பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து 'ஒரே நாடு ஒரே மொழி' என்ற கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளைத் தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது. இது தவிர ஒன்றிய அரசின் அலுவலகங்களில் இந்தியைப் பயன்படுத்தச் சொல்வது, அலுவல் பூர்வக்கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்குப் பதில் இந்தியைப் பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
எப்படியாவது இந்தியைத் திணித்து விட வேண்டும் என பா.ஜ.க கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது. மேலும் ஒன்றிய அரசு அதிகாரிகள் இந்தியில் பேசவேண்டும் என்றும், இந்தி பேசாதவர்கள் அதனை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பாஜக அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
இந்த நிலையில், ஒன்றிய அரசின் சிபிஎஸ்இ பணியிடங்களுக்கான தேர்வில் இந்தியை கட்டாயமாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிபிஎஸ்இ 08.03.2024 அன்று வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி பிரிவு ஏ,பி,சி பணியிடங்கள் 118 க்கான நியமனத் தேர்வுகள் நடைபெற உள்ளன.
அதில் இந்தி மொழி தேர்வும் இடம் பெற்றுள்ளது. அதனால் இந்தி பேசாத மாநிலங்களை சார்ந்த தேர்வர்கள் குறைந்தபட்சம் 10% முதற்கட்ட தேர்விலேயே இழந்து இரண்டாம் கட்ட தேர்வுக்கு அடியெடுத்து வைக்கும் வாய்ப்பை பறி கொடுப்பார்கள். பிரிவு ஏ உதவி செயலாளர் (நிர்வாகம்) பதவிகளுக்கான முதற்கட்ட தேர்வில் மொத்த மதிப்பெண்கள் 300 இல் இந்தி மொழி தேர்வுக்கு 30 மதிப்பெண்கள்.
பிரிவு பி இளநிலைப் பொறியாளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 300 இல் இந்தி மொழி தேர்வுக்கு 15 மதிப்பெண்கள். பிரிவு பி இளநிலை மொழிபெயர்ப்பாளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 300 இல் இந்தி மற்றும் ஆங்கில மொழி தேர்வுக்கு 200 மதிப்பெண்கள்.பிரிவு சி கணக்காளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 300 இல் இந்தி & ஆங்கில மொழித் தேர்வுக்கு 40 மதிப்பெண்கள். பிரிவு சி இளநிலை கணக்காளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 240 இல் இந்தி மற்றும் ஆங்கில மொழி மற்றும் இலக்கியம் தொடர்பான தேர்வுக்கு 40 மதிப்பெண்கள்.
இது இந்தியாவின் மொழி பன்மைத்துவத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட அலுவல் மொழி விதிகளுக்கு முரணானது. இந்தி பேசாத மாநில தேர்வர்களுக்கு அநீதி இழைக்கிற மற்றும் சம தள ஆடுகளத்தை மறுக்கிற தேர்வு முறைமையை மாற்றக்கோரி ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளேன்"என்று கூறப்பட்டுள்ளது.