சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் விவேகானந்தா கலையரங்கத்தில் தொழில்நுட்ப கல்வித்துறையின் மேம்படுத்தப்பட்ட இணைய சேவைகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணக்கர் சேர்க்கை துவக்க விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கோவி செழியன், "ஒரு காலகட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து என்ற பாடலே இல்லை. பல்வேறு மொழி பாடல்கள் பாடப்பட்டும். இதனையறிந்து முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தை கொண்டு வநதார்.
பல்வேறு தாய்மொழி கொண்டவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு தலைவணங்கி மரியாதை செய்கிறார்கள் என்றால் அதுதான் தமிழுக்கு கிடைத்த பெருமை. கலைஞருக்கு பெருமை. திருவள்ளுவரின் வெள்ளி விழா ஆண்டை பறைசாற்றும் சாலப் பெருமையை உருவாக்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
டாக்டர் முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தமிழ் துறைக்கு தனி அமைச்சரை உருவாக்கி அமைச்சரை நியமித்துள்ளார்.திருவள்ளுவருக்கு சாயம் பூச நினைப்பவர்களை அடையாளம் காண வேண்டும்
சாதனை மேல் சாதனை படைத்து கொண்டு இருக்கிறார் முதலமைச்சர். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 22,47,971 பேர் பயனடைந்துள்ளனர். புதுமை பெண் திட்டத்தின் மூலம் 227689 மாணவிகள் பயனடைந்துள்ளனர். தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் 317019 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
உலக அரங்கில் உயர்கல்வியை கொண்டு செல்ல முதல்வர் பல்வேறு திட்டங்களை தீட்டுகிறார். இதன் காரணமாக இந்தியாவில் உயர்கல்வியில் 48 % தமிழ்நாடு உள்ளது. உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடுதான் முதலிடம். இதற்கு முட்டுக்கட்டை போடுவதற்கு தான் புதிய கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது" என்று கூறியுள்ளார்.