அரசியல்

“ராஜேந்திர பாலாஜிக்கு மனநிலை பாதிப்பு” - கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மனு அளிக்க முயன்ற காங்கிரஸார்!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் மனு அளிக்கச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் சமீபத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரைப் பற்றி தரக்குறைவாகப் பேசியிருந்தார். இது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வந்தனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ராஜேந்திர பாலாஜியை அரசியல் கோமாளி என விமர்சித்திருந்தார்.

காங்கிரஸ் தலைவர்கள் பற்றி ராஜேந்திர பாலாஜி தெரிவித்த கருத்துகளைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராஜேந்திர பாலாஜியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை மருத்துவர்களிடம் காங்கிரஸ் கட்சியினர், ராஜேந்திர பாலாஜிக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சிகிச்சையளிக்கும்படியும் மனு அளிக்கச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“ராஜேந்திர பாலாஜிக்கு மனநிலை பாதிப்பு” - கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மனு அளிக்க முயன்ற காங்கிரஸார்!

தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் அஸ்லாம் பாஷா, சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்குச் சென்று, “அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நடவடிக்கைகள் மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்றுள்ளது. அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து அவரை முழுமையாகச் சோதித்து தகுந்த சிகிச்சை அளிக்கவேண்டும்” என்று மருத்துவர்களிடம் மனு அளிக்க முயன்றார்.

மனநல காப்பக இயக்குநர் பூர்ணசந்திரிகா, காங்கிரஸாரின் மனுவை வாங்க மறுத்துவிட்டார். “தனிநபர் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று நாம் முடிவு செய்யமுடியாது. காவல் நிலையத்திற்கோ நீதிமன்றத்திற்கோ சென்று முறையிட்டு சிகிச்சைக்கு அனுமதி பெறலாம்” என விளக்கி அவர்களை திருப்பி அனுப்பினார்.

banner

Related Stories

Related Stories