ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்களையே அமல்படுத்தி வருகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ’இந்து ராஷ்டிரம்’ என்ற கனவை நிறைவேற்றவே மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு செயல்படுகிறது.
இந்நிலையில் இன்றைய நாடாளுமன்றத்தில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய அரசு தாக்கல் செய்தது. இதற்கு இந்தியா கூட்டணி கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தது.
இந்த எதிர்ப்புகளை தொடர்ந்து வக்ஃபு வாரிய திருத்தச் சட்டமசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக்குழு ஆய்வுக்கு ஒன்றிய அரசு அனுப்பியுள்ளது.
வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்கள் என்ன?
அரசமைப்புச் சட்டத்தில் சிறுபான்மையின மக்களை பாதுகாக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் 1954 ஆம் வக்ஃபு வாரிய சட்டம் அமல்படுத்தப்பட்டது.
இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் வரும் வருமானத்தை மசூதி மற்றும் இஸ்லாமியர்களின் கல்வி மேம்பாட்டு உள்ளிட்டவைக்கு பயன்படுத்துவதற்காக இந்த வக்ஃபு வாரிய சட்டம் கொண்டுவரப்பட்டது.
இதில்தான் தற்போது ஒன்றிய பா.ஜ.க அரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது. வக்ஃபு வாரியத்தின் சொத்து எது என்பதை வக்ஃபு வாரியம் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் தற்போது நிலத்தின் உரிமை தொடர்பான முடிவை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் வக்ஃபு ஆணையத்தில் இஸ்லாமிய சமூகத்தை அல்லாதவர்களும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்படி 40க்கும் மேற்பட்ட திருத்தங்களை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது.
இதனால் தான் இஸ்லாமியர்களுக்கு முற்றிலும் எதிராக இருக்கும் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு இந்தியா கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.