அரசியல்

“சாதி - மதங்களைக் கடந்தவர் என்பதால்தான் “இசைஞானி” பட்டத்தை கலைஞர் தந்து பாராட்டினார்” : சிலந்தி கட்டுரை!

யாரும் தராத ஒரு உயர்வை ஏதோ பி.ஜே.பி. இளையராஜாவுக்குத் தந்தது போல பேசுகின்றனர்!

“சாதி - மதங்களைக் கடந்தவர் என்பதால்தான் “இசைஞானி” பட்டத்தை கலைஞர் தந்து பாராட்டினார்” : சிலந்தி கட்டுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அவர் ஒரு படைப்பாளி! அவரை விட்டு விடுங்கள்!

தேவையற்ற - அவரே விரும் பாதவிவகாரங்களில் அவரை நுழைத்து - அவரது சிந்தனைகளைச் சிதறடித்து விடாதீர்கள்!

அவரது ஆற்றல்; சிகரங்கள் பலவற்றைத் தொட்டுவிட்டன! இருந்தும் அவரது தேடல் நிற்கவில்லை!

ஆம்; உண்மை படைப்பாளிகளுக்கு ‘முற்றும்’ என்ற சொல் நிறைவளிப்பதில்லை... ‘தொடரும்’ என்ற சொல்லே, அவர்களது வேட்கையின் வெளிப்பாடு! எல்லையற்ற இலக்கு!

இசைஞானி இளையராஜா ஒரு உண்மை படைப்பாளி. அவரை விவாதப் பொருளாக்கி, அவர் இலக்கை மடைமாற்றி திசை திருப்பாதீர்கள்!

இளையராஜாவுக்கு நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்ட செய்தியை இன்று விவாதப் பொருளாக்கியுள்ளனர் சிலர்!

அவருக்கு அளிக்கப்பட்ட பதவிக்கு சாதிச் சாயம் பூசிக்களிக்கின்றனர் சிலர்!

அவர் சாதிகளைக் கடந்தவர், மதங்களைக் கடந்தவர் என்பதால் தான் அவருக்கு, “இசைஞானி’’ என்ற பட்டத்தை முத்தமிழறிஞர் கலைஞர் தந்து பாராட்டினார்!

“சாதி - மதங்களைக் கடந்தவர் என்பதால்தான் “இசைஞானி” பட்டத்தை கலைஞர் தந்து பாராட்டினார்” : சிலந்தி கட்டுரை!

எத்தனையோ பட்டங்களைப்பெற்றார் இளையராஜா! ஆனால் கலைஞர் தந்த “இசைஞானி’’ பட்டம், அவர் பெயரோடு இணைந்துவிட்டது! ஒன்றை ஒன்று பிரிக்க இயலாத சொல்லாகப் பிணைந்துவிட்டது! உள்ளார்ந்த உணர்வுகளில் உருவாகி சூட்டப்பட்ட பட்டம் என்பதால் அது உயிரோட்டம் கொண்டுள்ளது!

இசையில் இசைஞானி இளையராஜா தொட்ட எல்லை, தொட நினைக்கும் எல்லை நீண்டு கொண்டே இருக்கிறது! உங்கள் அரசியல் விளையாட்டில் அவரை இழுக்காதீர்கள்!

அவர் செல்லும் வேகத்துக்கு தடை ஏற்படுத்தா தீர்கள்! அவர் பெற்றிடும் ஒவ்வொரு உயர்வும்; தமிழன் பெருமிதம் கொள்ளும் உயர்வு.

இளையராஜாவுக்கு வாழ்த்துத் தெரிவித்த கழகத் தலைவர் தளபதி, “இசையால் நம் உள்ளங்களையும், மாநிலங்களையும் ஆண்ட இசைஞானி அவர்கள், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகச் சிறப்புறச் செயல்பட வாழ்த்துகள்’’ - எனத் தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்!

இசைஞானி இளையராஜாவை மாநிலங்களவை உறுப்பினராக்கியதில் மகிழ்ச்சிதான்!

இப்படிப்பட்ட நியமன உறுப்பினர் பதவியை இதற்குமுன் திரையுலகைச்சேர்ந்த ஹேமா மாலினி, நடிகர் திலகம் சிவாஜிகணேசன், நர்கீஸ், வைஜயந்தி மாலா, ரேகா, பிரிதிவி ராஜ்கபூர், லதா மங்கேஷ்கர், சோ ராமசாமி, மலையாள நடிகர் சுரேஷ் கோபி போன்றோர் பெற்றிருக்கின்றனர்!

அப்போதெல்லாம் உருவாகாத விவாதம், இப்போது இசைஞானி இளையராஜா நியமனத்தில் எழுந்துள்ளது எதனால் என்பதை, சிறிது அலசிப் பார்த்தால் அதற்கான காரணம் விளங்கிடும்!

