மஹாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்த மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இருந்த சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் சிலரை தங்கள் அணிக்கு மாற்றி அதன் மூலம் ஆட்சியை பாஜக கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்றார்.
இந்த கூட்டணியில் துணை முதல்வர் பதவி பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது.அதன்பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்துக்கொண்டு அஜித் பவார் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களோடு வெளியேறினார். அவருக்கும் துணை முதல்வர் பதவி கொடுத்து கூட்டணியில் பாஜக இணைத்துக்கொண்டது.
இதனிடையே நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு மகாராஷ்டிராவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந்தியா கூட்டணி 30 தொகுதியிலும், பாஜக கூட்டணி 17 தொகுதியிலும் மட்டுமே வெற்றி பெற்றது.அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பில் சிவசேனாவுக்கு ஒரு இணையமைச்சர் பதவி மட்டுமே வழங்கப்பட்டது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் ஆளுநர் பதவியும் சிவசேனாவுக்கு வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், பாஜக 15 நாள்களுக்குள் என்னை ஆளுநராக நியமிக்கவேண்டும் என சிவசேனா முன்னாள் எம்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்துப் பேசிய ஷிண்டே பிரிவு சிவசேனா முன்னாள் எம்.பி ஆனந்த்ராவ் அட்சுல், "எனக்கு ஆளுநர் பதவி கொடுப்பதாக அமித் ஷா வாக்குறுதி கொடுத்தார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பு சிவசேனாவிற்கு இரண்டு அமைச்சர் பதவி, இரு ஆளுநர் பதவி கொடுப்பதாக பாஜக வாக்குறுதி கொடுத்தது. ஆனால் அதனை காப்பாற்றவில்லை.
இனியும் என்னால் காத்திருக்க முடியாது. என்னை பா.ஜ.க 15 நாள்களுக்குள் ஆளுநராக நியமிக்கவேண்டும். இல்லை என்றால் அமராவதி முன்னாள் பாஜக எம்.பி நவ்நீத் ரானாவின் சாதிச்சான்று செல்லும் என்று கூறி கோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வேன்"என்று கூறியுள்ளார். நவ்நீத் ரானா போலி சாதிச்சான்றிதழ் தாக்கல் செய்து தேர்தலில் வெற்றி பெற்று இருப்பதாக கூறி சுப்ரீம் கோர்ட்டில் ஆனந்த்ராவ் அட்சுல் மனுத்தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.