“பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகளுக்கு வன உரிமை வழங்குவதில், வன உரிமைச் சட்டம் 2006 செயல்படுத்தப்படும் நிலை குறித்து அரசாங்கம் அறிந்திருக்கிறதா?. அதன் விவரங்கள், மாநில, யூனியன் பிரதேச வாரியாக என்ன?. வன உரிமைகள் சட்டம், 2006 செயல்படுத்தப்பட்டதிலிருந்து, பழங்குடியின மக்களுக்கும் பிற பாரம்பரிய வனவாசிகள் (ஓடிஎஃப்டி)க்கும் வழங்கப்பட்ட தனிநபர் வன உரிமைகள் (ஐஎஃப்ஆர்) மற்றும் சமூக வன (சிஎஃப்ஆர்) உரிமைகளின் எண்ணிக்கை மாநில/யூனியன் பிரதேச வாரியாக எவ்வளவு? என தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி , ராகுல் காந்தி, ராஜா ராம் சிங் ஆகியோர் எழுத்துபூர்வமான கேள்விகளைக் நாடாளுமன்றத்தில் கேட்டிருந்தனர்.
இந்தக் கேள்விகளுக்கு ஒன்றிய பழங்குடி விவகாரங்கள் துறை இணையமைச்சர் துர்கா தாஸ் உய்கி அளித்த பதிலில், “பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகள் (வன உரிமைகளை அங்கீகரித்தல்) சட்டம், 2006 மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளை பெரும்பாலும் செயல்படுத்துவதற்கு மாநில அரசுகளே பொறுப்பாகும். அதே நேரத்தில் பழங்குடியினர் விவகார அமைச்சகம் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடமிருந்து மாதாந்திர முன்னேற்ற அறிக்கையைப் பெறுகிறது.
20 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் வன உரிமைச் சட்டம் செயல்படுத்தப்படுகிறது. உரிமை கோரல் செயல்முறைக்கான நிறுவன கட்டமைப்பை இந்தச் சட்டம் வழங்குகிறது. உரிமை கோரல்கள் முதலில் பெறப்பட்டு, கிராம சபையால் மதிப்பாய்வு செய்யப்பட்டு பின்னர் துணை-பிரிவு நிலைக் குழுவிற்கு அனுப்பப்படும். பின்னர், மாவட்ட அளவிலான குழு கோரிக்கைகளை முடிவு செய்கிறது. இந்தக் குழுக்கள் மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்களால் அமைக்கப்படுகின்றன. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தெரிவித்தபடி, ஒட்டுமொத்தமாக பிப்ரவரி 28, 2025 வரை, 23 லட்சத்து 85 ஆயிரத்து 334 தனிநபர் மற்றும் 1 லட்சத்து 18 ஆயிரத்து 119 சமூக உரிமைகள் என மொத்தம் 25 லட்சத்து 3 ஆயிரத்து 453 உரிமைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதேபோல், கிராம சபையளவில் தாக்கல் செய்யப்பட்ட 48,99,903 தனிநபர் உரிமை கோரல்களில் மொத்தம் 18,03,183 உரிமை கோரல்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் 33 ஆயிரத்து 119 தனி நபர் உரிமை கோரல்களூம், 1,548 சமூக உரிமை கோரல்களும் பெறப்பட்டன. அவற்றில் 15 ஆயிரத்து 442 தனிப்பட்ட உரிமைகளும், 1066 சமூக உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன 12 ஆயிரத்து 711 கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. 5 ஆயிரத்து 448 உரிமை கோரல் விண்ணப்பங்கள் நிலுவையில் இருக்கின்றன.
பழங்குடி சமூகம் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகள் (OTFDகள்) என வழங்கப்பட்ட உரிமைகளின் பிரிக்கப்பட்ட விவரங்கள் பராமரிக்கப்படுவதில்லை. இந்த நடவடிக்கைகளை செயல்படுத்துதல் மாநில அரசுகளின் பொறுப்பு என்பதால் ஒன்றிய அரசினால் பராமரிக்கப்படுவதில்லை.
FRA-வின் கீழ் பட்டாக்கள்/உரிமைகள் வழங்குவதற்காக பெறப்பட்ட உரிமை கோரல்கள், வழங்கப்பட்ட உரிமைகள், நிராகரிக்கப்பட்ட உரிமை கோரல்கள் பற்றிய விவரங்கள் அமைச்சகத்தின் வலைத்தளத்தில் - FRA- MPR- https://tribal.nic.in/FRA.aspx இல் கிடைக்கிறது.
வனத்தில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு எதிரான பாதுகாப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர் SDLC மற்றும் DLC (பிரிவு 6(2) மற்றும் 6(4)) க்கு மனு அளிப்பதற்கான வழிவகைகளையும வனச் சட்டம் வழங்குகிறது. மேலும், மாநில தலைமைச் செயலாளரின் தலைமையிலான கண்காணிப்பு குழு, அங்கீகாரம், சரிபார்ப்பு மற்றும் வன உரிமைகளை வழங்குதல், கள அளவிலான பிரச்சினைகளை பரிசீலித்தல் மற்றும் நிவர்த்தி செய்தல் ஆகிய பணிகளுக்காக குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட வேண்டும்.
FRA-வில் உள்ள விதிகளுக்குக் கட்டுப்படவும், அனைத்து தகுதியுள்ள உரிமைகோருபவர்களுக்கும் அவர்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படுவதை உறுதி செய்யவும் பழங்குடியினர் நல அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளையும் வலியுறுத்தி வருகிறது.
விரிவான செயல்படுத்தலுக்காக, FRA இன் கீழ் பரிசீலிக்கப்படக்கூடிய சாத்தியமான வனப்பகுதிகளை வரைபடமாக்குவதற்கும், அனைத்து பங்குதாரர்களின் திறன் மேம்பாட்டை மேற்கொள்வதற்கும் FRA அட்லஸைத் தயாரிக்கவும் அமைச்சகம் மாநிலங்களை வலியுறுத்துகிறது. இந்த விஷயத்தில் மாநில அரசுகளுடன் வழக்கமான கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
FRA மீறல் தொடர்பாக ஒன்றிய அமைச்சகத்தால் பெறப்பட்ட குறைகள், மனுக்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்படுகின்றன, இதனால் சட்டப்பூர்வமான உரிமை கோருபவர்களின் வன உரிமைகள் மறுக்கப்படுவதில்லை என்பதை உறுதிசெய்ய முழுமையாக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
கள அளவிலான ஒருங்கிணைப்பு சிக்கல்களைத் தீர்க்க, ஒன்றிய பழங்குடியினர் விவகார அமைச்சகமும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமும் அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் கூட்டு ஆலோசனைகளை வழங்கியுள்ளன.
கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து வனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகள் பற்றிய விவரங்கள் பராமரிக்கப்படவில்லை. இருப்பினும், வெளியேற்றம் தொடர்பான வழக்கு (WP 109/2008) தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது” என்று ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.