அரசியல்

அடங்காப் பிடாரி ஆளுநரை மக்கள் பேரெழுச்சி கட்டுப்படுத்தும் - CPI மாநில செயலாளர் முத்தரசன் விமர்சனம் !

அடங்காப் பிடாரி ஆளுநரை மக்கள் பேரெழுச்சி கட்டுப்படுத்தும் - CPI மாநில செயலாளர் முத்தரசன் விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆளுநர் ஆர்.என்.ரவியின் அடங்காப் பிடாரி செயல்கள் தொடருமானால், ஜனநாயக உணர்வு கொண்ட மக்கள் பேரெழுச்சி அவரை கட்டுப்படுத்தும் என CPI மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற ஆளுநர் பொறுப்பில் நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி, ஆளுநர் பொறுப்பேற்று கொண்ட ஆரம்ப நாளில் இருந்தே மக்களால் தேர்வு செய்து அமைக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். பாஜகவின் ஒன்றிய அரசு, எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசு நிர்வாகத்தில் தலையிட்டு, நெருக்கடியை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலின் தொடர்ச்சியாகவே தமிழ்நாடு ஆளுநரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

ஆர்.என்.ரவி ஆளுநரின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டு வருவதை எதிர்த்து இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி உட்பட ஜனநாயக சக்திகள் நேரடி போராட்டங்களை நடத்தி வருகின்றன. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து குடியரசுத் தலைவரிடம் புகார் மனுக் கொடுத்துள்ளனர்.

இந்தப் புகாரில் “ஆர்.என்.ரவி ஆளுநர் பொறுப்புக்கு எந்த வகையிலும் பொருத்தம் இல்லாதவர் (ஹிஸீயீவீt)” என்பதற்கான ஆதாரங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், குடியரசுத் தலைவர் இதன் மீது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாத நிலையில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் உரிமை மனுக்களை தாக்கல் செய்து, நியாயம் கோரியது. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்துக் கொண்டிருந்த போது, ஆர்.என்.ரவி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மரபுகளையும், மாண்புகளையும் சிறுமைப் படுத்தி, அவமதித்து வந்தார். பல்கலைக் கழகங்களின் வேந்தர் என்ற முறையில், துணை வேந்தர்கள் கூட்டங்களை நடத்தி, தமிழ்நாடு அரசின் கல்விக் கொள்கைக்கு எதிராகவும், ஒட்டுமொத்த மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் தேசிய கல்விக் கொள்கையை புறக்கடை வழியாக செயல்படுத்த நிர்பந்தித்து வந்தார்.

அடங்காப் பிடாரி ஆளுநரை மக்கள் பேரெழுச்சி கட்டுப்படுத்தும் - CPI மாநில செயலாளர் முத்தரசன் விமர்சனம் !

தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களை கிடப்பில் போட்டு, மக்கள் நலனுக்கும், மாநில உரிமைக்கும் எதிராக செயல்பட்டதுடன், கூட்டாட்சி கோட்பாடுகளை நிராகரித்து வந்தார். இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பு சட்டம் ஆளுநருக்கு வழங்கியுள்ள கடமைப் பொறுப்புகளையும், அதிகார எல்லையினையும் தெளிவுபடுத்தி, ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் சட்டவிரோதமானது என அறிவித்துள்ளது.

இத்தீர்ப்பை தொடர்ந்த ஆளுநர் பொறுப்பில் ஒரு வினாடியும் நீடிக்க தகுதியில்லாத ஆளுநர் ஆர்.என்.ரவி, பொது நிகழ்வுகளில் கூச்சமில்லாமல் கலந்து கொள்கிறார். திருப்பரங்குன்றம் தியாகராசர் கல்லூரியில் நடைபெற்ற கம்பன் விழாவில் பங்கேற்ற ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் பண்புக்கும், கலை, கலாச்சார மரபுக்கும் எதிராக “ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம்” என முழக்கம் எழுப்பியதுடன், அந்த நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களையும் ஜெய் ஸ்ரீராம் என முழக்கம் எழுப்பு மாறு நிர்பந்தித்துள்ளார்.

நீதி மன்றத் தீர்ப்புகளுக்கும். சட்டத்துக்கும் மேலாகவும் தன்னை கருதிக் கொள்ளும் “அடங்கா பிடாரி” ஆர்.என்.ரவியை குடியரசுத் தலைவரும், ஒன்றிய அரசும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துவதுடன், அவரது அடங்காப் பிடாரி செயல்கள் தொடருமானால், ஜனநாயக உணர்வு கொண்ட மக்கள் பேரெழுச்சி அவரை கட்டுப்படுத்தும்"என்று கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories