குஜராத் என்றாலே கலவரம், வறட்சி என நினைவிற்கு வர, அக்கலவரங்களையும், வறட்சியையும் உருவாக காரணமாக இருப்பது பா.ஜ.க தான் என்பது தற்போது பெரிவாரியான மக்களால் உணரப்பட்டு வருகிறது.
2002-ல் நடந்த குஜராத் கலவரம், மாநிலத்தில் வாழும் சிறுபான்மையினரையும், இஸ்லாமியர்களையும் உயிர்பயத்தில் ஆழ்த்தியதில் தொடங்கி,
பொருளாதாரத்தில் நிலவும் தொய்வு, மாநிலத்தின் GDP-ல் சரிவை உண்டாக்கியது என உழைக்கும் சமூகத்தினருக்கு ஓட்டை, உடைசலுடனான வீடும், குப்பை மேளங்களுமே இருப்பிடமாய் மாறியுள்ளது.
நாட்டையே ஆளும் பா.ஜ.க.வின் ஆட்சியில் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும் குஜராத்தில், மோடி முழங்கும் தூய்மை இந்தியாவும், இலவச வீடு வழங்கும் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படாதது ஏன் என்ற கேள்வியும் இதன் வழி வலுக்கத் தொடங்கியுள்ளது.
இவ்வாறான சூழலில், மத பிரிவினை, சாதி பாகுபாடு ஆகியவற்றை தாரக மந்திரமாக வைத்து செயல்படும் பா.ஜ.க.வின் ஒன்றிய அமைச்சர் பரசோத்தம், ராஜ்புட் சமூகத்தினரை இழிவுபடுத்தி பேசி, கூடுதல் பாகுபாட்டிற்கு வித்திட்டுள்ளார்.
இதனால், கடும் சினத்திற்குள்ளான ராஜ்புட் சமூகத்தினர், பா.ஜ.க மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தியும், பரசோத்தம்-க்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட,
அவர்களை காவலர்கள் கொண்டு அடக்கி, ஒடுக்கி வருகிறது பா.ஜ.க. இந்நிலையில் ராஜ்புட் சமூகத்தினரின் மனநிலையை மேலும் வருத்தும் வகையில், பா.ஜ.க தலைமை அறிவித்தது போல, தனது வேட்பாளர் மனுவை தாக்கல் செய்துள்ளார் பரசோத்தம்.
இத்தகைய காரணங்களால், கடும் அதிருப்தியடைந்த ராஜ்புட் சமூகத்தினர் மற்றும் இதர சிறுபான்மையின மக்களின் நம்பிக்கை குரலாக உருவெடுத்திருக்கிறது இந்தியா கூட்டணி.
குஜராத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளிலும், பா.ஜ.க தன்னிச்சையாக நின்று வென்றுவிடலாம் என திட்டம் தீட்ட, அதற்கு கடும் அச்சுறுத்தலாக இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் ஒன்றிணைந்து பிரச்சாரங்களை தொடங்க உள்ளனர்.
அவ்வகையில் குஜராத்தில், 40 பேர் அடங்கிய நட்சத்திர பரப்புரையாளர்கள் பெயர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது ஆம் ஆத்மி கட்சி. காங்கிரஸ் தலைமையும் முழுவீச்சில் குஜராத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள ஆலோசனை நடத்தி வருகிறது.
இதனால், 26 ஆண்டுகளாக நிறுவப்பட்ட பா.ஜ.க என்கிற பாசிச தூணில் விரிசல் விடத் தொடங்கியுள்ள நிலையில், விரைவில் தூண் இடிந்து விழும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.