அரசியல்

“21 வன்னியர்களை சுட்டுக்கொன்ற அ.தி.மு.கவிற்கு வக்காளத்தா?” - ராமதாஸை விளாசிய பொன் குமார்!

ராமதாஸ் அறிக்கைக்கு எதிர்வினையாற்றியுள்ளார் விவசாயிகள் - தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன் குமார்.

“21 வன்னியர்களை சுட்டுக்கொன்ற அ.தி.மு.கவிற்கு வக்காளத்தா?” - ராமதாஸை விளாசிய பொன் குமார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முதல்வராகிவிடலாம் என பகல் கனவு காண்பது அன்புமணி ராமதாஸ் தான் என ராமதாஸ் அறிக்கைக்கு எதிர்வினையாற்றியுள்ளார் விவசாயிகள் - தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன் குமார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :

“தி.மு.க ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் இடஒதுக்கீடு போராட்டத்தில் வீரமரணமடைந்த சமூகநீதி தியாகிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் கட்டப்படும் எனவும், முன்னாள் அமைச்சரும் வன்னியர் தலைவர்களில் ஒருவருமான ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் கட்டப்படும் எனவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் தி.மு.க தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதனை இரண்டரை கோடி வன்னியப் பெருமக்களும் வரவேற்று மகிழ்ந்துள்ளனர். அடித்தட்டு மக்களுக்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சியின் சார்பிலும் வரவேற்று இந்த அறிவிப்புகளை வெளியிட்ட தி.மு.க தலைவர் தளபதி மு.கஸ்டாலினுக்குப் பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“21 வன்னியர்களை சுட்டுக்கொன்ற அ.தி.மு.கவிற்கு வக்காளத்தா?” - ராமதாஸை விளாசிய பொன் குமார்!

அறிவிப்பை வரவேற்பது தான் அரசியல் நாகரீகம்!

தி.மு.க தலைவர் மு.கஸ்டாலின், தனது அறிக்கையில் தி.மு.க ஆட்சி காலத்தில் வன்னியர்களுக்கு செய்த பல்வேறு பணிகளைக் கூறிவிட்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எதையெல்லாம் வன்னியர்களுக்குச் செய்வோம் என்பதை உறுதியளித்துள்ளார். அதில் எந்த இடத்திலும் பாட்டள்ளி மக்கள் கட்சியையோ, டாக்டர் ராமதாஸையோ குறிப்பிடவோ விமர்சிக்கவோ இல்லை. நிலை இப்படி இருக்க மு.கஸ்டாலினின் அறிவிப்பினை டாக்டர் ராமதாஸ் அவர்கள் வரவேற்று பாராட்டி இருக்கவேண்டும். அது தான் அரசியல் நாகரீகம்.

வரவேற்க மனம் இல்லாவிட்டாலும் விமர்சித்திருக்க வேண்டிய அவசியமில்லை. பாட்டாளி மக்கள் கட்சி என்பது வன்னியர்களுக்கான கட்சி இல்லை என்று அறிவித்துவிட்டு, கட்சி பொறுப்புகளில் வன்னியர்களை ஒதுக்கி வைத்து வரும் டாக்டர் இராமதாஸ் எந்த அடிப்படையில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்?

வன்னியர்களை கறிவேப்பிலையாகப் பயன்படுத்துவது யார்?

தேர்தலுக்காகப் பயன்படுத்திக் கொண்டு, பிறகு தூக்கி எறிவதற்கு வன்னியர்கள் என்ன கறிவேப்பிலையா? என டாக்டர் ராமதாஸ் கேட்கிறார். இதுவரை வன்னியர்களுக்கு நடந்த நன்மைகள் எல்லாமே தி.மு.க ஆட்சியில் தான் என்பதை வன்னியர்கள் அறிவார்கள். எம்.ஜி.ஆர் காலம் தொடங்கி ஜெயலலிதா காலம் வரை வன்னியர்களுக்கு நடந்த ஒரே ஒரு நன்மையைக் கூற முடியுமா? உண்மையில் வன்னியர்களைக் கறிவேப்பிலையாகப் பயன்படுத்தியது டாக்டர் ராமதாஸ் தான்.

