பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கப்பட்ட 10 நாட்களில் 1,69,634 மாணாக்கர்கள் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " பொறியியல் சேர்க்கைக்காக தமிழ்நாடு இணையதள மற்றும் விண்ணப்பப்பதிவு 07.05.2025 அன்று தொடங்கப்பட்டது.
இன்று (16.05.2025) மாலை 6.00 மணி நிலவரப்படி 1,69,634 மாணாக்கர்கள் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனர். இதில் 53,624 மாணவர்களும் 48,514 மாணவிகளும் ஆக மொத்தம் 1,02,138 மாணாக்கர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர்.
மாணாக்கர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் தங்களது பொறியியற் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை 06.06.2025 வரை பதிவு செய்து கொள்ளலாம். மாணாக்கர்களுக்கு ஏதேனும்விளக்கங்கள் தேவைப்படின் தமிழ்நாடு முழுவதும் 110 தமிழ்நாடு பொறியியற் மாணாக்கர் சேர்க்கை சேவை மையங்கள் (TFC Centres) நிறுவப்பட்டுள்ளன அந்த சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம்.
மேலும்,1800-425-0110 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவோ அல்லது tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.