே இருக்கும் சுமூக உறவிற்கு குந்தகம் விளைவிக்கும் பேச்சை அவர் பேசியுள்ளார்.
அவர் பேச்சை ஒவ்வொரு வரியாக ஆதாரத்தோடு எங்களால் பொய் என நிரூபிக்க முடியும். தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருப்பதை, பாஜக விரும்பாமல், அரசியலுக்காக மிகவும் கீழ்த்தரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள அமித்ஷாவின் பேச்சை - போக்கை ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அமைதி, வளர்ச்சி திட்டங்கள், ஒன்றிய அரசின் நிதி பல நேரங்களில் கிடைக்காவிட்டாலும் மாநில அரசின் நிதியை கொடுத்து வளர்ச்சி திட்டப்பணிகள் தடைபடாமல் விரைவாக வழங்கி நடைமுறைப்படுத்துவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்றிய அரசும் , பாஜக கட்சியும், அமித்ஷாவை வரவைத்து இப்படி ஒரு கேலிக்கூத்தான, அருவருப்பான அரசியல் நாகரிகத்திற்கு புறம்பான காரியத்தை அரங்கேற்றியுள்ளார்கள். அமித்ஷா என்ற தனிநபருக்கு மட்டும் அல்ல , அவர் வகிக்கும் பதவிக்கும் இது அழகல்ல. இந்த அரசியல் சித்து விளையாட்டுகளை அவர் இத்துடன் நிறுத்திக்கொள்வது நல்லது.
மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் நேரடி நிதி வருவாய் எவ்வளவு? தற்போது எவ்வளவு? நான்கு மடங்கு நேரடி நிதி வருவாய் உயர்ந்துள்ளது. மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்துடன் ஒப்பிட்டால் தமிழ்நாட்டிற்கு பாஜக கொடுக்கும் நிதி மிககுறைவாகவே உள்ளது.
அமித்ஷாவை பார்த்து திமுகவிற்கு எதற்கு ஷாக் அடிக்க வேண்டும்? திமுகவை பார்த்து பாஜக விற்கு ஷாக் அடித்த காரணத்தால்தான் உள்துறை அமைச்சரே வந்துள்ளார். பாஜகவின் எந்த மாதிரியான பிளவுவாதமும், மத அரசியலும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை. எல்லா தேர்தல்களிலும் மக்கள் திமுகவின் பின்னால் நிற்கிறார்கள். இதை புரிந்துகொள்ள முடியாமல், ஜீரணித்துக்கொள்ள முடியாமல் இவர்கள் பேசுவதை பார்த்து எங்களுக்கு எதற்கு பயம்? இவர்களைப் பார்த்து சிரிப்புதான் வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு 5 முறை நாட்டின் பிரதமர் தம்ழிநாடு வந்தார். அவரின் வருகையே சொல்லும் யாருக்கு பயம் என்று.
திமுக வின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டோம். அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதி மட்டும் நிலுவையில் உள்ளது. ஆனால் அதற்கும் ஒரு குழு அமைத்துள்ளார் முதல்வர். வாக்குறுதிகளில் சொல்லாத பலவற்றை இந்த அரசு செய்துள்ளது. எங்கு விவாதத்தை வைத்தாலும் நான் வர தயார். ஆனால் இந்தியில் மட்டும் பேசக்கூடாது. ஒன்றிய நிதி ஒதுக்க வேண்டிய எய்ம்ஸுக்காக இன்னமும் மாநில அரசு காத்துக்கொண்டுள்ளது.
அமித்ஷா , மோடி ஆகியோரை பார்த்து எல்லாம் எங்களுக்கு எந்த பயமும் இல்லை. அவர்களுக்கு பின்னால் ஒரு சித்தாந்தம் ஒளிந்துகொண்டு மற்ற இடங்களில் வெற்றி பெறுகிறது. ஆனால் இங்கு அதனால் வெற்றி பெற முடியாததற்கு காரணம் எங்களிடம் அதற்கான மாற்று சித்தாந்தம் உள்ளது. திராவிட இயக்க சித்தாந்தம் இருக்கும் வரை அவர்களால் இங்கு ஆட்சிக்கு வர முடியாது. நாங்கள் டெல்லியோ, ஹரியானவோ, மகாராஷ்டிராவோ அல்ல; நாங்கள் தமிழ்நாடு.