மாநிலத்தில் 20%, மத்தியில் 2 % வன்னியர்களுக்குத் தனி ஒதுக்கீடு பெற்றே தீருவேன் எனக் கூறி, வன்னியர்களை நம்ப வைத்து, சங்கம் அமைத்தீர்கள். எந்தக் காலத்திலும் அரசியலில் ஈடுபடமாட்டேன், நானோ எனது குடும்பமோ அரசியலில் எந்தப் பதவியையும் ஏற்க மாட்டோம், அப்படி நடந்தால் மூச்சந்தியில் சாட்டையால் அடியுங்கள் என்று கூறி வன்னியர்களின் உணர்ச்சிகளைத் தூண்டினீர்கள். ஆனால் சொல்லுக்குமாறாக கட்சி ஆரம்பித்தீர்கள். தங்கள் மகனை அமைச்சராக்கினீர்கள், பசையுள்ள சுகாதாரத்துறை அமைச்சராக்க மகனுக்காக முரண்டு பிடித்தீர்கள். அதற்கு தி.மு.க தலைவர் கலைஞர் தேவைப்பட்டார். தொடர்ந்து மத்தியில் அமைச்சராக இருந்தீர்கள். அப்போது மாநிலத்தில் 20 %, மத்தியில் 2 % வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு கிடைத்திட தாங்கள் எடுத்த நடவடிக்கை என்ன? யார் வன்னியர்களை கறிவேப்பிலையாகப் பயன்படுத்தியது?

21 வன்னியர்களை சுட்டுக் கொன்ற அ.தி.மு.கவிற்கு வக்காளத்தா?

1980 லிருந்து 88 வரை தனி ஒதுக்கீடு கோரி வன்னிய சங்கம் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தியது. அப்போது ஆட்சியிலிருந்த அ.தி.மு.க அரசு, போராடிய 21 வன்னியர்களைக் குருவிகளைச் சுடுவதைப் போன்ற சுட்டுக் கொன்றது. சுமார் 42 ஆயிரம் வன்னியர்கள் மீது பல்வேறு வழக்குகளைப் போட்டு நீதிமன்றங்களுக்கு அலைய வைத்தது. அ.தி.மு.க ஆட்சி முடியும் வரை இடஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

அப்படிப்பட்ட அரசின் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர், வன்னியர்களுக்குத் தனி ஒதுக்கீடு வழங்க ஒப்புக்கொண்டார் என்று டாக்டர் ராமதாஸ் கூறி அ.தி.மு.கவிற்கு வக்காளத்து வாங்குகிறார். ஆனால் அ.தி.மு.க அரசு மாறி, தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் 1989ம் ஆண்டு டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட வன்னியர் சங்க தலைவர்களை அழைத்துப் பேசி வன்னியர் உள்ளிட்ட மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 % தனி இடஒதுக்கீடு கொடுத்த கலைஞரை விமர்சனம் செய்துள்ளார்.

வன்னியர்களின் தனி ஒதுக்கீட்டிற்காக பா.ம.க போராடி வருகிறது என்பது மோசடி

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 1989ம் ஆண்டு 20% இட ஒதுக்கீடு செய்த பின்னர் அதிலிருந்து வன்னியர்களுக்குத் தனி ஒதுக்கீடு கேட்டு கடந்த 30 ஆண்டுகளாக பா.ம.க போராடி வருவதாக அப்பட்டமானப் பொய்யை டாக்டர் ராமதாஸ் அவர்கள் அள்ளி வீசியிருக்கிறார். வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியான பின்னர் இது வன்னியர்களுக்கான கட்சியில்லை என்று இன்று வரை வெளிப்படையாக இவர்கள் அறிவித்து வருவதை வன்னியர்கள் அறிவார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகத்திலும் வன்னியர்கள் ஓரம் கட்டப்பட்டு பிற சமூகத்தினருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி எந்த தேதியில்? எந்த வகையில்? வன்னியர்களுக்குத் தனி ஒதுக்கீடு வேண்டுமென கோரியது? வன்னியர்களுக்குத் தனி ஒதுக்கீடு கோரி பா.ம.க நடத்திய போராட்டங்கள் என்ன? டாக்டர் ராமதாஸ் விளக்குவாரா? கூட்டங்களுக்கு மஞ்சள் சட்டை அணிந்தே வரக்கூடாது என்று கூறியவர்கள் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு கோரி போராடியதாகக் கூறுவது வன்னியர்களை ஏமாற்றும் மோசடி அறிவிப்பாகும்.

“21 வன்னியர்களை சுட்டுக்கொன்ற அ.தி.மு.கவிற்கு வக்காளத்தா?” - ராமதாஸை விளாசிய பொன் குமார்!

1996ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த பேராசிரியர் பொற்கோ சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், ராஜ்மோகன் தமிழக காவல்துறை தலைமை இயக்குனராகவும் நியமிக்கப்பட்டனர் என்று தி.மு.க தலைவர் கூறியதற்கு, 1996க்கு முன் வன்னியர் எவரையும் தி.மு.க அரசு இப்பொறுப்புகளில் நியமிக்கவில்லை என டாக்டர் ராமதாஸ் கூறுவது வேடிக்கையானது. 1980ம் ஆண்டு வன்னியர் சங்கத்தைத் தொடங்கியதாகக் கூறும் டாக்டர் ராமதாஸ் அவர்களை ஏன் அதற்கு முன் வன்னியர் சங்கத்தைத் தொடங்கவில்லை என்று கேட்பது அர்த்தமற்றதாகும்.

7 பாராளுமன்றத் தொகுதிகளிலும் வன்னியர்களையா நிறுத்தினீர்கள்?

திண்டிவனம் வெங்கட்ராமன் என்ற வன்னியரை முதன்முதலில் தி.மு.க தான் மத்திய அமைச்சராக்கியது என்று தி.மு.க தலைவர் கூறியதற்கு அவருக்குப் பிறகு வன்னிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையாவது அமைச்சராக்கியது உண்டா? என்று கேட்கிறார். வன்னியர்களின் உழைப்பில் கட்சி நடத்தும் தாங்கள் பா.ம.க சார்பில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவிடமிருந்து பெற்ற 7 பாராளுமன்ற தொகுதிகளிலும் வன்னியர்களையா வேட்பாளர்களாக நிறுத்தினீர்கள்? 4 இடங்களை பிற சாதியினருக்கு விற்கவில்லையா? தி.மு.கவை நோக்கிக் கேள்வி கேட்க என்ன தார்மீகம் உள்ளது?

எந்த அடிப்படையில் 2011ல் தி.மு.கவோடு பா.ம.க கூட்டணி வைத்தது?

வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க முடியாது என 30.07.2010ல் வெளிப்படையாக கலைஞர் அறிவித்தார் என்றும், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று 28.10.2010ல் வைத்த கோரிக்கையை கலைஞர் ஏற்கவில்லை என்றும் குறை கூறும் டாக்டர் ராமதாஸ் அடுத்த நான்கே மாதத்தில் அதே தி.மு.கவோடு கூட்டணி வைத்தது எந்த அடிப்படையில்? கேட்பவன் கேனையாக இருந்தால் கேப்பையில் நெய்வடிகிறது என்று கூறலாம். தனி ஒதுக்கீடு என்பது வேறு, உள் ஒதுக்கீடு என்பது வேறு. அருந்ததியர்களுக்கு, இஸ்லாமியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

“21 வன்னியர்களை சுட்டுக்கொன்ற அ.தி.மு.கவிற்கு வக்காளத்தா?” - ராமதாஸை விளாசிய பொன் குமார்!

முதல்வராகிவிடலாம் என பகல் கனவு காண்பது அன்புமணி ராமதாஸ் தான்!

2021ம்ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துவிடலாம் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கனவு கண்டு கொண்டிருப்பதாக டாக்டர் ராமதாஸ் கூறுகிறார். தி.மு.க தலைவர் கனவு காண வேண்டிய அவசியமில்லை. கட்சி வலுவாக இருக்கிறது. களம் தயாராக இருக்கிறது. கடும் உழைப்பு அவரிடம் இருக்கிறது. 2021ல் தி.மு.க வெற்றி பெறுவதையும், மு.க.ஸ்டாலின் முதலமைச்சராவதையும் டாக்டர் ராமதாஸ் அல்ல எவராலும் தடுத்திட முடியாது.

வன்னியர்களுக்கான கோரிக்கைகள் எதற்கும் போராடாமல், பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்களுக்கான கட்சியே இல்லை என்று கூறிக்கொண்டு; வன்னியர்கள் வாக்களித்து விடுவார்கள், அதனால் தமிழக முதலமைச்சராகிவிடலாம் என டாக்டர் ராமதாஸும் அவரது மகன் அன்புமணி இராமதாஸும் தான் பகல் கனவு கண்டு கொண்டு, “அன்புமணியாகிய நான்…” என முதல் கையெழுத்திட பேனாவோடு அலைந்து கொண்டிருக்கிறார்கள். டாக்டர் இராமதாஸ் கூறிய “சீனி சக்கரை சித்தப்பா... சீட்டில் எழுதி நக்கப்பா” என்ற பழமொழி யாருக்குப் பொருந்தும் என இப்போது சொல்லட்டும்.” என காட்டமாக விமர்சித்துள்ளார் பொன் குமார்.

banner

Related Stories

Related Stories