2023-ம் ஆண்டு, மாட்டு கோமியம் குறித்து இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த போஜ் ராஜ் சிங் தலைமையில் சில பிஎச்.டி மாணவர்கள் கொண்ட குழு ஆய்வு நடத்தியது. அதில் மாட்டு கோமியத்தில் மனிதர்கள் உடல்நலத்துக்கு நல்லது அல்ல என்றும், அதிலிருக்கும் 14 வகையான பாக்டீரியாக்கள் மனிதர்கள் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் எனவும் கண்டறியப்பட்டது.
மேலும் இந்த பாக்டீரியாக்கள் மனித உடலினுள் சென்றால், அது வயிற்றில் தொற்று மற்றும் வேறு சில பிரச்னைகளை உருவாக்கும் என்றும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் இனி மாட்டு சாணம், கோமியம் என மனிதர்கள் உண்டால் அவர்களுக்கு எந்த நோய் வேண்டுமானாலும் வரக்கூடும் என்று கூறியிருந்தது.
இதனிடையே அண்மையில் மாட்டு பொங்கலன்று நடத்தப்பட்ட விழா ஒன்றில் கலந்துகொண்ட சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி, தனது தந்தை மாட்டு கோமியம் குடித்த 15 நிமிடங்களில் காய்ச்சல் குணமானதாகவும், மாட்டு கோமியத்தில் Anti Bacterial, Anti Fungal, Anti Inflammatory போன்ற மருத்துவ குணம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரு ஐஐடி இயக்குநர் இவ்வாறு கூறியுள்ளது தொடர்பான வீடியோ வைரலாகி கண்டனங்களை எழுப்பியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அந்த வகையில் முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், "ஆயுர்வேதத்தில் கோமியம் 'அமிர்த நீர்' எனச் சொல்லப்பட்டிருக்கிறது. இதைச் சொன்னால் குதி குதி எனக் குதிக்கிறார்கள்.
மாட்டுக்கறி சாப்பிடுவார்களாம். ஆனால், விஞ்ஞானப் பூர்வமாக ஆராய்ச்சி செய்யப்பட்டு மருந்து எனச் சொல்லப்படுகிற மாட்டின் சிறுநீரான கோமியத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம். தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், பசுவின் சிறுநீரில் மருத்துவ குணம் இருப்பதாக கூறிய தமிழிசை சௌந்திரராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலம் மாநகர காவல்துறை ஆணையரிடம் சேலத்தை சேர்ந்த மருத்துவர்கள் புகார் அளித்துள்ளனர். அதில், அறிவிலியலுக்கு ஒவ்வாத கருத்துக்களை மக்கள் மத்தியில் பேசுவதை கண்டிப்பதாகவும், மருத்துவராக உள்ள தமிழசை சௌந்திரராஜன் இது போன்ற கருத்துக்களை தெரிவிப்பது கண்டனத்திற்கு உரியது என்று கூறியுள்ளனர்.