கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் கடந்த மார்ச் மாதம் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 10 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது தென் மாநிலங்கள் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பெங்களூரு போலீசார் விசாரணை மேற்கொள்கையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான் வெடிகுண்டு வைத்துள்ளார் என்று ஒன்றிய அமைச்சர் ஷோபா (Shobha Karandlaje) பேசியது கண்டனங்களை எழுப்பியது.
ஒன்றிய அமைச்சர் ஷோபாவின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் ஷோபா ட்வீட் மூலமாக இவர் மன்னிப்பு கேட்டார். எனும் இவர் மீது திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், தன்மீதான வழக்கு பதிவை ரத்து செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஷோபா கரந்த்லாஜே வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கேட்டால் ஏற்றுக்கொள்ளப்படுமா? என தமிழ்நாடு அரசிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கேட்டால் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், தமிழ் மக்கள் மீது மரியாதையை இருக்கிறது. இனி இவ்வாறு கூற மாட்டேன் என அவர் உறுதியளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு ஷோபா கரந்த்லாஜே தரப்பு வழக்கறிஞர், மன்னிப்பு கோரி நீதிமன்றத்தில் பிராமண பாத்திரம் தாக்கல் செய்வதாகக் கூறப்பட்டது. எனினும் அதை மறுத்த நீதிபதிகள், செய்தியாளர்கள் சந்திப்பில் ஒரு கருத்தை தெரிவித்திருக்கும்போது, அதேபோல செய்தியாளர்கள் சந்திப்பில் மன்னிப்பு கோரினால்தான் சரியாக இருக்கும் என்று கூறி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி மன்னிப்பு கேட்குமாறு கூறி இந்த வழக்கை ஒத்தி வைத்தனர்.