
சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று (ஜன.18) சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா - 2026 நிறைவு விழா நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலக்கிய படைப்பாளிகள் உச்சி முகரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் தெரிவித்தது பின்வருமாறு,
“சில நாட்களுக்கு முன்பு, மனதுக்கு நெருடலாக ஒரு செய்தி தலைநகர் தில்லியில் இருந்து வந்தது.
2025-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்பட இருந்த நிலையில், ஒன்றிய அரசின் கலாச்சாரத் துறை தலையீட்டால், விருது அறிவிக்கும் நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டிருக்கிறது.
இனி, அது நடக்குமா? என்றும் தெரியவில்லை. கலை இலக்கிய விருதுகளில் கூட அரசியல் குறுக்கீடுகள் செய்வது ஆபத்தானது. இப்படி ஒரு சூழலில், தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான, உரிய எதிர்வினையை ஆற்றவேண்டும் என்று, பல்வேறு எழுத்தாளர்களும், கலை இலக்கிய அமைப்புகளைச் சார்ந்தோரும் என்னிடம் கோரிக்கை விடுத்திருந்தார்கள். இது, காலத்தின் தேவை என்று நாங்களும் உணர்ந்தே இருக்கிறோம்.

அதன்படி, உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கின்ற ஒரு அறிவிப்பை இந்த மேடையில் வெளியிட விரும்புகிறேன்.
“குறிப்பிட்ட இந்திய மொழிகளில் வெளியாகின்ற, தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், ஆண்டுதோறும் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும்”. இதனை அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
முதல்கட்டமாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகின்ற தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் “செம்மொழி இலக்கிய விருது” என்ற பெயரில் அந்த விருது வழங்கப்படும். விருதுடன், தலா 5 இலட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.
படைப்புகளின் இலக்கிய தரத்தையும், வெளிப்படையான தேர்வு முறையையும் உறுதி செய்யும் விதமாக புகழ்பெற்ற எழுத்தாளர்கள், விருதாளர்கள் அடங்கிய குழு ஒவ்வொரு மொழிக்கும் தனியே அமைக்கப்படும். புரவலர் பணியை தமிழ்நாடு அரசு மனநிறைவோடு மேற்கொள்ளும்.
அடுத்து அமையப்போவதும் திராவிட மாடல் 2.0 ஆட்சிதான்! அப்போது, இதைவிட பெரிய அளவில், உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இந்த பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவை நடத்துவோம்! தமிழ்நாடு முழுவதும் மேலும் பல பிரமாண்ட நூலகங்களை அறிவுக் கோயில்களாக எழுப்புவோம்! அறிவுத்தீ வளர்ப்போம்! வெல்வோம் ஒன்றாக!”






