அரசியல்

அ’னா ஆ’வன்னா என நீளும் நீட் கொலைகள்: விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம்; மாறுதல் நிச்சயம் வரும் - கி.வீரமணி

‘நீட்’ தேர்வினால் மாணவச் செல்வங்கள் தற்கொலை என்பது கொரோனா மரணங்களைவிடக் கொடுமையானது! உங்களுக்காகப் போராட நாங்கள் இருக்கிறோம் - மாறுதல் நிச்சயமாக வரும்!

அ’னா ஆ’வன்னா என நீளும் நீட் கொலைகள்: விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம்; மாறுதல் நிச்சயம் வரும் - கி.வீரமணி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘நீட்’ தேர்வின் கொடுமையினால் அனிதா தொடங்கி ஆதித்யா வரையில், ‘அ’னா, ‘ஆ’வன்னாவென்று வளர்ந்து கொண்டிருக்கக் கூடிய கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைப்போம். அந்த நாளை எதிர்பார்ப்போம்! மாறுதல் நிச்சயமாக வரும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு:

அன்பார்ந்த மாணவச் செல்வங்களே, அருமைப் பெற்றோர்களே, எனதருமைத் தோழர்களே, ‘நீட்’ தேர்வு என்ற பலி பீடத்தில் நேற்று (12.9.2020) வந்த செய்தி மதுரை மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா என்ற பெண்ணின் தற்கொலை. அந்தப் புண் ஆறுவதற்கு முன், மற்றொரு அதிர்ச்சியான செய்தி என்னவென்றால், தருமபுரியில் ஆதித்யா என்ற மாணவன், திருச்செங்கோட்டில் மோதிலால் என்ற மாணவன் ஆகியோர் ஒரே நாளில் ‘நீட்’ தேர்வினால் தற்கொலை செய்து கொண்டனர் என்ற செய்திதான் அது.

கொரோனா மரணங்களைவிட கொடுமையானது!

இந்தச் செய்தியினால் எவ்வளவு வேதனையடையக் கூடிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது! மருத்துவக் கல்வித் தோட்டத்திற்குச் சென்று, அங்கு பூத்து, காய்த்து, கனிகளாகி வந்து, மற்றவர்களுடைய உயிரைக் காப்பாற்றலாம் என்பதற்காகத் திட்டமிடக்கூடிய அந்த நியாயமான ஆசையையும், கனவையும் வீணாக்கிய - இந்த ‘நீட்’ தேர்வு என்ற கொடுமையான - ஒரு திணிக்கப்பட்ட சட்டத்தின் மூலமாக, எத்தகைய கோரத்தன்மை தாண்டவமாடுகிறது என்று நினைக்கின்றபொழுது, கொரோனா மரணங்களைவிட, இது கொடுமையானது! கொடுமையானது!!

அ’னா ஆ’வன்னா என நீளும் நீட் கொலைகள்: விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம்; மாறுதல் நிச்சயம் வரும் - கி.வீரமணி

ரத்தக் கண்ணீர் வடிக்கச் செய்கிறது

கொரோனா கொடுமையினால் ஏற்பட்ட மரணத்தின் சோகத்திலிருந்து நாம் மீளு வதற்கு முன்பாக, வாழவேண்டிய செல்வங்கள், வளரவேண்டிய செல்வங்கள், மருத்துவர்களாக உயரவேண்டிய செல்வங்கள் - தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிற சூழலை - அந்த அளவிற்கு ‘நீட்’ கொடுமை உருவாக்கியிருக்கிறது என்ற வேதனை - கல்வித் தோட்டத்திற்குச் செல்லவேண்டியவர்களை - கல்லறைத் தோட்டத்திற்குச் செல்லக்கூடிய நிலையை ஏற்படுத்திவிட்டார்களே என்ற துன்பம் - ரணம் எங்களுடைய இதயத்திலிருந்து ரத்தக் கண்ணீர் வடிக்கச் செய்கிறது. என்றாலும், மாணவச் செல்வங்களே, இதுபோன்ற முடிவுகளை எடுக்காதீர்கள்! துணிவோடு நின்று உங்களுக்காகப் போராட நாங்கள் இருக்கிறோம். மக்களைத் தயாரித்துக் கொண்டு போராடுவதற்கு - களங்காணுவதற்கு நாங்கள் இருக்கிறோம்.

தொடர்ந்து போராடி நுழைவுத் தேர்வை ஒழித்த இயக்கம் திராவிடர் இயக்கம்!

முந்தைய வரலாற்றை உங்களுக்குக் கொஞ்சம் நினைவூட்ட நான் கடமைப்பட்டு இருக்கிறேன். 21 ஆண்டுகாலம் நுழைவுத் தேர்வினால் அவதிப்பட்டபொழுதுகூட, தொடர்ந்து போராடி, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, அதனை மாற்றி, ஒரு தனிச் சட்டமே கொண்டு வர வைத்த இயக்கம் - திராவிடர் இயக்கமாகும்.

ஆகவே, நீங்கள் நம்பிக்கையோடு இருங் கள்! இந்தக் கொடுமைகள் நிரந்தரமல்ல - இதனை நீடிக்க விடமாட்டோம் - களம் காணுவோம். நீங்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும், விரக்தியின் விளிம்புக்குச் சென்று உங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் வாழ வேண்டியவர்கள் - வளர வேண்டியவர்கள் - நாட்டில் மருத்துவராக ஆகி உயரவேண்டியவர்கள். எனவே, உங்கள் உயிர் என்பது, எல்லோ ருடைய உயிரைவிடவும் மிகவும் முக்கியமானது.

எனவே, அன்பு மாணவச் செல்வங்களே, தயவு செய்து விரக்தியினாலோ அல்லது மன இறுக்கத்தினாலோ இதுபோன்ற முடிவிற்கு வராதீர்கள்! வராதீர்கள்!! துணிந்து போராடக்கூடிய, போர்க் குணத் தோடு மற்றவர்களுக்கு நில்லுங்கள்! நில்லுங்கள்!! வெல்லுவோம்! வெல்லுவோம்!!

உங்களை இழந்து வாடக்கூடிய அனைவருக்கும் இரங்கல் கூறக்கூடிய நிலையில் நாங்கள் இல்லை. காரணம், எங்களுக்கே அந்த இரங்கல் தேவை என்ற அளவிற்கு இந்த ‘நீட்’ தேர்வின் கொடுமை இருக்கிறது.

மாறுதல் நிச்சயமாக வரும்!

எனவேதான், ஆறுதலோடு இருங்கள். அனிதா தொடங்கி ஆதித்யா வரையில், ‘அ‘னா, ‘ஆ’வன்னாவென்று வளர்ந்து கொண்டிருக்கக் கூடிய கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

அந்த நாளை எதிர்பார்ப்போம்! மாறுதல் நிச்சயமாக வரும்! இரவு எப்போதும் நீடிப்பதில்லை - விடியல் நிச்சயம் உண்டு! நம்பிக்கையோடு இருங்கள், மாணவச் செல்வங்களே!” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories