நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற விவாத்ததில் தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ உரையாற்றினார். அதில் பேசிய அவர்,"எங்கள் தமிழக மீனவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டதையும், கொலை செய்யப்பட்டதையும் அவர்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டதையும் பற்றிய உணர்ச்சி மிகுந்த ஒரு பிரச்சினை குறித்து பேச விரும்புகிறேன்.
தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் வெளிவுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், கடந்த 7 மாதங்களில் மட்டும் 250 -க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளார். மேலும், 2024 ஆம் ஆண்டில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமான தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன என்பதையும் அக்கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள 14 கடலோர மாவட்டங்களில் 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் 6000 -க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, அவர்களின் சொத்துக்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதை இந்த மன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். இதுவரை 500 -க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சிலரின் உடல்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. பலர் கொடூரமாக தாக்கப்பட்டு இலங்கை சிறைகளில் பல மாதங்களாக அடைக்கப்பட்டிருக்கின்றனர். இதனால், இந்த மீனவர்களும் அவர்களின் குடும்பங்களும் இன்றைக்கும், கடந்த காலங்களிலும் பெரும் துயரங்களையும், வலியையும் அனுபவித்துள்ளனர்.
பல குடும்பங்கள் தங்கள் வீட்டில் உள்ள பொருளீட்டக் கூடிய ஒரே நபரையும் இதுபோன்ற தாக்குதல்களில் இழந்துள்ளனர். இந்தக் குடும்பங்களை சேர்ந்தவர்களையும் என் உறவினர்களாகவே கருதி அவர்களின் துயரங்களில் நான் பங்கேற்றுள்ளேன். பல குழந்தைகள் தங்களது தந்தையை இழந்தும், பெண்கள் தங்களது கணவரை இழந்தும், பெற்றோர் தங்களது ஒரே மகனை இழந்தும் துயரத்தில் தவித்து வருவதை நான் நேரில் கண்டிருக்கிறேன்.
மிகவும் பின்தங்கிய மாவட்டங்களான இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பெய்யும் மழையின் அளவு மிக குறைவு. மிகச் சிறிய அளவில் தான் விவசாயமும் நடந்து வருகின்றது. அங்கே வேறு தொழில்களும் பெரிதாக இல்லாததால் அம்மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு சென்றால் தான் அவர்கள் வீட்டில் அடுப்பு எரியும். இவ்வளவு பிரச்சனைக்கு மத்தியிலும் உயிரை பணயம் வைத்து கடலுக்கு போனால் தான் அவர்களுக்கு மூன்று வேலை உணவு கிடைக்கும்.
இன்றைய தமிழக முதல்வரும், இதற்கு முன்பு முதலமைச்சர்களாக இருந்தவர்களும், தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடந்த 40 ஆண்டுகளாக ஒன்றிய அரசிடம் இந்தப் பிரச்சினைக்கு நிலையான மற்றும் நிரந்தரத் தீர்வை கொண்டுவர வேண்டுமென கோரிக்கை வைத்து வருகின்றார்கள். ஆனால், இப்பிரச்சனை முன்பை விட மோசமான நிலையை அடைந்திருப்பதால் ஒன்றிய அரசின் மீது தமிழக மீனவர்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். ஆனால், மற்ற மாநிலங்களைச் சேர்ந்த, குறிப்பாக குஜராத் மாநில மீனவர்கள் கடலோர காவல்படை, கடற்படை என ஒன்றிய அரசின் அனைத்து ஆதரவையும் பெற்றுள்ளனர். அவர்கள் எந்தவிதமான பிரச்சினையில் சிக்கினாலும், உடனடியாக அவர்களை காப்பாற்றுவதற்கு இந்த அமைப்புகள் வருகின்றன.
கச்சத்தீவு 1974 ஆம் ஆண்டு இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டது என்பது எனக்கு தெரியும்.
1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் இந்தியா-இலங்கை கச்சத்தீவு ஒப்பந்தங்கள் பரிபூரணமாக செயல்படுத்தப்படாமல், அவை நமது தமிழ் மீனவர்களின் உரிமைகளைப் பறித்துவிட்டன என்பதும் எனக்கு தெரியும்.
இப்பிரச்சனையின் பின்புலத்தில் புவியியல் அரசியல் உள்ளது என்பதும் எனக்கு தெரியும்.
ஆனால், ஒன்றிய அரசு இந்த பிரச்சினையை தீர்க்க உண்மையான அக்கறையுடன் செயல்படுகிறதா என்பது பற்றி மட்டும் எனக்கு தெரியவில்லை.
தமிழக மீனவர்களை இந்த நாட்டின் குடிமக்களாக ஒன்றிய அரசு கருதுகிறதா? என்றும் எனக்கு தெரியவில்லை.
தமிழ்நாட்டை இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பின் ஓர் அங்கமாக ஒன்றிய அரசு கருதுகிறதா என்பதும் சந்தேகமாக இருக்கிறது. ஏனெனில் ஒன்றிய அரசு எங்களுக்கு உரிமையான நிதியை மறுப்பதோடு எங்கள் மீனவர்களையும் பாதுகாக்கவில்லை.
ஆகவே, எங்கள் தமிழக மீனவர்களின் இந்த முக்கியமான பிரச்சினைக்கு நிலையான நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பிரதமரையும், வெளியுறவுத்துறை அமைச்சரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்"என்று கூறினார்.