அரசியல்

“அ.தி.மு.கவினரின் சுயநலத்தால் நஷ்டத்தை நோக்கிச் செல்லும் தமிழக மின் வாரியம்” - தீக்கதிர் தலையங்கம்!

15 ஆண்டுகளில் தனியாரிடம் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

“அ.தி.மு.கவினரின் சுயநலத்தால் நஷ்டத்தை நோக்கிச் செல்லும் தமிழக மின் வாரியம்” - தீக்கதிர் தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆட்சியை விட்டு மக்களால் அகற்றப்பட இருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசின் ஊழல்கள் இப்போதே வெளிச்சத்திற்கு வரத் தொடங்கி விட்டன. தமிழக மின்வாரியத்துக்கு ரூ.1,330 கோடி மதிப்புள்ள நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு என அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல் பட்டியல் நீள்கிறது.

தமிழக மின் வாரியத்துக்காக ரூ.1,330 கோடி மத்திப்பில் வெளிநாடுகளிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளியைத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கோரியது. குறிப்பிட்ட வெளிநாட்டு நிறுவனத்துக்குச் சாதகமாக இந்த ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டதை வாரியத்தின் முன்னாள் பொறியாளர் ஒருவர் அம்பலப்படுத்தியதோடு நீதிமன்றத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றார்.

2017-ஆம் ஆண்டு கோரப்பட்ட நிலக்கரி இறக்குமதி ஒப்பந்தப்புள்ளியில் ஒரு டன் நிலக்கரிக்குக் குறிப்பிட்ட டாலர் மதிப்பில் லஞ்சம் வழங்கப்பட்டதையும் விதிகளை மீறி ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டு குறுகிய காலத்தில் இறுதி செய்யப்பட்டதையும் இந்தியக் கணக்கு தணிக்கைத் துறை கண்டுபிடித்தது. இந்தோனேசியாவிலிருந்து அதிக விலைக்கு நிலக்கரியை இறக்குமதி செய்வதன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.

ஆட்சியாளர்களின் சுயநலத்தால் மின்வாரியம் தாங்க முடியாத இழப்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்த ஒப்பந்தப்புள்ளியில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுக்கால அ.தி.மு.க. ஆட்சியில் முதல் ஐந்தாண்டில் நத்தம் விஸ்வநாதன் மின்துறை அமைச்சராக இருந்தார். கடந்த 5 ஆண்டுகளாகத் தங்கமணி அமைச்சராக உள்ளார்.

மாநிலத்தில் அதிகரித்து வரும் மின் தேவையைச் சமாளிக்க புதியமின் திட்டங்களை அ.தி.மு.க. அரசு தொடங்கவில்லை. மாறாக தனியார் மின் நிறுவனங்களிடருந்து பல மடங்கு அதிக விலைக்கு மின்சாரத்தைக் கொள்முதல் செய்து வருகிறது. 2013ஆம் ஆண்டு முதல் 2028ஆம் ஆண்டு வரை 2,830 மெகாவாட் மின்சாரத்தை நீண்ட காலத்துக்குக் கொள்முதல் செய்யத் தனியார் நிறுவனங்களோடு மின்வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதற்கான கொள்முதல் விலை சந்தையில் கிடைக்கும் விலையை விட 2 மடங்கு அதிகமாகும். இதனால், 15 ஆண்டுகளில் தனியாரிடம் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஏற்கனவே செய்யப்பட்ட கொள்முதல் காரணமாக ரூ.54 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்யாவிட்டால் மேலும் ரூ.46 ஆயிரம் கோடியை தமிழக அரசு இழக்க வேண்டியிருக்கும்.

சந்தை விலையை விடக் கூடுதல் விலைக்கு மின்சாரத்தைக் கொள்முதல் செய்வது 2016-2017ஆம் ஆண்டு முதல் தொடர்கிறது. இதனால் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஊழல் முறைகேட்டிற்குப் பொறுப்பான முன்னாள் இந்நாள் அ.தி.மு.க. அமைச்சர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். நேர்மையான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

banner

Related Stories

Related Stories