அரசியல்

“தீண்டாமைக்கு எதிராக சமரசம் காணாத போராட்டம் நடத்திய அம்பேத்கர் புகழ் வாழ்க” : பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

அடித்தட்டு மக்களின் விடுதலைக்காக தம் வாழ் நாளையே அர்ப்பணித்த அற்புதப்பிறவி அண்ணல் அம்பேத்கர் என்றால் அது மிகையல்ல.

“தீண்டாமைக்கு எதிராக சமரசம் காணாத போராட்டம் நடத்திய அம்பேத்கர் புகழ் வாழ்க” : பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!
Drawing : Gva
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் முடிவடைந்து விட்டது. தமிழகத்திற்கான விடியல் வருகிறமே மாதம் 2ஆம் தேதி தெரிந்துவிடும். அது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆம்; கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக மக்க ளுக்கு விடிவிளக்காக தலைவர் தளபதி திகழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.

எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த ஓராண்டாக காலையில் தெற்கே, மாலையில் வடக்கே, மதியம் கிழக்கு என்றும் மேற்கு என்றும் திசைகள் தோறும் சுற்றிச்சுழன்று மூலை முடுக்கெல்லாம் சென்று, அடிமை ஆட்சியை - தமிழகத்தின் லட்சியத்தை அடமானம் வைத்த ஆட்சியை - எப்படியாவது நீக்கி, பாரம்பரியத் தமிழர்களின் மரியாதையை காப்பாற்றிட, அடித்தொண்டையில் உரத்த குரலில் பேசிய, தளபதியைப் பார்த்து, தமிழகம் மட்டுமல்ல, தமிழர்கள் வாழும் அத்துணை பகுதி வாழ் மக்களும் பெருமையாகவே கருதுகிறார்கள்.

தமிழகத்தின் அடிமைத்தனத்தை மீட்க, அயராதுபாடுபட்ட, நம் அன்புத் தலைவர் தளபதியை எண்ணும் போது, இன்றைக்கு 130 ஆண்டுகளுக்கு முன்னர் இதேநாளில் (14.4.1891) மராட்டிய மாநிலத்தில் வந்துதித்த பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் நம் நினைவிற்கு வருவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

நாட்டு விடுதலைக்காக, மகாத்மா காந்தி முன்னின்று பாடுபட்டார் என்றால், அடித்தட்டு மக்களின் விடுதலைக்காக, அவர்களும் சமுதாயத்தில் மற்றவர்களோடு உற்றவர்களாய் உலவவேண்டும் என்பதற்காக, தம் வாழ் நாளையே அர்ப்பணித்த அற்புதப்பிறவி அண்ணல் அம்பேத்கர் என்றால் அது மிகையல்ல. இந்திய நாட்டின் விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சர், உயர்கல்வி பெற அமெரிக்கா சென்ற முதலாவது இந்தியர், பட்டியல் இன மக்களுக்காக தனியாக அவர்களின் முன்னேற்றத்திற்காக கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.

“தீண்டாமைக்கு எதிராக சமரசம் காணாத போராட்டம் நடத்திய அம்பேத்கர் புகழ் வாழ்க” : பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

தீண்டாமை ஒழியவேண்டும் என்பதற்காக பரோடா மன்னருடன் இணைந்து போராடியவர், பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் எனச் சொல்லிக் கொண்டே போகலாம்; அத்துணைத்துறைகளிலும் வல்லுநர் என புகழப்பட்டவர், அதுமட்டுமா, ஆசிரியராக, இதழாளராக எழுத்தாளராக சமூக நீதிப் போராளியாக, புரட்சியாளராக, எல்லாவற்றுக்கும் மேலாக மனிதாபிமானம் மிக்க ஒருவராகத் திகழ்ந்தவர் பாபா சாகேப் அம்பேத்கர்.

இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் வரைவதற்கான மத்திய அரசின் குழுவில் தலைவராகப் பணியாற்றி உலகமே வியக்கும் வண்ணம், நாட்டின் அரசியல் சட்டத்தை வடிவமைத்த மகான் அண்ணல் அம்பேத்கர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்தக் காலத்தில் அடித்தட்டு மக்களுக்காக உழைத்தவர் என்பதால் பின்னாளில் ‘மிகச்சிறந்த இந்தியர்’ என்று தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதை அறியும்போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படியும் ஒரு மனிதரா? என்று. ஆம்! 2012ஆம் ஆண்டு வரலாற்றுத் தொலைக்காட்சியும் சி.என்.என் - ஐ.பி.என். தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய வாக்கெடுப்பில் முதலாவதாக அதிக வாக்குகள் பெற்று அறிவிக்கப்பட்டவர் நம் உயிரணையத் தலைவர்.

பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் தமது 65வது வயதிலேயே இறந்து விட்டாலும் அவரது பணிகள் இந்திய மண்ணில் பரந்து விரிந்து விதைகளாக இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் - அவர் மறைந்து 34 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு வழங்கப்பட்ட ‘பாரதரத்னா’ என்ற விருது.

அவருக்கான அந்த கௌரவத்தின் மூலம் பாரத மண்ணில் உள்ள கீழ்த்தட்டு மக்களும் பெருமைக்கு உள்ளானார்கள். ‘எனக்கான பெருமை எல்லாம், யாருக்காக நான் காலம் காலமாய் பாடுபட்டு வருகிறேனோ, அவர்களுக்கே அது பொருந்தும்’ என்று அம்பேத்கர் கூட கருத்து தெரிவித்துள்ளார் என்பதை கவனிப்பது சாலப் பொருந்தும். தலித்துகளின் விடுதலைக்காக பாடுபட்டவர். அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுத்தலைவராக திறம்படச் செயல்பட்டவர் என்பதோடு அவரது பணி நின்றுவிடவில்லை. அவரது வாழ்நாள் முழுவதுமான பணிகள் பல்வேறு பரிமாணங்கள் கொண்டவை என்பதை அவரது நீண்ட நெடிய சரித்திரத்தை படிக்கும்போது தெரிகிறது. நதிநீர் பங்கீட்டுத் திட்டங்கள், பெரிய பெரிய நீராதாரத் திட்டங்கள் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர பணி என்பதற்கான அடித்தளம் வகுத்தது என்றெல்லாம் அவரது செயல்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

“தீண்டாமைக்கு எதிராக சமரசம் காணாத போராட்டம் நடத்திய அம்பேத்கர் புகழ் வாழ்க” : பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

ஒட்டுமொத்த சமுதாய மேம்பாட்டுக்காக சிந்தித்த அண்ணல் அம்பேத்கரின் பணிகளைப் போலவே, அண்மையில் தலைவர் தளபதி மேற்கொண்ட பணிகள் நினைவுக்கு வருகிறது. தமிழகம் முழுவதும் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தி, ஆங்காங்கு உள்ள அடிப்படை பிரச்சினைகளை கேட்டறிந்து, கூடவே எழுத்து மூலமாகவும் அவைகளைப் பெற்று, தகுந்த நேரத்தில் தீர்க்க முன்னுரிமை தருவேன் என்று உறுதிமொழித்தந்த தலைவர் தளபதியை இங்கே எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது.

சென்ற இடங்களில் எல்லாம் கட்சி பேதமின்றி, சாதி பேதமின்றி, இனவேறுபாடின்றி, கோரிக்கை மனுக்களைப் பெற்று, ஆட்சிக்கு வந்தவுடன் முதல் நூறு நாட்களிலேயே அந்தக் கோரிக்கைகள் எல்லாம் தீர்த்து வைக்க நடவடிக்கை மேற்கொள்வேன் என்று உறுதிமொழி தந்த தலைவர் தளபதி, கட்சித் தலைவராக மட்டுமின்றி சமுதாயத் தலைவராகவும் தோன்றுகிறார் அல்லவா.