எந்த அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு வர போகிறது என திமுக தொடர்ந்து கேள்வி எழுப்பினாலும் எந்த பதிலும் பாஜகவிடம் இல்லை. 800க்கும் அதிகமான இருக்கைகளை வைத்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைக் கட்ட என்ன அவசியம்? மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பைச் செய்தால் - கொண்டு வந்தால் தென் இந்தியா முற்றிலும் பாதிக்கப்படும். தென் இந்திய மாநிலங்களின் துணை இல்லாமலே எந்த ஒரு மசோதாவையும் அவர்களால் நிறைவேற்ற முடியும் என்பதுதான் அதற்குள் இருக்கும் சூது. இதை முறியடித்த ஒரே தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின்தான். அதை டெல்லி வரை அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே மதுரையில் முருகன் மாநாட்டை நடத்துகின்றனர். இந்து சமய அறநிலயதுறை சார்பாக நடத்தப்பட்ட மாநாட்டை போல் அல்லாமல், இவர்கள் மதவாதத்தைத் தூண்டி விட்டு, அதன் மூலம் சிறுபான்மையினருக்கு எதிராக அரசியல் செய்து ஆதாயம் தேட முயற்சிப்பதை மதுரை மக்களே விரும்பவில்லை. தமிழைப் பற்றி இவ்வளவு பேசும் அமித்ஷா, கிழடி ஆய்வையும், இரும்பு பயன்பாட்டின் அறிக்கையையும் ஒன்றிய அரசு திரும்ப திரும்ப ஏன் நிராகரிக்கிறது என தெரியவில்லை. தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும், திராவிடத்திற்கும் எதிரான மனநிலையை அவர்களே வெளிக்காட்டிக் கொள்கிறார்கள். அதற்கான தண்டனையை 2026 தேர்தலில் நிச்சயம் பாஜக அறுவடை செய்யும். இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வட இந்திய மொழிகளின் நிலைமை என்ன என்பதை யோசிக்க வேண்டும். இந்தியைக் கொண்டு வந்தவர்கள், அடுத்ததாக சமஸ்கிருதம் மொழியை கொண்டு வருவார்கள்.
எத்தனை முறை மோடி தமிழகம் வந்தாரோ அத்தனை வாக்கு வித்யாசம் நாடாளுமன்ற தேர்தலில் திமுக விற்கு கிடைத்தது. தற்போது எத்தனை முறை அமித்ஷா தமிழகம் வருகிறாரோ அத்தனை வெற்றி தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பற்றி பேச பாஜக விற்கு எந்த தகுதியும் இல்லை. பில்கிஸ் பானு, மணிப்பூர் போன்றவற்றை பார்த்து மெளனமாக இருந்தார்கள். ஏக இந்தியா - ஒரே தேசம் என்று சொன்னால், ஒடிசா வில் போய், ஒரு தமிழர் உங்களை ஆளலாமா என்று கேட்டவர் எப்படி ஏக இந்திய ஒரே தேசம் என கூறமுடியும். பாஜக வினர் கூறுவது அனைத்தும் பொய். ஆர்.எஸ்.எஸ் ன் இலக்கிற்கு மோடியும் அமித்ஷா வும் பகடைக்காய்.
கூட்டணி ஆட்சிதான் அமையும் என அமித்ஷா கூறியது குறித்து மீண்டும் எடப்பாடி பழனிசாமி தான் தெளிவுபடுத்த வேண்டும். எப்படிப்பட்ட கூட்டணி அமைந்தாலும் அதை எதிர்கொள்ளும் திறன் எங்கள் முதலமைச்சருக்கு உண்டு" என்று கூறினார்.