
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் த.வெள்ளையன் உருவப் படத்திறப்பு நிகழ்ச்சி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நடிகர் சத்யராஜ், கவிஞர் அறிவுமதி ஆகியோர் கலந்து கொண்டு மறைந்த வெள்ளையன் உருவப்படத்தை திறந்து வைத்த பின் மேடையில் உரையாற்றினர்.
அப்போது பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், “வெள்ளையன் காலமானார் என்ற தகவல் அறிந்து அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளானேன். சுற்றுப்பயணத்தில் இருந்து தான் அவரது திரு உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த முடியாமல் போனது.
பிரச்சனை என்றால் இருதரப்பையும் கலந்த ஆலோசித்து சுமுகமான தீர்வை எட்ட வேண்டும் என நினைப்பவர் அவர். தமிழீழ விடுதலைக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி ஈடுபாட்டுடன் இருந்தவர். மேலும், அயல்நாட்டு நேரடி முதலீடுகளை எதிர்ப்பதில் அவர் முன்னணியில் இருந்தார். ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்ப்பதில் எங்களை எல்லாம் ஒருங்கிணைத்தார்.

இன்றைய சின்ன சின்ன விற்பனையில் கூட ரிலையன்ஸ் அம்பானி போன்றவர்கள் நுழைந்து கொண்டு ஆக்கிரமித்து வருகிறார்கள். அந்நிய நேரடி முதலீடு உலகமயமாதல் தாராளமயமாதல் ஆகியவற்றால் இன்று பெட்டிக்கடைகள் கூட குறைந்து வருகிறது
ஆட்சி அதிகாரத்திற்கு யார் வரவேண்டும் என்பதையும் அதானியும் அம்பானியும் தான் தீர்மானிக்கிறார்கள். மோடியும், அமித்ஷாவும் - அம்பானிக்கும், அதானிக்கும் பினாமிகளாக இருக்கிறார்கள்
உண்மையில் பிரதமர் மோடி என்று சொல்வதை விட அதானி என்று சொன்னால் தான் பொருந்தும். அதேபோல, உண்மையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா என்று சொல்வதை விட அம்பானி என்று சொன்னால் தான் பொருந்தும்” என தெரிவித்தார்.








