அரசியல்

“புதிய கல்விக் கொள்கை எனும் மதயானையை எதிர்த்து தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!” : து.முதலமைச்சர்!

சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் எழுதிய ”தேசிய கல்விக் கொள்கை – 2020 எனும் மதயாணை” நூல் வெளியீட்டு விழாவில் துணை முதலமைச்சர் உரை!

“புதிய கல்விக் கொள்கை எனும் மதயானையை எதிர்த்து தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!” : து.முதலமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் எழுதிய ”தேசிய கல்விக் கொள்கை – 2020 எனும் மதயாணை” நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கலந்துகொண்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு,

“முத்தமிழறிஞர் கலைஞர், அன்பில் தர்மலிங்கம் தாத்தா, நம் முதலமைச்சர் அவர்கள், அன்பில் பொய்யாமொழி மாமா இந்தக் கொள்கை நட்பின் தொடர்ச்சியாக, என்னோடு எந்நாளும் கைகோர்த்து நிற்கின்ற, எனது அன்பு நண்பன், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய “தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை” நூல் வெளியீட்டு விழாவில் வரவேற்புரை ஆற்ற வாய்ப்பளித்தமைக்காக, அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாவட்ட கழகச் செயலாளர், சிறந்த சட்டமன்ற உறுப்பினர், சிறந்த அமைச்சர் என எண்ணற்றப் பணிகளைத் திறம்படச் செய்து வரும், என் நண்பர் மகேஷ் அவர்கள் இன்றைக்கு ஒரு புத்தக ஆசிரியராகவும், உயர்ந்து நிற்கின்றார். மிகச் சரியான நேரத்தில், மிக முக்கியமான ஒரு புத்தகத்தை அவர் கொண்டு வந்திருக்கிறார், அவருக்கு அனைவரின் சார்பாக, எனது பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

கல்வியைக் காவிமயமாக்கத் துடிக்கின்ற பாசிஸ்டுகளை, நேருக்கு நேர் நின்று எதிர்க்கின்ற ஒரு காலகட்டத்தில் நம் கல்வித்துறை இன்று இருக்கிறது. இந்த சவாலான சூழ்நிலை நம் முதலமைச்சரின் வழிகாட்டுதலுடன், சாதனைக்கான வாய்ப்பாக மாற்றி வரும், எனது நண்பர் அன்பில் மகேஷ் அவர்களுக்கு, நம் வாழ்த்துக்கள், பாராட்டுகள்.

புதிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை தமிழ்நாட்டிற்குள் புகுந்து, கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை நாசப்படுத்தி விடக்கூடாது என்று, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், 2016-இல் எச்சரித்தார்கள். கலைஞர் அவர்கள் பயன்படுத்திய, அதே வார்த்தையைத் தலைப்பாக்கி, இன்றைக்கு மகேஷ் அவர்கள் இந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும், நண்பர் மகேஷ் அவர்களின் உழைப்பைக் காண முடிகிறது, சவாலையும் காண முடிகிறது. பொதுவாக, எந்த ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டாலும், அதில் சாதக பாதக விஷயங்கள் இருக்கும். ஆனால், பாதகத்தை மட்டுமே கொண்ட ஒன்று என்றால், அது இந்த புதிய கல்விக் கொள்கை மட்டும்தான்.

புதிய கல்விக் கொள்கை எங்கு தொடங்கியது, அது எப்படிக் காவிமயமானது, இதன் உருவாக்கத்தில் ஆர்.எஸ்.எஸ் எப்படி ஊடுருவியது! இப்படிப் பல்வேறு விஷயங்களை, இந்த நூலில் ஆதாரங்களுடனும், புள்ளிவிவரங்களோடும் விவரித்திருக்கிறார் நண்பர் மகேஷ் அவர்கள். மும்மொழிக் கொள்கை என்ற பெயரில், சமஸ்கிருதத்தையும், இந்தியையும் திணிக்கின்ற சூழ்ச்சிக்கான காரணத்தை இந்த நூல் அம்பலப்படுத்துகிறது.

‘விஸ்வகர்மா’ என்ற பெயரில் குலக்கல்வித் திட்டத்தை நுழைக்கும் ஆர்.எஸ்.எஸ்-இன் தந்திரத்தை நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. அதுமட்டுமல்ல மகளிர், திருநர், மாற்றுத்திறனாளிகளின் கல்விக்காக, எந்த ஒரு சிறப்பு அம்சமும் இந்தப் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெறவில்லை.

மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பில் பொதுத் தேர்வு. ஒன்பதாம் வகுப்பு முதல், பன்னிரண்டாம் வகுப்பு வரை செமஸ்டர் தேர்வு என்ற பெயரில், 40 தேர்வுகள். அடுத்து கல்லூரிக்குச் செல்லும்போது தனியாக நுழைவுத் தேர்வு என்று இந்தப் புதிய கல்விக் கொள்கை சொல்கிறது. மொத்தத்தில் யாரெல்லாம் படித்து மேலே வரவேண்டும் என்பதற்குப் பதிலாக, யாரெல்லாம் படிக்கக்கூடாது என்று ஃபில்டர் செய்யும் முயற்சியே புதிய கல்விக் கொள்கை.

“புதிய கல்விக் கொள்கை எனும் மதயானையை எதிர்த்து தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!” : து.முதலமைச்சர்!

யானைக்கு மதம் பிடித்தால், அது எவ்வளவு ஆபத்து என்பது நம் அனைவருக்கும் தெரியும். குட்டியிலிருந்து அந்த யானையை வளர்த்து, பராமரித்து வந்த பாகனைக் கூட அது தூக்கிப்போட்டு மிதித்து கொன்று விடும். ஏனென்றால், மதம் பிடித்த யானைக்கு, வெறி மட்டும் இருக்குமே தவிர, யாரை தாக்குகிறோம், எதற்காகத் தாக்குகிறோம் என்ற அறிவு அதற்கு இருக்காது.

தேசிய கல்விக் கொள்கை என்பது, நாடு முழுவதும் நம் பிள்ளைகளின் படிப்பை, எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற ஒரு ஆவணம். அப்படிப்பட்ட கல்விக் கொள்கைக்கு மதம் பிடித்தால், நம் நாட்டின் எதிர்காலமே சிதைந்து விடும். இந்த விவரம் புரியாமல் இன்றும் சிலர் அதை ஆதரிக்கிறார்கள். அவர்கள் வீட்டுப் பிள்ளைகளின் கல்வியையும் இந்த மதம் பிடித்த கல்விக் கொள்கை, அழித்து விடும் என்பதை, விரைவில் அவர்கள் உணர வேண்டும்.

ஆகவேதான் இதை வீழ்த்துவதற்கான போரில், நம் முதலமைச்சர் அவர்கள் இந்தியாவிலேயே முன்வரிசையில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். நம் குழந்தைகளின் எதிர்காலத்தை எழுதுகின்ற சாக்பீஸை உண்மையில் யார் கைகளில் கொடுப்பது, ஜனநாயகத்தின் கைகளிலா அல்லது சர்வாதிகாரத்தின் கைகளிலா?

என்று இந்தப் புத்தகத்தில் நண்பர் அன்பில் மகேஷ் எழுப்பியுள்ள கேள்வியை நாம் அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ‘என்.இ.பி.’ என்பது இந்தியாவைப் பின்னோக்கி இழுத்துச் செல்வதற்கான வேதகால விஷம்’ என்பதை இந்தப் புத்தகத்தில் அவர் புரிய வைக்கிறார். அந்த விஷத்தை முறியடிக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது.

அதற்கு கல்வியை மீண்டும், மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வந்தே ஆக வேண்டும். இதனை சாத்தியமாக்க, நாம் அனைவரும் இன்று முதல் ஓர் அணியில் நின்று செயல்பட வேண்டும். புதிய கல்விக் கொள்கை எனும் மத யானையை வீழ்த்துவதற்கான போரில், முக்கியமான ஆயுதம்தான் நண்பர் மகேஷ் அவர்களின் இந்தப் புத்தகம். ஆகவே இந்தப் புத்தகம், தமிழ்நாட்டு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரின் கரங்களிலும் போய் சேர வேண்டும்.

தமிழ்நாடு எத்தனையோ சூழ்ச்சிகளை, எதிர்த்துப் போராடி வென்றிருக்கிறது. அதேபோல் இந்த புதிய கல்விக் கொள்கை எனும் மத யானையை எதிர்த்தும், நம் முதலமைச்சர் அவர்களின் தலைமையில், தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்.

banner

Related Stories

Related Stories