அண்ணல் பாபா சாகேப் அம்பேத்கரின் இந்த பிறந்தநாளில் அவரது வாழ்க்கை வரலாற்றை உற்றுப் பார்க்கும்போது, தமிழுக்காக, தமிழர்களுக்காக, தமிழ்நாட்டிற்காக தம் வாழ்நாள் முழுவதும் எப்படி எல்லாம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பாடுபட்டாரோ அவர் வழிநின்று பின்பற்றி செயலாற்றி வரும் நம் தலைவர் தளபதி நம் கண்முன்னே தெரிகிறார் என்பதும் உண்மை தானே.

அம்பேத்கர் பிறந்த மராட்டிய மாநிலத்தில் கூட எந்தவொரு கல்விக் கூடமும் கிடையாது. ஆனால், தமிழகத்தில் அண்ணல் அம்பேத்கர் பெயரில், சட்டக் கல்லூரி ஒன்றை துவக்கிய தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள், பாபா சாகேப் அவர்களை இரத்தினச் சுருக்கமாக, ‘கற்பகத்தரு’ என்று பாராட்டி புகழாரம் கூட்டியது இங்கே நினைவிற்கு வருகிறது. அம்பேத்தகர் இயக்கம் ஒன்றை துவக்கியபோது, சொன்னது என்னவென்றால், இது மக்களுக்கான இயக்கம் என்று ஒருவரியில் சொன்னார். அதில் எல்லாமுமே அடங்கி இருந்தது. அதையேதான் ஒன்றிணைவோம் வா! என்கிற பெயரில் திட்டம் ஒன்றைத் துவக்கியபோது தலைவர் தளபதி அவர்களும் சொன்னார். இது மக்களுக்கான திட்டம்; மக்களுக்குப் பணியாற்றுவதற்கான திட்டம் என்றார்.

“தீண்டாமைக்கு எதிராக சமரசம் காணாத போராட்டம் நடத்திய அம்பேத்கர் புகழ் வாழ்க” : பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

தி.மு.க அரசியலுக்கான கட்சி மட்டுமல்ல; சமுதாயத்திற்கான - நலிவடைந்தவர்களுக்கான கட்சி என்பதனை தளபதியின் அறிவிப்பு அண்ணல் அம்பேத்கரின் பணிகளை நினைவிற்கு கொண்டு வருகிறது என்றால் அது மிகையல்ல. காலம் காலமாய் கண்பார்வையில் படாத, குனிந்து, வளைந்து, நெளிந்து வாழ்ந்து வந்த கீழ்த்தட்டு மக்களுக்கு எதிராக யார் கருத்து தெரிவித்தாலும் யார் செயல்பட்டாலும் அதை உடனடியாக கண்டிக்க ஒருபோதும் தயங்காதவர் அண்ணல் அம்பேத்கர்.

அதனால்தான் இன்றைக்கு தமிழகத்தில் அடித்தட்டுமக்கள் வாழும் பகுதிகளிலெல்லாம் அவருக்கு சிலைவைத்து கும்பிடு வதை காணலாம். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரே அமைச்சர் பதவி வகித்த அண்ணல் அம்பேத்கர், சுதந்திரத்திற்குப் பின்னர் 9 ஆண்டுகளே உயிர் வாழ்ந்துள்ளார். அவ்வாறின்றி இன்னும் பல ஆண்டுகள் அவர் உயிர் வாழ்ந்திருப்பாரேயானால், இன்றைக்கு ‘தீண்டாமை’ என்ற சொல்லே அகராதியில் இல்லாமல் இருந்திருக்கும் என்று மார்தட்டிச் சொல்லலாம். வாழ்க அண்ணல் அம்பேத்கரின் புகழ்!

- க.சுந்தரம். பொதுச்செயலாளர்., கழக ஆதிதிராவிடர் நலக்குழு.

banner

Related Stories

Related Stories