அரசியல்

“கிரண்பேடிக்கு எதிரான உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது” : உயர்நீதிமன்றம் மறுப்பு! 

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

“கிரண்பேடிக்கு  எதிரான உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது” : உயர்நீதிமன்றம் மறுப்பு! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுச்சேரி மாநில அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடக் கூடாது என்று துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக அம்மாநில எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி மகாதேவன் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாட்டை முறியடிக்கும் வகையில் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியான துணை நிலை ஆளுநர் செயல்பட முடியாது எனக் கூறி, யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட தடை விதித்து உத்தரவிட்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யாமல் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

இதனையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது உள்துறை அமைச்சகம்.

இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கார்த்திகேயன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான உச்சநீதிமன்ற கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அமன் லேகி, அரசியல் சாசன பிரிவுகளையும், விதிகளையும் கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கவேண்டும் என வாதிட்டார்.

அதேசமயம், எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி, டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவின்படி, அரசு ஆவணங்களை கேட்க துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்ததாகவும் , டெல்லி உயர்நீதிமன்றத்தின் அந்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து விட்டதாகவும் வாதிட்டார்.

இதையடுத்து, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், மனுவுக்கு செப்டம்பர் 4ம் தேதிக்குள் பதிலளிக்க லட்சுமி நாரயணன், கிரண்பேடி ஆகியோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

banner

Related Stories

Related Stories