மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில், நாடுமுழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி வந்தபோது, அதை பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் எதிர்த்து வந்தனர். 2024 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, ”சாதிவாரி கணக்கெடுப்பு என்பது Urban நக்சல்களின் சிந்தனை. இதனால் நாட்டில் பிளவுவாதமே அதிகரிக்கும்” என பேசினார்.
அதேபோல் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், 'நாம் பிரிக்கப்பட்டால் கொல்லப்படுவோம்' என சாதிவாரி கணக்கெடுப்பிற்கு எதிராக பேசி இருக்கிறார். இப்படி பா.ஜ.க தலைவர்கள் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக தங்களது கருத்துக்களை ஆழமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
அண்மையில் பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பிரதமர் மோடியும் அடிக்கடி பீகாருக்கு சென்று பல்வேறு அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். அதேபோல் பகல்காம் பயங்கரவாத தாக்குதல் நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் பா.ஜ.க அரசுக்கு அவப்பெயரை எற்படுத்தியுள்ளது.
இந்நிலையில்தான்,மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது. ஒன்றிய அமைச்சர் தேஜஸ்வி சூர்யாவும் இதை வரவேற்று, சாதிவாரி கணக்கெடுப்பு வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்று தெரிவித்துள்ளார்.
அதாவது, அரசியல் ஆதாயத்திற்காகவே இந்த முடிவை பா.ஜ.க எடுத்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. அதேநேரம் சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது நடத்தி, எப்போது முடிக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவிக்கவில்லை. இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.