
2019 ஆம் ஆண்டு ஹரியானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.கவும் ஜனநாயக் ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தனர். பா.ஜ.க 40 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும், ஜனநாயக் ஜனதா கட்சி 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் மக்களவை தேர்தலில் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக பா.ஜ.க கூட்டணியிலிருந்து ஜனநாயக ஜனதா கட்சி விலகியது. இதையடுத்து 6 சுயேச்சை உறுப்பினர்கள் ஆதரவுடன் பா.ஜ.க ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.
இருப்பினும் பா.ஜ.க ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும் என்ற நிலையில்தான் இருந்து வருகிறது. தற்போது மூன்று சுயேச்சை எம்.எல்.ஏக்கள் பா.ஜ.கவுக்கு அளித்த வாக்குறுதிகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
விவசாயிகள் பிரச்சனைகள், பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் போன்ற காரணங்களால் பா.ஜ.கவுக்கு அளித்த வாக்குறுதியைத் திரும்பப் பெறுவதாக சோம்பிர் சங்வான், ரந்தீர் சிங் கோலன், தரம்பால் கோண்டர் ஆகிய மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று அறிவித்தனர்.
இந்நிலையில் ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முன்வந்தால் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக ஜனநாயக் ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா அறிவித்துள்ளது உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சில நாட்களில் ஹரியானா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.








