ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வந்த அரசை வீழ்த்தி தற்போது அங்கு தாலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. தாலிபான் ஆட்சிக்கு வந்ததும் அங்குள்ள மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் பெண்களுக்கு உண்டான உரிமைகளும் பறிக்கப்பட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது.
அதோடு அங்கு தாலிபனுக்கு எதிரான அமைப்புகள் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டு வருவதால் அங்கு தொடர்ந்து பதற்ற நிலை இருந்து வருகிறது. அதிலும் சமீப சில ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கு இடையே எல்லை பிரச்னைகள், பயங்கரவாதம் தொடர்பாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதனிடையே சமீபத்தில் இந்தியா பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதலை ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசு ஆதரித்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் உறவுகள் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது வரை தாலிபான் அரசாங்கத்தை உலகின் பெரும்பாலான நாடுகள் ஏற்காத நிலையில், இந்தியாவும் ஏற்கவில்லை. இதன் காரணமாக இந்தியாவில் செயல்பட்டு வந்த ஆப்கானிஸ்தான் அரசின் தூதரகமும் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.