இசைஞானிக்குக் கிடைத்துள்ள இந்த நியமனப் பதவி குறித்து யாரும் விமர்சிக்காத நிலையில், எவரும் எதிர்ப்புத் தெரிவிக்காத போது, ஏன் இது விவாதப் பொருளானது என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.

“சாதி - மதங்களைக் கடந்தவர் என்பதால்தான் “இசைஞானி” பட்டத்தை கலைஞர் தந்து பாராட்டினார்” : சிலந்தி கட்டுரை!

வலதுசாரிகள் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு, ஊடக விவாதங்களில் ஈடுபடும் ஒரு பி.ஜே.பி. ஆதரவுக்கூட்டம், இதில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது! இத்தனை ஆண்டு காலம் ஆண்டவர்கள் யாரும் தராத ஒரு உயர்வை ஏதோ பி.ஜே.பி. இளையராஜாவுக்குத் தந்தது போல பேசுகின்றனர்!

பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளையராஜாவுக்கு பதவி தந்து சமூக நீதியைத் தாங்கள்தான் காப்பதுபோல பேசத்தொடங்கியுள்ளனர்!

நமக்கெல்லாம் இதில் ஒரு மகிழ்ச்சி தான்! காலம் காலமாக சனாதன தர்மத்தை உயர்த்திப் பிடித்த கூட்டத்தை, இன்று சமூகநீதி பற்றிப் பேச வைத்துள்ளது, திராவிட இயக்கத்துக்குக் கிடைத்த பெரும் வெற்றிதான்!

சமூகநீதி காக்க ‘மண்டல் கமிஷன்’ அறிக்கையைச் செயல்படுத்திய சமூக நீதிக் காவலன் வி.பி.சிங் அரசைக் கவிழ்த்து, கொண்டாட்டம் நடத்திய கூட்டம் இன்று, பழங்குடி இனப்பெண்மணியை குடியரசுத் தலைவர் வேட்பாளராகவும், பட்டியலினத்தைச் சேர்ந்தவரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்புக்கும் தேர்வு செய்திட வேண்டிய நிலையை ஏற்படுத்தி, அதனைச் சொல்லிக்காட்டிட வேண்டிய நிலையை உருவாக்கிய வகையில் திராவிட இயக்கம் பெற்ற பெரு வெற்றி இது.

ஆர்.எஸ்.எஸ். கூட்டம் பசுத்தோல் போர்த்தி வந்தாலும், ஆட்டுத்தோல் அணிந்து வந்தாலும் அதன் உண்மைச் சொரூபத்தைத் தோலுரித்துக் காட்டிடுவோம்! உங்கள் அரசியல் எத்து விளையாட்டுகளை அரசியல்வாதிகளோடு நேரடியாக நடத்திடுங்கள்! படைப்பாளிகளை அதில் பகடைக்காயாக்கக் கருதாதீர்கள்! நாடாளுமன்ற மேலவைப் பதவி தந்ததன் மூலம், இசைஞானி இளையராஜாவைப் பெருமைப்படுத்தியது போல பேசாதீர்கள்!

“சாதி - மதங்களைக் கடந்தவர் என்பதால்தான் “இசைஞானி” பட்டத்தை கலைஞர் தந்து பாராட்டினார்” : சிலந்தி கட்டுரை!

அவரது உலகம் வேறு! அந்த இசை உலகின் உச்சப் பதவிகள்; பட்டங்கள் பலவற்றை அவர் பெற்றுவிட்ட நிலையிலும் அவரது தாகம் தணியவில்லை; வேகம் குறையவில்லை! நிறைய சாதிக்க வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்! அரசியல் விளையாட்டுகளை அரசியல்வாதிகளோடு நடத்துங்கள்; படைப்பாளிகளை விட்டுவிடுங்கள்!

இளையராஜா வர்ணாசிரமதர்மப்படி தலையில் பிறக்காவிடினும், இசை உலகம் அவரைத்தலையில் தாங்கி கொண்டாடிக்கொண்டிருக்கிறது!

தலையில் பிறந்தவர்களுக்கே எல்லாத் தகுதியும் என்று கூறித்திரியும் கூட்டத்தின் தலைகனத்தைத் தகர்த்து, இசைப் பேருருவாய் எழுந்து நிற்கும் அந்த இசைஞானியை - இசைப் பேரொளியை, உங்கள் அரசியல் ஆதாயத்துக்குப் பரப்புரை நடத்திடப் பயன்படுத்தாதீர்கள்; அவரை விட்டு விடுங்கள்!

ஆம்; அவர் ஒரு படைப்பாளி! அவர் சிந்தனையோட்டத்தைச் சிதறடித்து விடாதீர்கள்!

banner

Related Stories

Related Stories