இந்திய ஒன்றியத்தில் ‘ஆளுநர்’ என்ற பொறுப்பு தொடர்வதற்கு எதிராக தேசிய அளவில் கண்டனங்கள் எழுந்து வரத்தொடங்கியதற்கு, ஒன்றிய பா.ஜ.க.வின் ஆட்சியில் பொறுப்பேற்றிருக்கும் ஆளுநர்களே முக்கிய காரணங்களாக திகழ்கின்றனர்.
தமிழ்நாட்டில் ஆர்.என்.ரவி, மேற்கு வங்கத்தில் சி.வி.ஆனந்த போசு என பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், ஒன்றிய பா.ஜ.க அரசால் பணியமர்த்தப்படும் ஆளுநர்கள், பா.ஜ.க.வின் பிரச்சாரக் குரலாகவே செயலாற்றி வருகின்றனர்.
இதனால், பா.ஜ.க அங்கம் வகிக்காத தமிழ்நாடு அரசு, கேரளா அரசு, கர்நாடகா அரசு, மேற்கு வங்க அரசு உள்ளிட்ட அரசுகள் நிறைவேற்றும் சட்டமன்ற முன்வரைவுகளுக்கு, ஆளுநர்கள் செவிசாய்க்காமல் அரசியலமைப்பிற்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.
ஆளுநர்களுக்கு என்று தனி அதிகாரம் இல்லை என்பது அரசியலமைப்பில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிற போதும், தாங்கள்தான் அனைத்திற்கும் அதிபதி என்கிற அளவிற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியமைக்கும் அரசுகளை பகைமையாக்கி வருகின்றனர் பா.ஜ.க.வின் ஆளுநர்கள்.
அதிலும் குறிப்பாக, ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் உரையை வாசிக்க மறுப்பதில் தொடங்கி, திராவிட மாடல் அரசுடன் பல்வேறு முரண்களில் ஈடுபட்டு வருகிறார்.
அதுபோன்ற முரண்களின் தொடர்ச்சியாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றிய சுமார் 10 முன்வரைவுகளை கிடப்பில் போட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதனைக் கண்டித்தாலும், ஆளுநரின் நடவடிக்கையில் மாற்றமில்லை என்ற காரணத்தால், உச்சநீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்து அதில் தற்போது வெற்றி கண்டுள்ளது தமிழ்நாடு அரசு.
இது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு, சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை கிடப்பில் போட்டு, வேண்டுமென்றே காலம் தாழ்த்திய ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் அறிவுரை வழங்கியுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் அனைத்து அதிகாரங்களும் உள்ளது என்றும் நியமனப் பொறுப்பில் உள்ளவருக்கு குறிப்பிட்ட அதிகாரம்தான் உள்ளது என்றும் கூறி வந்ததை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
அரசியலமைப்பை நீர்த்துப் போகச்செய்யும் பாஜகவின் செயல்பாடுகளுக்கு சவுக்கடி கொடுத்துள்ளது உச்சநீதிமன்றம். இதன்மூலம் அரசியலமைப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆளுநரின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து, உச்சநீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பு வந்துள்ளது. இந்த தீர்ப்பினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வரவேற்கிறேன்” என தெரிவித்துள்ளார்.