அரசியல்

மணிப்பூர் வன்முறை : எடப்பாடி பழனிச்சாமியை மிஞ்சிவிட்டார் மோடி! -சிலந்தி கட்டுரை தாக்கு !

கோத்ரா தொடங்கி இன்று மணிப்பூர் வரை நடந்துள்ள கோரங்கள் - கொடூரங்கள் தொடராமல் இருக்க - பி.ஜே.பி. ஆட்சி அகற்றப்பட வேண்டும்; அகற்றப்பட்டே ஆக வேண்டும்!

மணிப்பூர் வன்முறை : எடப்பாடி பழனிச்சாமியை மிஞ்சிவிட்டார் மோடி! -சிலந்தி கட்டுரை தாக்கு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்த நாட்டின் ஒட்டுமொத்த சமுதாயமுமே வெட்கித் தலைகுனிகிறது. வேதனையால் இதயம் வெந்து நோகிறது. தாய்க்குலம் தணலில் மெழுகாய் தவிக்கிறது! வலைதளங்களில் ‘வைரலாக வலம் வரும் அந்தக் காட்சி கண்டு கனத்த இதயங்கள் கணக்கிலடங்கா! தனது நாட்டில் நடந்த இந்த நெஞ்சைப் பிழியும் சம்பவம் - எதற்கும் கலங்காத நமது பிரதமரையே கலங்க வைத்துள்ளது. "140 கோடி இந்தியர்களும் வெட்கப்படுகிறார்கள்; மணிப்பூர் சம்பவத்துக்கு மன்னிப்பே கிடையாது: இதில் ஈடுபட்ட குற்றவாளிகளை தப்பவிட மாட்டோம்" - என பிரதமர் சூளுரைத்துள்ளார். மணிப்பூர் மகள்களுக்கு நடத்தப்பட்ட கொடுமைகளை ஒருபோதும் மன்னிக்க முடியாது. எந்த குற்றவாளியும் தப்ப முடியாது என்றும் சூளுரைத்துள்ளார் பிரதமர் மோடி! கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பற்றி எரிந்து, பல உயிர்களைப் பலிகொடுத்து, மணிப்பூரே மயான கோலமாகியிருந்த காலங்களில் எல்லாம்கூட வாய் திறக்காத நமது பிரதமரை இந்தக் கோரச்சம்பவம் வாய்திறக்க வைத்துள்ளது!

அந்த அளவு நாட்டையே அதிரவைத்த சம்பவம் அது! மணிப்பூரை ஆளும் பாரதிய ஜனதா முதல்வருமான பைரேன் சிங், குற்றவாளிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் என செய்திகள் வெளிவருகின்றன. நமது பிரதமர், உள்துறை அமைச்சர், பா.ஜ.க.வின் மணிப்பூர் மாநில முதலமைச்சர் ஆகியோர் இந்த சம்பவம் குறித்து நொந்து கண்ணீர் வடிப்பது போலவும், வெகுண்டெழுந்துள்ளது போல வரும் இந்த செய்திகள் ஏடுகளிலும், ஊடகங்களிலும் வருவதைக் காணும் போது - நமது மனக்கொதிப்பு மேலும் சூடேறுகிறது!

*நீலிக்கண்ணீர் ....... முதலைக்கண்ணீர்..." என்றெல்லாம் வருணிக்கப்படும் கண்ணீர்கள் இனி ‘மோடிக்கண்ணீர்' என்று வருணிக்கப்படலாம். அந்த அளவு போலித்தனம் அந்தக் கண்ணீர்களில் காட்சி அளிக்கிறது.கடந்த இரண்டு மாதங்களாக மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டி ருந்தது; ஒரு உள்நாட்டுக் கலவரமே வெடித்திருந்தது. பெண்கள் வெட்ட வெளியில் மானபங்கப்படுத்தப்பட் டுள்ளனர்! தன் உடன்பிறந்த சகோ மானபங்கப்படுத்தப்படுவதை தடுக்கச் சென்ற அவருடைய தந்தையும், சகோதரனும் சுட்டுச் சாய்க்கப்படுகின்றனர். கார்கில் போரில் முன்னின்று போராடிய இராணுவ வீரன் தந்த பேட்டியை டைம்ஸ் ஆப் இந்தியா (Times of India) ஏடு வெளியிட்டுள்ளது.

"I have Seen War; have fought on the frontline in kargil and now I found my place more Dangerous than battle Field”.

(நான் யுத்தத்தைக் கண்டிருக்கிறேன். கார்கில் போர்க் களத்தில் முன்னணியில் நின்று போராடியுள்ளேன். அந்த யுத்தக் களத்தைவிட எனது இருப்பிடம் மிகமிக அபாயகரமானதாகக் காட்சியளித்தது)

மணிப்பூர் வன்முறை : எடப்பாடி பழனிச்சாமியை மிஞ்சிவிட்டார் மோடி! -சிலந்தி கட்டுரை தாக்கு !

இப்படி காட்சியளித்த மணிப்பூர் கொடூரங்கள் அத்தனையும் அன்று நாட்டுமக்கள் கண்ணில் படாதவாறு மறைக்கப்பட்டது! அந்த கோர நிகழ்வுகளால் நாட்டின் ஒரு பகுதி பற்றி எரிந்து கொண்டிருந்த போது, இந்த நாட்டின் பிரதமரும். உள்துறை அமைச்சரும், கருநாடக மாநிலத்தில் நகர்வலம் வந்து ஓட்டு வேட்டையாடிக் கொண்டிருந்தனர்! நாட்டின் ஒரு பகுதி மக்கள் நிலை குலைந்து நிராதரவாக நின்று துடித்துக் கதறிய போது, நாட்டின் பிரதமர், தேர்தல் பிரச்சாரம். தொடர்ந்து அமெரிக்கா என்று இருந்தார்! அமெரிக்காவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இரண்டே செய்தியாளர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடியிடம் அந்த இருவரில் ஒருவரான அமெரிக்க செய்தியாளர், இந்தியாவில் மனித உரிமைகள் பாதிப்புக்கு ஆளாவது குறித்து கேள்வி எழுப்பியபோது. ஜனநாயகம் இந்தியாவின் மரபணுவோடு தொடர்புடையது என்று கூறி விரிவான விளக்கத்தைத் தவிர்த்தார்.

மோடியின் இந்த பதில் குறித்து கருத்தறிவித்த அமெரிக்க நியூஸ் ஏஜன்சியான ஏ.பி. (Associated Press) அப்போதே குறைந்தபட்சம் கடந்த மே மாதத்திலிருந்து 100 பேர்களை பலிகொண்டுள்ள, வடகிழக்கு மாகாண மதவெறித் தாக்குதல் குறித்து மோடி எந்த கருத்தும் தெரிவித்ததில்லை என்று குறிப்பிட்டிருந்ததும் இங்கே நினைவு கூறத்தக்கது! மணிப்பூர் கலவரம் உச்சகட்டத்தில் இருந்த நேரங்களில், பிணக்குவியல்கள் மலைபோல உயர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் மக்கள் குறிப்பாக பெண்கள் மானபங்கப்படுத்தபட்டு அல்லாடிக் கொண்டிருந்தபோது எல்லாம் இந்தக் கொடூரங்கள் குறித்து கண்டும் காணாதது போல மோடி மவுனித்திருந்ததை எதிர்க்கட்சிகள் எல்லாம் சுட்டி காட்டியபோது, வாயையே திறக்காத பிரதமர் மோடி அவர்கள்,வெளி உலகுக்குத் தெரியாமல் அழுத்தி வைக்கப்பட்டிருந்த விவகாரங்கள் வெளியே கசிந்து, பார்த்த மக்கள் கொதிப்பின் உச்சத்தில் இருக்கும் போது, “எந்த குற்றவாளியும் தப்பிக்க முடியாது என்றும், ஜனநாயக கோவிலில் நிற்கும் தனது இதயம் வலியாலும், கோபத்தாலும் துடிக்கிறது” என்று வசனம் பேசுவ தைக் கேட்கும் போது இதனைக் கேட்பவர்களின் கொதிப்பு உச்சத்தை அடையத்தானே செய்யும்!

மணிப்பூர் வன்முறை : எடப்பாடி பழனிச்சாமியை மிஞ்சிவிட்டார் மோடி! -சிலந்தி கட்டுரை தாக்கு !

தனது மாநிலத்தில் நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தையும், உயிர்பலிகளையும் மறுநாள் தொலைக்காட்சியைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன் என்று கூறிய அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை மிஞ்சிவிட்டார் மோடி! அவருக்காவது தனது மாநிலத்தில் நடந்த நிகழ்வு மறுநாள் தெரியவந்தது! இந்தநாட்டின் பிரதமருக்கு தனது நாட்டின் ஒரு பகுதியில் - அதுவும் அவரது கட்சியின் ஆட்சியில் உள்ள ஒரு மாநிலத்தில் நடைபெற்ற சம்பவம், நடந்து இரண்டு மாதங்களுக்குப்பின் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளிவந்து நாட்டையே அதிர்ச்சிக் குள்ளாக்கிய பிறகு தெரிகிறது என்றால் எப்படிப்பட்டவர்களிடம் இந்த நாடு சிக்கி சீரழிந்து வருகிறது என்பது தெளிவாகவில்லையா?

பிரதமரை விடுங்கள்; அந்த மாநிலத்தை ஆளும் பா.ஜ.க.வின் முதல் அமைச்சர் தனது மாநிலத்தில் என்ன நடக்கிறது என்று கூடத் தெரியாமல் ராஜபரிபாலனம் செய்து கொண்டி ருக்கிறார்! சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் ஆகியும், அது பற்றி நடவ டிக்கை எதுவும் மேற்கொள்ளாது விவகாரம் விரிந்து நாடு முழுதும் கொந்தளித்த பின்னர், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்!கடந்த மே மாதம் நடந்த சம்பவங்கள், குறித்து ஜூலை இறுதி வரை அந்த மாநில முதல்வருக்கு எதுவும் தெரியவில்லை என்றால் நம்ப முடிகிறதா? இப்போது வீடியோவில் வெளிவந்த சம்பவங்கள் குறித்து எதுவும் தெரியாமலா இருந்தார் என்ற கேள்விகள் எழும்போது, நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் திட் டமிடப்பட்டு நடத்தப்பட்ட மதவெறித் தாக்குதல் எனக் கூறப்படுவதில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது! இந்த நாடு எத்தகைய கொடுங்கோலர்களின் கையில் சிக்கியுள்ளது என்பதற்கு மேலும் ஒரு சாட்சியாக மணிப்பூர் கொடூரங்கள் காட்சியளிக் கின்றன!

கடந்த 2020 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கிழக்கு டெல்லியில் ஒரு குறிப்பிட்ட இனமக்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டனர். 50க்கும் மேற் பட்டோர் கொல்லப்பட்டனர். அந்த இனமக்களின் வீடுகள், வியாபார ஸ்தலங்கள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன! அன்று நடந்த கலவரத் தொடர்பாக வந்த செய்திகள் கதிகலங்க வைத்தன! அன்று குறி வைக்கப்பட்டது ஒரு இனம். இப்போது மணிப்பூரில் குறி வைக்கப்பட்டது மற்றொரு இனம்! எல்லாமே, மதச்சார்பற்ற நாடு என்று அரசியல் சட்டத்தால் கூறப்படும் நாட்டிலே நடைபெறும் மதவெறித் தாக்குதல்கள்!

உள்ளொன்று வைத்து புறமொன்று நடிக்கும் ஆதுமதியினரிடமிருந்து விடுதலை பெற்றால்தான் நாட்டுக்கு விடிவு காலம் ஏற்படும்! கோத்ரா தொடங்கி இன்று மணிப்பூர் வரை நடந்துள்ள கோரங்கள் - கொடூரங்கள் தொடராமல் இருக்க - பி.ஜே.பி. ஆட்சி அகற்றப்பட வேண்டும்; அகற்றப்பட்டே ஆக வேண்டும்!

banner

Related Stories

Related Stories