அரசியல்

எம்.சாண்ட் தயாரிப்பில் ஆளுங்கட்சியினர் பல்லாயிரம் கோடி முறைகேடு... வேடிக்கை பார்க்கும் கனிமவளத்துறை!

எம்.சாண்ட் குவாரிகள் பெரும்பாலும் அமைச்சர்கள், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள், வி.ஐ.பி.க்களுக்கு வேண்டப்பட்டவர்களால் தான் நடத்தப்பட்டு வருகிறது.

எம்.சாண்ட் தயாரிப்பில்  ஆளுங்கட்சியினர் பல்லாயிரம் கோடி முறைகேடு... வேடிக்கை பார்க்கும் கனிமவளத்துறை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆற்று மணலுக்கு மாற்று. அப்படித்தான் எம்.சாண்ட் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. கருங்கல் ஜல்லி கற்களை மண்போல நொறுக்கி எடுப்பதுதான் எம்.சாண்ட். Manufactured Sand என்பதன் சுருக்கம்தான் M-Sand. ஆற்று மணலை விட உறுதியானது என்றும் சொல்லப்படுகிறது. தமிழகத்தில் எம்.சாண்ட் பயன்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது. எம்.சாண்ட் தயாரிக்கும் ஆலைகள், அண்ணா பல்கலைக்கழகத்தில் அதை ஆய்வுக்குட்படுத்தி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

ஆற்று மணலை விட விலை குறைவு என்பதால் அரசு கட்டிடம் உள்பட தமிழகத்தில் கட்டப்படும் அனைத்து கட்டிடங்களுக்கும் எம்.சாண்ட் பயன்படுத்த அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. தமிழகத்தில் எம்.சாண்ட் தயாரிப்பு குவாரிகளில் எந்த சோதனையும் நடப்பதில்லை. யாரும் ஆய்வு செய்து சான்றிதழும் கொடுப்பதில்லை. இதில் கல்குவாரி துகள்கள் நிறைந்து இருக்கிறது என்ற புகாரும் உள்ளது. இந்த புகாரை அதிகாரிகளின் ஆய்வும் கிட்டத்தட்ட உறுதி செய்கிறது.

ஆனால் உரிய நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அதிகாரிகள் கைகள் கட்டுப்பட்டுள்ளன. ஆற்று மணல் எடுப்பதற்குக் கூட அப்படித்தான். அத்தனை விதிமுறைகள். ஆனால் மூன்று அடிக்கு பதில், 60 அடிகளில் மணல் அள்ளப்பட்டது. அத்தனை விதிமுறை மீறல்களும் அப்பட்டமாகவே நடந்தன. எம்.சாண்ட் விஷயத்தில் அப்படியான விதிமீறல் நடந்து தரமற்ற எம்.சாண்ட் தயாரிப்பை கண்டு கொள்ளாமல் போனால் விபரீதமான விளைவுகள் ஏற்படக்கூடும். ஏனென்றால் தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட சுரங்கங்களும் செயல்பட்டு வருகிறது.

எம்.சாண்ட் தயாரிப்பில்  ஆளுங்கட்சியினர் பல்லாயிரம் கோடி முறைகேடு... வேடிக்கை பார்க்கும் கனிமவளத்துறை!

இதில் 1,200 எம்.சாண்ட் எனப்படும் செயற்கை மணல் உற்பத்தி செய்யும் குவாரிகள் மட்டுமே செயல்படுகிறது. மற்ற குவாரிகளில் ஜல்லி கற்கள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. குவாரிகளில் குறிப்பிட்ட அளவு ஆழம் மட்டுமே தோண்டி பாறைகளை எடுத்து, ஜல்லிக் கற்களாக உடைக்க வேண்டும். ஆனால், 300 அடிக்கு மேல் தோண்டி பாறைகளை எடுக்கின்றனர். இதனால், பெரிய மலைகள் தற்போது குன்றுகளாக மாறிவிட்டன. குன்றுகள் இருந்த பகுதிகளோ 300 அடி ஆழம் கொண்ட அதல பாதாள கிணறாக மாறிவிட்டன.

ஆனால், அரசுக்கு மிகக்குறைந்த தொகையையே சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செலுத்துகின்றன. இதனால் அரசுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. குவாரிகளில் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே பாறை கற்களை ஒப்பந்தம் எடுக்க அனுமதி உண்டு. ஆனால், அவர்கள், தங்களது இஷ்டம்போல், பாறை கற்களை வெட்டி எடுக்கின்றனர். இதைத் தடுக்கவேண்டிய கனிம வளத்துறை அதிகாரிகள், ஒப்பந்த உரிமம் எடுத்த நிறுவனங்களுடன் கைகோர்த்துக் கொண்டு முறைகேட்டில் ஈடுபடுகின்றனர்.

புறம்போக்கு நிலத்தில் இருந்த பாறைகளை ஆழமாக வெட்டி எடுத்து அவற்றை பட்டா நிலத்தில் கிடைத்தவை போல காட்டி அனுமதி பெற்று, கடத்தி வருகின்றனர். சுற்றுச்சூழல் விதிகளையும் பின்பற்றப்படுவதில்ல. குவாரிகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு, மருத்துவம், காப்பீடு உள்ளிட்ட எந்த வசதிகளையும் செய்து கொடுக்காமல், கொத்தடிமைகளைப் போல நடத்துகிறார்கள். தற்போது, எம்.சாண்ட் குவாரிகள் ஒரு கிலோ மீட்டர் இடைவெளிக்குள் இருந்தால் திறக்கக்கூடாது என்ற விதியில் தளர்த்தி மாசுகட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் இனி வருங்காலங்களில் எம்.சாண்ட் குவாரிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 500 மீட்டர் இடைவெளியில் கூட எம்.சாண்ட்குவாரிகள் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது. எம்.சாண்ட் குவாரியில் பாறைகளை அரைத்து பொடி ஆக்கும் போது அதிலிருந்து அதிகளவில் தூசு பறக்கும் என்பதாலும் அதில் சிலிகா போன்ற உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் கனிமங்கள் உள்ளது. எனவே, சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் உடல் நலத்தை பாதுகாக்கும் பொருட்டு இந்த விதிகள் உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த விதிகளில் திருத்தம் செய்வதன் மூலம் கூடுதல் குவாரிகள் அமையும் பட்சத்தில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

எம்.சாண்ட் தயாரிப்பில்  ஆளுங்கட்சியினர் பல்லாயிரம் கோடி முறைகேடு... வேடிக்கை பார்க்கும் கனிமவளத்துறை!

தற்போது தமிழகத்தில் ஆற்று மணலுக்காக மாற்றாக எம்.சாண்ட் பயன்படுத்துவதை ஊக்குவிக்க ஒரிஜினல் எம்.சாண்ட் மணல் தயாரிக்கும் குவாரியை கண்டறியும் வகையில் மதிப்பீட்டு சான்று வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று 270 குவாரிகளுக்கு மதிப்பீட்டு சான்று வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 1,200 குவாரிகள் உள்ள நிலையில், 930 குவாரிகள் மதிப்பீட்டு சான்று பெறவில்லை. இதனால், அந்த குவாரிகள் ஜல்லிக்கற்கள் தயாரிக்கப்படும் தேவையற்ற துகள்களை எம்.சாண்ட் என்ற பெயரில் விற்பனை செய்து வருவதாகவும் தெரிகிறது. இதில் கட்டப்படும் கட்டிடங்கள் இடிந்து விழ வாய்ப்புள்ளது.

தற்போது எம்.சாண்ட் குவாரிகள் அனுமதி பெற்ற குவாரிகள் பெரும்பாலும் அமைச்சர்கள், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள், வி.ஐ.பி.க்களுக்கு வேண்டப்பட்டவர்களால் தான் நடத்தப்பட்டு வருகிறது. இந்த குவாரிகளில் இருந்துதான் தற்போது அரசு கட்டுமான பணிகளுக்கு கூட எம்.சாண்ட் எனப்படும் செயற்கை மணல் வாங்க வேண்டும் என்று கட்டுமான ஒப்பந்த நிறுவனங்களுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சம்பந்தப்பட்ட குவாரி உரிமையாளர்கள் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி வருகின்றனர்.

இதற்காகவே ஆற்று மணல் குவாரிகளை திறக்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதும் நடக்கிறது. இந்த மோசடி வேலையில் 4 ஆண்டுகளாக அ.தி.மு.க அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த ஆலைகளில் பல தரம் குறைவான எம்.சாண்ட் தயாரிப்பவை என்று தெரிந்தும் நடவடிக்கை எடுக்க முடியாமல் தவிக்கிறார்கள் அதிகாரிகள். இன்னொரு முக்கியமான விஷயம் ஆற்று மணல் அள்ளுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்பதால் எம்.சாண்ட்டை மாற்றாக பார்க்க முடியாது. மலைகளை உடைத்து துகள்களாக்குவதால், வேறு விதமான சூழலியல் பாதிப்புகள் ஏற்படும். எனவே, இயற்கைக்கு திருப்பி நாம் கொடுக்க முடியாவிட்டாலும், அதை அழிக்காமல் காப்பாற்ற நடவடிக்கை எடுப்பது அரசுகளின் கடமை.

banner

Related Stories

Related Stories