பெரியாரை இழிவு செய்து வரும் சீமானுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி உதயகுமாரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரசியல் என்பது முன்னோக்கிச் செல்லும் ஓர் இலட்சியப் பயணம். முன்னாளில் வழிநடத்திய தலைவர்களிடமிருந்து இந்நாளில் கொள்ள வேண்டியவற்றைக் கொண்டு, தள்ள வேண்டியவற்றைத் தள்ளி முன்னேறிச் செல்வதுதான் அறிவுடைமை!
காந்தி, அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராசர், ஜீவா என எந்த தலைவராக இருந்தாலும், எவ்வளவு பெரியத் தலைவராக இருந்தாலும், முரண்களே இல்லாத, முற்றிலும் சொக்கத்தங்கமான அற்புத, அதிசய, அமானுட ஆளுமையை எங்கும் காணவியலாது.
பாழும் பார்ப்பனியம் திட்டமிட்டு தமிழர்களை அடிமைப்படுத்த ஆவன அனைத்தும் செய்து கொண்டிருக்கிறது. அந்த பயங்கரவாதப் பார்ப்பனியம் பார்த்து பயப்படுகிற ஒரு தலைவர் சொல்லாததைச் சொன்னதாகச் சொல்லி தேவையற்றக் கூக்குரல் எழுப்பி குழப்பம் விளைவிக்கிறார் சீமான். இது தில்லியிலிருந்து அனுப்பப்பட்ட ஸ்கிரிப்ட். விஜய் போபியா எனும் நோயின் வினோத வெளிப்பாடு.
சீமான் பேசியிருக்கும் பேச்சுக்களை உற்றுநோக்கினால், இவருக்கு ஓர் ஆழமான மனப்பிரச்சினை இருப்பது தெளிவாகத் தெரியும்.
சிங்களவர்களின் வன்கொடுமைகளை நேரில் எதிர்கொண்ட எந்த ஈழத் தமிழர் தலைவரும் "சிங்களப் பெண்களை கற்பழிப்பேன்" என்று பேசவில்லை. இவர் பேசினார்.
கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக ஆண்டுக்கணக்காகப் போராடிய நாங்களும், மற்றவர்களும் அணுஉலைகள் பற்றி ஆயிரம் விடயங்கள் பேசினோம். ஆனால் சீமான் மட்டும்தான் "ஆணுறை தயாரிக்கத் தெரியாத நாட்டுக்கு அணுஉலை எதற்கு?" என்று "அந்த கோணத்திலிருந்து" கேள்வி எழுப்பினார்.
பெரியார் சொன்ன பல்வேறு கருத்துக்களைப் புறந்தள்ளிவிட்டு, உடலுறவு பற்றி உரக்கப் பேசிக் கொண்டிருக்கிறார் சீமான். பெண்களை வெறுக்கும், பெண்களைக் கண்டு அஞ்சும், பெண் விடுதலையை எதிர்க்கும் காவி கோஷ்டிகள் இவருடன் சேர்ந்து பஜனை பாடுகிறார்கள்.
இந்த சகோதரருக்கு மனநல மருத்துவம் அவசரமாகத் தேவைப்படுகிறது. தொன்மையும், பெருமையும், தொலையாச் சிறப்புகளும் கொண்டிருக்கும் தமிழினத்தை வழிநடத்திச் செல்ல எந்தவிதமானத் தகுதிகளோ, திறமைகளோ இல்லாதவர் சீமான்.
இவரை தமிழ்த்தேசியத்தின் முகமாகக் கொண்டு, இவருக்கு வக்காலத்து வாங்கும் அன்பும், பண்பும் கொண்ட தோழர்கள் சற்றே சிந்திக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி!