அரசியல்

“என்.ஆர்.காங்கிரஸுக்கு இடைத்தேர்தலில் மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர்” - நாராயணசாமி பேட்டி!

என்.ஆர்.காங்கிரஸுக்கு மக்கள் மரண அடி கொடுத்துள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

 “என்.ஆர்.காங்கிரஸுக்கு இடைத்தேர்தலில் மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர்” - நாராயணசாமி பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் 7,170 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். காங் வேட்பாளர் ஜான் குமார் 14,782 வாக்குகள் பெற்றிருந்தார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேசுவரன் 7,611 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரவீனா 620 வாக்குகளும் பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. மாநிலத் தலைவர் நமச்சிவாயம், முதல்வர் நாராயணசாமி, எம்.பி.வைத்திலிங்கம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது :

“காமராஜ் நகர் தொகுதியில் இரண்டு முறை வெற்றிபெற்ற வைத்திலிங்கத்தின் பணிகளை மக்கள் அங்கீகரித்துள்ளனர். தொகுதியைப் பொறுத்தவரை மக்கள் வளர்ச்சி திட்டங்களைக் கேட்கின்றனர்.

ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து புதுச்சேரி அரசுக்குத் தொல்லை கொடுத்து வருவது, மக்கள் நலத்திட்டங்களைத் தடுத்து நிறுத்துவது, வளர்ச்சித் திட்டங்களை நிறுத்துவது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தலிலும் அது வெளிப்பட்டது. தற்போது காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலிலும் அது வெளிப்பட்டுள்ளது. எங்கள் கூட்டணிக் கட்சியினர் ஒருங்கிணைந்து ஓரணியாகத் திரண்டு தேர்தல் பணியாற்றினோம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரச்சாரமும் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது.

குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ஜான்குமார் வெற்றி பெறுவார் என்று எல்லோரும் நினைத்தனர். ஆனால் 3-ல் 2 பங்கு வாக்குகளை நாங்கள் பெற்றுள்ளோம். 3-ல் 1 பங்கு வாக்குகளை என்.ஆர்.காங்கிரஸ் பெற்றுள்ளது. இது எங்கள் மதச்சார்பற்ற கூட்டணிக்குக் கிடைத்த வெற்றி. காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சிக்கு மீண்டும் மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர்.

 “என்.ஆர்.காங்கிரஸுக்கு இடைத்தேர்தலில் மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர்” - நாராயணசாமி பேட்டி!

ரங்கசாமி தன்னிடம் உள்ள எம்எல்ஏக்களும், நிர்வாகிகளும் கட்சியை விட்டு சென்றுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் தன்னையும், தன் கட்சியையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஆட்சிக் கவிழ்ப்பு பற்றியே கூறி வந்தார்.

சட்டப்பேரவைக்கு வருவதில்லை, மக்கள் பிரச்னைகளைப் பேசுவது இல்லை, மக்கள் பிரச்னைகளை முன்வைத்து எந்தவிதப் போராட்டமும் செய்ததில்லை, ஆளுநர் கிரண்பேடி எங்களுக்குத் தொல்லை கொடுப்பதை அவர் எதிர்த்துக் கேட்டதில்லை.

இதை மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். அதன் வெளிப்பாடாகத்தான் மக்கள் எங்களுக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளனர். என்.ஆர் காங்கிரஸுக்கு இந்த இடைத்தேர்தலில் மரண அடி கொடுத்துள்ளனர்". எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories