கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் ஜுலை 30 அன்று, திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதால், சுமார் 330க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 400 பேர் காயமடைந்தனர். 70க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் காணாமல் போயினர்.
இதனால், கேரள மாநிலமே மீளாத துயரத்திற்கு உள்ளானது. வயநாடு நிவாரணத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து, கேரளத்திற்கு உதவிகள் குவிந்தன. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மீட்புப்பணிகளை நேரில் பார்வையிட்டார்.
இந்த பேரிடர் நடந்து இதுவரை ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருந்து வருவது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது. கேரள உயர்நீதிமன்றமே ஒன்றிய அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, சாதகமான நடவடிக்கையை ஒன்றிய அரசு எடுக்கவேண்டும் என்று அறிவுரை கூறியது.
இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவு நிவாரணத்துக்கு நிதி வழங்காத ஒன்றிய அரசைக் கண்டித்து இன்று கேரளாவில் இடதுசாரி கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெறவுள்ளது. ஆளும் சிபிஐஎம் மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகள் சார்பில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் நிலையில், மாவட்ட தலைநகர்களில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.